தேவிகாராணி வாழ்க்கை படமாகிறது!

இந்திய சினிமாவின் முதல் கதாநாயகியான தேவிகா ராணியின் வரலாற்றை நடிகையும், இயக்குநருமான லில்லிடே துபே நாடகமாக மேடையேற்றினார்.
தேவிகாராணி வாழ்க்கை படமாகிறது!

இந்திய சினிமாவின் முதல் கதாநாயகியான தேவிகா ராணியின் வரலாற்றை நடிகையும், இயக்குநருமான லில்லிடே துபே நாடகமாக மேடையேற்றினார். இதில் தேவிகா ராணியாக நடிப்பவர் அவரது மகள் ஐரா துபே, இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த நாடகம் அண்மையில் பெங்களுரில் நடந்தபோது, தேவிகா ராணியாக நடிக்கும் ஐரா துபே, தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:
 சிறுவயதில் என்னுடைய அம்மா லில்லிடே, "ஆக்னஸ் ஆர் காட்' என்ற நாடகத்தில் நடித்தபோது, என் அப்பாவுடன் நாடகத்தை பார்க்கச் சென்றது நினைவில் இருக்கிறது. நாடகத்தில் என் அம்மாவின் பாத்திரம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் எதற்காக இப்படி வித்தியாசமாக ஆவேசமாக மேடையில் நடந்து கொள்கிறார் என்று நினைத்ததுண்டு. சிறுமியாக இருந்தபோது அடிக்கடி என்னை டெல்லியில் உள்ள காமனி ஆடிட்டோரியத்துக்கு அழைத்துச் செல்வார்கள். இன்று என் மனதில் உள்ள பசுமையான நினைவுகளுக்கு காரணமே காமனி ஆடிட்டோரியம்தான். என்னுடைய ஐந்தாவது வயதில் பள்ளியில் "ஐங்கிள்புக்' நாடகம் போட்டபோது அதில் தான் பேபி எலிபெண்ட்டாக நடித்ததும், பின்னர் ராமாயணம் நாடகத்தில் சீதா வேடத்தில் நடித்த என்னை லட்சுமணன் வேடத்தில் நடித்த சிறுவன் மேடையில் சுற்றிச் சுற்றி வந்ததும் நினைவிருக்கிறது.
 என் அம்மாவின் சகோதரி லூசின் துபே, "கிட்ஸ் வோர்ல்ட்' என்ற சிறுவர் நாடக குழுவொன்றை நடத்தி வந்தார். என் நடிப்பு திறமையை அதன் மூலம் வளர்த்துக் கொண்டேன். எங்கள் குடும்பமே அவருடன் ஒன்றியிருந்தது. டிஸ்னி கதைகளைத் தேர்வு செய்து நடிப்போம். நாடகமும், நடிப்பும் என்னுடனேயே வளர்ந்து வந்தது. புத்தகங்கள் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். தினமும் ஒரு புத்தகமாவது படித்துவிடுவேன். இது என் கற்பனையை வளர்க்க உதவியது. எங்களுடைய முதல் நாடகம் என்னுடைய அத்தை வீட்டின் பின்புறத்தில்தான் அரங்கேறியது. சிறுவயது என்பதால் பெரும்பாலும் எனக்கு விலங்குகள் வேடம்தான் கிடைக்கும். இது நான் ஒரு நடிகையாக பயிற்சி பெற உதவியதாக நினைக்கிறேன். அது மட்டுமின்றி என் அம்மாவிடமிருந்த திறமைதான் நடிப்புக்கான ஆர்வத்தைதூண்டியது.
 அவரிடம் இருந்த அளவுக்கதிகமான திறமை அவரை ஒரு கடினமான பெண்மணியாக காட்டியது. அவரது மாறுபட்ட குணம் ஒருவகையில் என்னை பாதிப்பதாகவும் இருந்தது. இதனால் என்னை குறை கூறுபவளாகவோ, நம்பிக்கையற்றவளாகவோ நினைக்க வேண்டாம். எல்லாவற்றையும் விட வாழ்க்கை மிகப் பெரியது என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஒவ்வொரு நிமிடங்களும் முக்கியம் என்பதால் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். என் தந்தையின் மரணம் என்னை நிலைகுலைய வைத்தது.
 அந்த நேரத்தில் இந்த சூழ்நிலையை அம்மா எப்படி ஏற்றுக் கொண்டார் என்பது புரிந்தது. அவரது நிர்வாகத் திறமை எனக்குள் நம்பிக்கையை விதைத்தது. என் தந்தையைப் போலவே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று தயக்கமின்றி செய்யத் தொடங்கினார். உண்மையிலேயே அவர் திறமைசாலிதான். தனி ராணுவ வீரனைப் போல் அனைத்தையும் எதிர்நின்று செய்யத் தொடங்கினார்.
 1930-களில் பிரபலமாக இருந்த தேவிகாராணி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகையாவார். நல்ல பண்புள்ள பெங்காலி குடும்ப பின்னணியைக் கொண்டவர் என்றாலும் பொருளாதார வசதியற்றவர். சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக வாழ வேண்டுமென்ற லட்சியத்துடன் வளர்ந்த அவர், என்றாவது ஒருநாள் தனக்கு புகழும், அங்கீகாரமும் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் இருந்தார். தேவிகா ராணியின் 16 வயது முதல் 36 வயது வரையிலான வாழ்க்கை பற்றியும், கணவர் மரணத்திற்குப் பின் பாம்பே டாக்கியை எப்படி நிர்வகித்தார் என்பதுதான் நாங்கள் நடத்தும் தேவிகாராணி நாடகத்தின் முக்கிய பகுதியாகும்.
 தன்னைப் போல் கல்வியறிவு பெற்ற ஒரு சிலரே திரையுலகில் இருந்த காலத்தில் இளம் வயதிலேயே கணவர் ஹிமான்ஷூ ராயை இழந்தவுடன், அவரது பாம்பே டாக்கி நிறுவனத்தை ஐந்தாண்டுகள் வெற்றிகரமாக நடத்தியபோது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியதாயிற்று.
 பின்னர் ரஷ்ய ஓவியர் ஸ்வேடோஸ்லாவ் ரோசிச் என்பவரை திருமணம் செய்து கொண்ட தேவிகா ராணி பெங்களூரில் குடியேறிய பின்னரும், கணவர் மறைவுக்குப் பின்னும் பல சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியதாயிற்று. 36 வயதிலேயே நடிப்புத் துறையை விட்டு விலகிய அவரது துணிச்சல் தான் அவரது வரலாற்றை நாங்கள் மேடை ஏற்றியதற்கு காரணமாகும். என்னுடைய கற்பனையுடன் அவரது வாழ்க்கையை இணைத்து நாடகமாக்கியதோடு, தேவிகாராணியாக நடிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
 என் அம்மாவை போன்று நானே சொந்தமாக தயாரிப்பில் ஈடுபடும் எண்ணமும் எனக்குள்ளது. இதற்காக "மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜின்னா' என்ற கதையின் உரிமையைப் பெற்றுள்ளேன். இதை நாடகமாக மட்டுமின்றி திரைப்படம் அல்லது டிவி தொடராக தயாரிக்கவும் உள்ளேன். 1920- ஆம் ஆண்டுகளில் ஜின்னாவில் ஆரம்பகால வாழ்க்கையில் இடம்பெற்ற அவரது பார்ஸி இனத்தைச் சேர்ந்த மனைவி, அவரது சிநேகிதி சரோஜினி நாயுடு ஆகியோர் வாழ்க்கையும் இதில் இடம் பெற்றுள்ளது. தேசிய உணர்வு மேலோங்கி நின்ற நேரத்தில் நடந்த கலப்புத் திருமணம், எதிர்பார்ப்புகள் போன்ற முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட இந்த வரலாற்றை நானே தயாரிக்க முடிவெடுத்திருந்தாலும் நாடகமாக்குவதுதான் என்னுடைய முக்கிய குறிக்கோளாகும்.
 இந்த ஆண்டு முழுவதும் மேலும் நான்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். இது தவிர நெட்பிளிக்ஸிற்காக "பாம்பே பேகம்ஸ்' தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். இருந்தாலும் என் வாழ்க்கையின் லட்சியமே நாடகம் தான்'' என்று கூறிமுடித்தார் ஐராதுபே


 - அ.குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com