மகாபலிபுரத்தின் குட்டி ராணி!

மகாபலிபுரத்தைச் சேர்ந்த கமலியும் சரி.. கமலியின் தாய் சுகந்தியும் சரி... தங்களை குறித்து எடுக்கப்பட்ட செய்திப்படம் 2020 - ஆம் ஆண்டு "ஆஸ்கர்' விருதுக்கானப் "பரிந்துரை' பட்டியலில் இடம் பிடிக்கும்
மகாபலிபுரத்தின் குட்டி ராணி!

மகாபலிபுரத்தைச் சேர்ந்த கமலியும் சரி.. கமலியின் தாய் சுகந்தியும் சரி... தங்களை குறித்து எடுக்கப்பட்ட செய்திப்படம் 2020 - ஆம் ஆண்டு "ஆஸ்கர்' விருதுக்கானப் "பரிந்துரை' பட்டியலில் இடம் பிடிக்கும் என்று கனவிலும் கற்பனை செய்து பார்க்கவில்லை. ஆனால், அது நடந்து இருக்கிறது. ஆம், வெறும் 24 நிமிடங்களே ஓடும் இந்த குறும்படத்தை இயக்கியவர் சாஷா. இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர்தான், கமலியையும், அவரது குடும்ப சூழலையும் "கமலி' என்ற பெயரில் குறும்படமாக தயாரித்தவர். சென்ற மாதம் அட்லாண்டாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் "சிறந்த செய்திப்பட விருது' மற்றும் 2018-இல் நடைபெற்ற மும்பை சர்வதேச குறும்பட விழாவில் "சிறந்த இயக்குநருக்கான' விருது என இரண்டு விருதுகளை இந்த குறும்படம் சாஷாவுக்கு பெற்றுத் தந்துள்ளது. 

காலணி ஏதும் அணியாமல் பிஞ்சு கால்களை ஸ்கேட்டிங் பலகையில் நிலை நிறுத்தி கான்கிரீட் ஸ்கேட்போர்டிங் களத்தில் மேலும் கீழுமாக வளைந்து நெளிந்து குதித்து விளையாடும் கமலியை தெரியாதவர்கள் மகாபலிபுரத்தில் யாரும் இல்லை. காரணம் , போக்குவரத்து குறைவாக உள்ள தார் ரோட்டிலும் கமலி தனது தோழமைக் கூட்டத்துடன் "ஸ்கேட் போர்டிங்' பலகையுடன் கிளம்பி விடுவது தான். சுருங்கச் சொன்னால் கமலி "மகாபலிபுரத்தின் குட்டி ராணி'. இது குறித்து கமலியின் தாய் சுகந்தி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"சாமான்ய மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எனது கணவர் பிரிந்துவிட்டார். இதனால், தனிமைத்தாயாக மகள் கமலியையும், மகன் ஹரிஷையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. அதற்காக மகாபலிபுர கடற்கரையில் குளிர்பானங்கள் மற்றும் மீன்களை பொறித்து விற்கும் கடை நடத்தி வருகிறேன். இரவு பத்து மணிக்கு தினமும் சென்னை காசிமேடு போய் மீன் வாங்கிக் கொண்டு, காலை ஆறு மணிக்கு மகாபலிபுரம் திரும்புவேன். பிறகு மீனை சுத்தம் செய்து கடைக்கு கொண்டு போய் பொரித்து விற்பேன். கடையை எனது தந்தை கவனித்துக் கொள்வார். நேரம் கிடைக்கும்போது கொஞ்ச நேரம் தூங்குவேன். பிறகு மறுபடியும் காசிமேடு பயணம். மகாபலிபுரம் பீச்சில் கடைகள் அதிகரித்துவிட்டதால் தற்போது வருமானம் குறைஞ்சு போச்சு.. எப்படியோ நாட்களை கடத்தறேன்.

கமலிக்கு ஸ்கேட்போர்டிங்கை அறிமுகம் செய்தவர் அய்ன் எட்வர்ட்ஸ் என்ற பெண்மணி. மகாபலிபுரத்தில் வாழும் வெளிநாட்டவர். சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். சனி ஞாயிறு மகாபலிபுரத்தில் உள்ள அவரது வாடகை வீட்டிற்கு வந்துவிடுவார். கமலியுடன் பொழுதைக் கழிப்பார். அவர், விளையாடுவதை பார்த்த கமலி, ஸ்கேட் போர்டிங்கை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாள். அவள் விருப்பத்திற்கு நானும் குறுக்கே நிற்கவில்லை. 
கமலி சறுக்கி விளையாடும் போது கீழே விழுந்து கைகள் கால்களில் காயம் ஏற்படும் . ஏன்... கைகள் கால்கள் முறிஞ்சு போகவும் வாய்ப்பிருக்கு... பெண் குழந்தை ஆச்சே.. ஏதாவது ஏடாகூடமா ஆனா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க... பெண் குழந்தைக்கு ஸ்கேட் போர்டிங் தேவையா.. அது ஆம்பளப் பசங்க விளையாட்டுன்னு பலரும் என்னை எச்சரிச்சாங்க. பழைய சுகந்தியின்னா அவங்க சொன்னதை அப்படியே கேட்டிருப்பேன். இப்ப யார் என்ன சொன்னாலும் பயப்படாதே என எனக்கு நானே சொல்லிக் கொள்வதோடு, "எதுக்கும் பயப்படாதேன்னு கமலியிடமும் சொல்லி வருகிறேன்."
தொடக்கத்தில் கமலி மட்டும்தான் மகாபலிபுரத்தில் ஸ்கேட் போர்டிங் செய்து கொண்டிருந்தாள். நாளடைவில் கமலி ஸ்கேட் போர்டிங் குழுவுடன் இந்தியா முழுவதும் சுற்றி வரத் தொடங்கினாள். இதை அறிந்த ஏனைய சிறுவர் சிறுமியரும் ஸ்கேட் போர்டிங் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். 
கமலிக்கு கடலில் "சர்ஃபிங்' எனப்படும் அலையில் வழுக்கி சறுக்கும் விளையாட்டும் வரும். அதிலும் கமலிக்கு நல்ல பயிற்சி உண்டு. தமிழகத்தில் "ஸ்கேட் போர்டிங்', கடலில் "சர்ஃபிங்' செய்யும் ஒரே ஆள் கமலிதான். வாழ்நாளில் நான் சொந்தமாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் கமலி இந்தச் சின்ன வயதில் சாதித்துவிட்டாள், அதை எனது சாதனையாகப் பார்க்கிறேன். 
அய்ன் எட்வர்ட்ஸுடன் பழகி வருவதால், கமலிக்கு ஆங்கிலம் நன்றாக பேசவரும். கமலிக்காக பலரிடமும் பேசி நிதி உதவி பெற்றுத் தருபவரும் அவர்தான். கமலி நான்கு வயதாக இருக்கும் போதே ஸ்கேட்டிங் செய்யக் கற்றுக் கொண்டாள். "ஹோலிஸ்டோகேட் கலெக்ட்டிவ்' அமைப்பு இந்தியாவின் பல இடங்களில் ஸ்கேட்டிங் பயில களம் அமைத்துத் தருகிறது. இந்தியா ஸ்கேட்போர்டிங் குழுமத்தைப் பொருத்தவரையில் கமலிதான் ஸ்கேட்போர்டிங் விளையாட்டில் குழந்தை வித்தகி. இதனால், இந்திய ஸ்கேட்போர்டிங் குழு எங்கு சென்றாலும் கமலி உடன் செல்கிறாள். 
கமலியின் மாமாவின் நண்பரான வேலு என்பவர்தான் கமலிக்கும், ஹரிஷுக்கும் "சர்ஃபிங்' அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தார். ஸ்கேட் போர்டிங் பலகையும் அன்பளிப்பு செய்தார். 

ஸ்கேட் போர்டிங் ஜாம்பவானான ஜெமி தாமஸ் மகாபலிபுரத்திற்கு வருகை தந்திருந்தார். இந்திய "சர்ஃபிங்' அமைப்பைச் சேர்ந்த ராம்மோகன் என்பவர் கமலியை ஜெமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். கமலியைப் பொருத்தவரையில் அது ஒரு திருப்பமாக அமைந்தது. கமலியின் ஸ்கேட் போர்டிங் திறமையைக் கண்டு உடனே தனது நாடு செல்லும் திட்டத்தை தள்ளிப் போட்டுவிட்டு புதுப்புது யுக்திகளை கமலிக்கு பயிற்றுவித்தார். 
பயிற்சியின்போது ஜெமி பிடித்த கமலியின் படத்தை, உலகின் இன்னொரு தலை சிறந்த ஸ்கேட்டிங் வீரர் டோனி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட.. ஸ்கேட் போர்டிங் உலக ஆர்வலர்களின் கவனங்கள் கமலி மேல் குவிந்தது. 
சாஷா, இங்கிலாந்தைச் சேர்ந்த வைல்ட் பீஸ்ட்ஸ் (Wild  Beasts) இசைக் குழுவிற்காக "ஆல்ஃபா ஃபீமேல்' (Alpha  Female) ஆல்பம் தயாரிப்பிற்காக இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் ஸ்கேட்டிங் செய்யும் பெண்களை சேலையில் ஸ்கேட் போர்டிங் செய்யச் சொல்லி ஆல்பம் தயாரித்தார். வெறுங்காலில் ஸ்கேட் போர்டிங் பலகையில் நின்று ஸ்கேட்டிங் செய்யும் கமலி குறித்து கேள்விப்பட்டு கமலியையும் அந்த ஆல்பத்தில் வெறுங்கால்களுடன் நடிக்க வைத்தார். காலணி வாங்க அப்ப வசதியில்லை. ஆல்பம் படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்று வந்தோம். அப்படித்தான் சாஷா எங்களுக்கு அறிமுகமானார். அப்போது கமலிக்கு வயது ஆறு . கமலிக்காக நான் தினமும் அல்லாடுவதை பார்த்துவிட்டு குறும்படமாக தயாரிக்கிறேன் என்றார். 2017-இல் சாஷா குழுவினர் மகாபலிபுரம் வந்திருந்து ஆறு வாரம் தங்கியிருந்து "கமலி' படப்பிடிப்பை முடித்தனர். சாஷாவுடன் எங்கள் பந்தம் இன்னும் தொடர்கிறது.
- பிஸ்மி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com