என்.சி. வசந்தகோகிலத்தை எப்படி மறக்கலாம்?- ஜோதிர்லதா கிரிஜா

கடந்த சில ஆண்டுகளாய்த் தமிழகத்துப் பெண் இசைக்கலைஞர்களில் மும்மூர்த்திகளாய் வலம் வந்தவர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி என்பது
என்.சி. வசந்தகோகிலத்தை எப்படி மறக்கலாம்?- ஜோதிர்லதா கிரிஜா

கடந்த சில ஆண்டுகளாய்த் தமிழகத்துப் பெண் இசைக்கலைஞர்களில் மும்மூர்த்திகளாய் வலம் வந்தவர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி என்பது ரசிகர்கள் அனைவர்க்கும் தெரியும். எம்.எஸ்., டி.கே.பி., எம்.எல்.வி. என்று சுருக்கமாய் இம்மூவரும் குறிப்பிடப்படுவதும் நமக்குத் தெரியும். ஆனால், இவர்களின் காலகட்டத்தில் வாழ்ந்து பெரும் புகழ் பெற்றிருந்த என்.சி. என்று அழைக்கப்பட்ட என்.சி. வசந்தகோகிலத்தின் பெயர் ஏனோ இவர்களோடு இணைந்து நினைவுகூரப்படுவதில்லை.
 1919 - இல் பிறந்த - காமாட்சி என்று முதலில் பெயர் வைக்கப்பட்ட -அவருக்கு இது நூற்றாண்டு விழா எடுக்க வேண்டிய தருணமாகும். வசந்த கோகிலமும் நல்ல குரல் வளம் படைத்தவராகத் திகழ்ந்தார். இவரது குரலும் உச்ச ஸ்தாயியி லேயும் பிசிரடிக்காதது. இவரது குரலில் சலங்கைகளின் அதிர்வு ஊடாடி இருக்கும். அந்த லேசான அதிர்வு அவரது குரலுக்கு ஒரு தனித்தன்மையை ஈந்தது என்றே சொல்லலாம். ஹிந்தி திரைப்படப் பின்னணிப் பாடகர் தலத் முகம்மதின் குரலில் ஒலிக்கும் அதே போன்ற அதிர்வு.
 மற்ற மூவரையும் போலவே, இவரும் திரை இசையிலும் கொடிகட்டிப் பறந்தவர். எம்.எஸ். அம்மாவைப் போன்றே சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார்.
 1951- ஆம் ஆண்டு நவம்பரில் தம் முப்பத்திரண்டாம் வயதிலேயே காச நோயால் காலமான அவர் பிறந்தது கொச்சியில் உள்ள இரிஞ்சிலகுடாவில். ஆனால் சிறு வயதிலேயே தனது தந்தை சந்திரசேகர அய்யருடன் நாகப்பட்டினத்துக்குக் குடி பெயர்ந்தார். மகளின் இசையாற்றலைப் புரிந்து கொண்ட அவர் "ஜால்ரா" கோபால அய்யர் எனும் கதாகாலட்சேப இசை வல்லுநரிடம் தம் மகளைப் பயிற்சி பெறச் செய்தார்.
 நாகப்பட்டினத்தில் சம்பந்தம் செய்திருந்த பழம் பெரும் திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமண்யம் ஒருவரை மட்டுமே சந்திரசேகர அய்யருக்குத் தெரிந்திருந்தது. தமிழகத்தில் வேறு எவருடனும் அவருக்கு அறிமுகம் இல்லை. இயக்குநர் சுப்ரமணியம் வசந்த கோகிலத்தின் இசைஞானத்தால் கவரப்பட்டு ஆவன செய்ய எண்ணியிருந்தார். ஆனால் அந்த உதவிக்காக வசந்தகோகிலம் வந்த போது சுப்ரமணியம் தாம் இயக்கிக்கொண்டிருந்த திரைப்படம் தொடர்பாய்க் கல்கத்தாவுக்குச் சென்றுவிட்டிருந்தார்.
 சென்னையில் தங்க இடமின்றித் தவித்த இருவருக்கும் தற்செயலாய் அவர்களைச் சந்தித்தார் வசந்தகோகிலத்தின் சக மாணவர். அவரோடு இசை பயின்ற இளைஞர். அவருடைய தனது அறையில் தங்க வைத்து உதவினார். வசந்த கோகிலத்தை எப்படியாவது முன்னுக்குக் கொண்டு வருவதில் அவரும் பெரும் ஆர்வம் காட்டி உதவுபவராகவும் இருந்தார். அந்த இளைஞர் வசந்தகோகிலத்தின் பால் ஈர்க்கப்பட்டதால், பயந்து போன அவரது பெற்றோர் அவருக்கு உடனடியாய்த் திருமணம் செய்வித்துவிட்டனர்.

1938- இல் மியூசிக் அகாதெமி வைத்த வாய்ப்பாட்டுப் போட்டியில் வசந்தகோகிலம் முதல் பரிசு பெற்றார். விழாவுக்கு அப்போது தலைமை தாங்கியவர் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்.
 சில நாள்கள் கழித்து வசந்தகோகிலத்துக்கும் திருமணம் நடந்தேறியது. ஆனால், அவரது கணவருக்கு அவர் இசைத் துறையில் ஈடுபடுவதில் விருப்பமில்லை. அவர் வலுவான முட்டுக்கட்டையாக இருக்கவே, வசந்தகோகிலம் அவரிடமிருந்து பிரிந்து சென்றார். அதன் பின் திரைத்துறையில் சி.கே சாச்சி என்று அழைக்கப்பட்ட கே. சதாசிவம் என்பவரோடு அவர் வாழத் தொடங்கினார். கடைசி வரையில் அவர்தான் வசந்தகோகிலத்தின் பாதுகாவலராக இருந்தார்.
 தமிழிசைச் சங்கத்திலும், நெல்லை சங்கீத சபாவிலும் தொடர்ந்து கச்சேரி செய்யும் வாய்புகளை வசந்தகோகிலம் பெற்றுவரலானார். 1942 -லிருந்து 1951 வரை திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் அவர் ஆண்டுதோறும் பங்கேற்றுப் பாடினார்.
 அப்போது மதராஸ் கார்ப்பரேஷன் வசம் இருந்த ரேடியோவிலும் தொடர்ந்து பாடும் வாய்ப்புகள் வசந்த கோகிலத்தைத் தேடி வந்தன. (பின்னர்தான் ஆல் இண்டியா ரேடியோ வந்தது.)
 ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் நிறுவனம் அவருடைய பாடல்களை இசைத்தட்டுகளாய் வெளியிட்டது. கர்நாடக இசைப் புலியான டைகர் வரதாச்சாரியார் "மதுரகீதவாணி' எனும் பட்டத்தை வசந்தகோகிலத்துக்கு அளித்துப் பாராட்டினார். அவரது இயற்பெயரான காமாட்சி எப்போது வசந்தகோகிலம் ஆனது என்பது தெரியவில்லை.
 திரைப்படங்களில் பாடி நடிக்கும் வாய்ப்புகளும் வசந்த கோகிலத்துக்குக் கிடைத்தன, 1940-இல் "சந்திரகுப்த சாணக்கியா' எனும் திரைப்படத்துடன் தொடங்கிய அவரது திரையுலக வாழ்க்கை "வேணுகானன்', "கங்காவதாரம்', "ஹரிதாஸ்', "வால்மீகி', "குண்டலகேசி' ஆகியவற்றுக்குப் பின் 1950- இல் "கிருஷ்ணவிஜயம்' எனும் திரைப்படத்தோடு முடிவுற்றது. அவற்றில் சுமார் 40 பாடல்களை அவர் பாடியுள்ளார். ஹரிதாஸில், எம்.கே. தியாகராஜ பாகவதருடன் இணைந்து ஒரு டூயெட் கூடப் பாடியுள்ளார்.
 தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், கவியோகி சுத்தானந்த பாரதியார் முதலியோரின் பாடல்களை அவர் இசைத்தட்டுகளாய் அளித்துள்ளார். தேசபக்திப் பாடல்களும் அவற்றில் அடக்கம்.
 மாயே, நீதயராதா, சாரசதளநயனா, மகாலக்ஷ்மி ஜகன்மாதா, ஆகியவற்றோடு, தந்தை தாய் இருந்தால், ஏன் பள்ளிகொண்டீரய்யா, நித்திரையில் வந்து, ஆனந்த நடனம் ஆடினாள் - பராசக்தி, இந்த வரம் தருவாய், தித்திக்கும் செந்தமிழால் தேசாபிமானம் எனும், ஆடு ராட்டே, சுதந்திரக் கனவு பலித்ததடி, ஆசை கொண்டேன் வண்டே, அந்த நாள் இனி வருமோ, வருவானோ வனக்குயிலே ஆகியவற்றையும், அவரின் இனிய திரை இசைப்பாடல்களையும் இணைய தளம் யூ-டியூபில் இன்றும் நாம் கேட்டு மகிழலாம்.
 தமது உயிலில் பெண் கல்விக்காக ஒரு லட்சத்தை வசந்த கோகிலம் ஒதுக்கியிருந்தார். 1951- இல் அது மிகப் பெரிய தொகைதானே?
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com