பெற்றோரை குழந்தைகள் விரும்ப...

குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனினும், குழந்தைகளுக்கு யாரைப் பிடிக்கும், என்ன பிடிக்கும் என்பது குறித்த ஆய்வுகளை யாரும் இதுவரை முழுமையாகச் செய்யவில்லை.
பெற்றோரை குழந்தைகள் விரும்ப...

குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனினும், குழந்தைகளுக்கு யாரைப் பிடிக்கும், என்ன பிடிக்கும் என்பது குறித்த ஆய்வுகளை யாரும் இதுவரை முழுமையாகச் செய்யவில்லை. "உங்கள் குழந்தைக்கு என்ன பிடிக்கும்' என்று தாயைக் கேட்டால், குழந்தைக்குப் பிடித்த தின்பண்டங்களைக் கூறும் அளவுக்கே புரிதல் உள்ளது.
 குழந்தைப் பருவம் என்றால் எந்த வயதிலிருந்து எந்த வயது வரை என்பதற்குப் பல வரையறைகள் கூறப்படுகின்றன; பெரியவர்களை அனைத்து தேவைகளுக்கும் சார்ந்து இருப்பவர்கள்தான் குழந்தைகள் என ஒரு விளக்கம் உள்ளது.
 தங்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் அவர்களது வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல வழிகாட்டலை வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்கேற்ப வளர்ப்பது அல்லது வளைப்பதுதான் சிறந்த குழந்தை வளர்ப்பு எனச் சில பெற்றோர் தவறாகப் புரிந்து கொண்டு குழந்தை உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர்.
 குழந்தைகளை பாசத்துடன் வளர்ப்பதற்கும் செல்லம் கொடுப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு பலருக்குத் தெரிவதில்லை. அதேபோல் குழந்தைகளின் திறன்களை வளர்ப்பதற்குப் பதிலாக தங்களது ஆசைகளை அவர்கள் மீது திணிப்பதுதான் நடக்கிறது.
 குழந்தைகளுக்குப் பிடித்த எல்லாவற்றையும் செய்து கொடுப்பது என்பது எல்லா பெற்றோர்களாலும் முடியாத காரியம். ஆனால், குழந்தைகளுக்குப் பிடிக்காதவற்றைத் தவிர்ப்பது எளிதான செயல்.
 பெற்றோர் தங்களை அறியாமல் செய்யும் சில விஷயங்கள் குறித்து குழந்தை உளவியலாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். வீட்டுக்கு வரும் விருந்தினர் முன்பு "ஏபிசிடி', "ரைம்ஸ்', மாதங்களின், கிழமைகளின் பெயர்கள் கூறச் செய்வதை பெரும்பாலும் குழந்தைகள் விரும்புவதில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்குள் குழந்தைகள் நுழைந்தவுடன் வீட்டுப் பாடம் குறித்து விசாரிக்கும் பெற்றோரை குழந்தைகள் அறவே விரும்புவதில்லை. குழந்தைகளை அவர்களது சொந்த சகோதர, சகோதரியுடனோ மற்ற குழந்தைகளுடனோ ஒப்பிடுவதை வெறுக்கின்றனர். குழந்தைகள் செய்த தவறுகளை உறவினர்கள் முன் கூறும்போது அவர்கள் கூனிக்குறுகிப் போகின்றனர்.
 சனி, ஞாயிறு விடுமுறையில் அவர்களை படிக்கச் சொல்வதையும் கோடை விடுமுறையில் அவர்களை வற்புறுத்தி விருப்பமில்லாத பயிற்சிகளுக்கு அனுப்புவதையும் அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனையாக நினைக்கின்றனர். மதிப்பெண்களைத் துரத்துவதற்கு குழந்தைகள் தாங்கள் பந்தயக் குதிரை ஆக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களின் பல திறன்களை மற்றவர்களிடம் வெளிப்படுத்தச் சொல்லி பெருமை கொள்கின்றனர். இது போன்ற சில விஷயங்களைத் தவிர்த்தாலே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
 தவறு செய்வது குழந்தைகளின் இயல்பு. தவறுகளைச் சுட்டிக்காட்டி பெரிதாக்கி எதிர்மறையாகப் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. தவறுகளை மன்னித்து அவற்றைச் சரி செய்வதற்கு வழிகாட்டுதல்களை அன்பாகக் கூறி ஊக்கமூட்டு வதையே குழந்தைகள் விரும்புகின்றனர்.
 வீட்டுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ குழந்தைகள் உள்ள தனிக்குடித்தன குடும்பத்துக் குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோருடன் அதிக நேரம் செலவிடுவதையே விரும்புகின்றனர். ஆனால், குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
 தங்கள் குழந்தைகள் மீது உள்ள பாசத்தாலும் அவர்களுக்கு நல்ல வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஆசையால் பெற்றோர் குறிப்பாக, தந்தையர் இரவு - பகலாக உழைத்து பொருள் ஈட்டுவதில் குறியாக உள்ளனர். அதனால், அவர்கள் வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் நேரம் மிகக் குறைவு.
 டாக்டர் டேனியல் நெட்டில் என்பவர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சியின் முடிவில் பெற்றோருடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளின் புத்திக் கூர்மை மற்ற குழந்தைகளைவிட மிக அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார். குழந்தை வளர்ப்பில் பணத்தைச் செலவழித்து நேரத்தைப் பெற்றோர் குறைத்து விடுகின்றனர்.
 குழந்தைகள் அண்மைக் காலத்தில் விரும்பும் சூழல் என்பது தொடுதிரை செல்லிடப்பேசி, மடிக் கணினி மற்றும் தொலைக்காட்சி என்று சிறிய வட்டத்தில் முடங்கி விடுகிறது. நமக்குத் தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரி என அவர்களை இந்தப் பொருள்களுக்கு பெற்றோர் அடிமையாவதற்கு அனுமதிக்கின்றனர்.
 "பக்கத்து வீட்டுக்குச் செல்லக்கூடாது, தெருவில் விளையாடக் கூடாது, ஆடை அழுக்காகக் கூடாது, கைகளில் மணல் படக்கூடாது' போன்ற பல்வேறு நிபந்தனைகளை குழந்தைகளுக்கு விதிக்கின்றனர். இதனால், வேறு வழியின்றி அவர்கள் தொடுதிரைக்கு அடிமையாவதற்கு பெற்றோர்களே முழுக் காரணமாகி விடுகிறோம்.
 பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு கடற்கரைக்கோ, பூங்காவுக்கோ, கடைத் தெருவுக்கோ செல்வதைத்தான் குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர். தங்கள் நண்பர்களுடன் வெளிப்புற விளையாட்டு விளையாட அனுமதிக்கும் பெற்றோரை குழந்தைகள் மிகவும் நேசிக்கின்றனர்.
 கதை கேட்பது என்பது குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான விஷயம். கதை சொல்வது குடும்பத்துக்குள் பிணைப்பை அதிகப்படுத்தும். நற்பண்புகளை வளர்க்க உதவும். தாத்தா, பாட்டி இல்லாத தனிக்குடித்தன குடும்பங்களில் கதை சொல்வது என்பதே இல்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் 10 வயது வரையாவது குழந்தைகளுக்கு கதை சொல்லும் வழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசி அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள இது வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். பெற்றோரிடம் கதை கேட்டு அவர்களுடன் சுற்றுலா செல்லும் குழந்தைகள் தொடுதிரை செல்லிடப்பேசிகளுக்கு அடிமையாவதில்லை.
 பாலியல் தொந்தரவுகள், ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை தொழிலாளர் முறை, பெற்றோர் அலட்சியம், புத்தகச் சுமை, பொதுத் தேர்வு அச்சுறுத்தல், தேர்வு தோல்வி பயம், கவனிப்பற்ற சூழ்நிலை ஆகிய பிரச்னைகளில் இருந்து குழந்தைகளை விடுவித்து அவர்களின் பருவத்துக்கேற்ற குழந்தைத் தன்மையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் வகையில் அனைவரும் செயல்படுவது அவசியம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com