மரச் செக்கால் மகுடம் சூடியவர்..!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால்... அதைப் பொய்யாக்கும் வகையில் பேச்சளவில் மட்டுமல்ல
மரச் செக்கால் மகுடம் சூடியவர்..!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால்... அதைப் பொய்யாக்கும் வகையில் பேச்சளவில் மட்டுமல்ல...செயல் அளவிலும் இறங்கி சாதனை படைக்கமுடியும் என அனைவரையும் தன்பக்கம் ஈர்த்து வருகிறார் ராமநாதபுரம் சண்முகப்பிரியா. இருபத்தியெட்டு வயதே ஆன இந்த ஊட்டச்சத்து ஆலோசகர்... இப்போது இளம் தொழில் முனைவோரில் எடுத்துக்காட்டும் முன்னுதாரணமாகியுள்ளார்.
 எண்ணெய் ஆட்டும் மரச்செக்கு அமைத்து அதில் எள், கடலை மற்றும் தேங்காய் எண்ணெய் வகைகளை தயாரித்து விற்று மக்கள் நலனையும், தனது முன்னேற்றத்தையும் ஒரு சேர மேம்படுத்தி வியக்கவைத்திருக்கிறார். சண்முகப்பிரியாவை ராமநாதபுரம் பாரதிநகர் அருகேயுள்ள ஓம்சக்தி நகரில் உள்ள அவரது கடையில் சந்தித்து பேசினோம்:
 "ராமேஸ்வரத்தில் கூலித் தொழிலாளியான அப்பா, செவிலியரான தாய் என நடுத்தர குடும்பத்தில் பிறந்து திருமணத்துக்குப் பின் ராமநாதபுரத்து வாசியான அவர் கடந்த 2014- ஆம் ஆண்டு உணவியல் துறையில் எம்.ஏ.எம்.ஃபில் படித்துள்ளார். திருமணமாகி கணவர், குழந்தை என வாழ்க்கையை தொடங்கியவர். குடும்ப பொருளாதாரத்துக்காக தனியார் மருத்துவமனையில் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் ஊட்டச்சத்து நிபுணரானார்.
 நோயாளிகளுக்கு உணவை மருந்தாக்கி உடல் நலம் காக்கவேண்டும் என ஆலோசனை கூறியவரிடம், பெரும்பாலானோர் எண்ணெய் கலப்படத்தை சுட்டிக்காட்டி, நல்ல ஆயுளுடன் வாழ.. நல்ல ஆயில் (எண்ணெய்) கிடைக்கமாட்டேங்குதே என ஏக்கத்தை வெளிப்படுத்தினர்.
 நல்ல எண்ணெய்க்காக ஏங்கும் மக்களின் ஏக்கம் தீர என்ன செய்வது என யோசித்த சண்முகப்பிரியாவின் மனதில் ஏன் அந்த எண்ணெய் வகைகளை நாமே தயாரித்து தந்தால் என்ன.... என்ற யோசனை பிறந்தது. தனது ஆர்வத்தை கணவர் கார்த்திகேயனுடன் பகிர்ந்து கொள்ள. அவரும் அவருக்கு உதவிட முன் வந்தார்.
 இந்தப் பின்னணியிலேயே துணிவை துணையாக்கி தனக்கு சம்பந்தமே இல்லாத மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் இறங்கினார் சண்முகப்பிரியா. தனியார் பெட்ரோல் பங்க் பணியாளரான தனது கணவர் கார்த்திகேயனை இணையத்தில் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்க தேவையான ஆலோசனைகளை தேடவைத்தார். அதன்படியே பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த முதியவரின் ஆலோசனை கிடைத்தது.
 ஆலோசனையை செயலாக்கிட கடந்த 2017- ஆம் ஆண்டு பத்துக்கு இருபது என்ற சிறிய அளவு அறையில் வங்கியில் கடன் வாங்கி மின் மோட்டாரில் செயல்படும் மரச்செக்கை ரூ.1.85 லட்சம் செலவில் அமைத்தார். மரச்செக்கை அமைத்தவருக்கு எண்ணெய்க்கு தேவையான வித்துகளை வாங்குவது எங்கே என்ற அடுத்த கேள்வி எழுந்தது. அதையும் இணையத்தில் தேடினார். அப்போது அருப்புக்கோட்டையில் எண்ணெய்களுக்குத் தேவையான கடலை, எள் மற்றும் தேங்காய்களை வாங்கும் வழி கிடைத்தது.

எண்ணெய்களுக்கான மூலப்பொருள்களை வாங்க தொடக்கத்தில் ரூ.21 ஆயிரத்தை செலவிட்டவருக்கு 10 கிலோ மூலப்பொருள்களுக்கு 3 லிட்டர் எண்ணெய் கிடைத்தது. தேங்காயில் மட்டும் 10 கிலோவுக்கு 4 லிட்டர் எண்ணெய் கிடைத்தது. முதன்முதலில் ஒரு மாதத்தில் மரச்செக்கில் தயாரித்த கடலை எண்ணெய், நல்ல எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் அளவு 23 லிட்டரே. அவற்றையும் மொத்தம் ரூ.10 ஆயிரத்துக்கே விற்க முடிந்தது. உழைப்பு, இட வாடகை, கடை வாடகை என செலவுக்கே பற்றாத நிலையும் ஏற்பட்டது. ஆரோக்கிய எண்ணெய்க்கு ஆலோசனை கூறியபோது ஆதங்கப்பட்ட பலரும் கலப்படமற்ற எண்ணெய்யை காசு கொடுத்து வாங்க ஆர்வமுடன் முன்வராதது சண்முகப்பிரியாவுக்கு அதிர்ச்சியை அளித்தது.
 அந்த நேரத்தில் கணவரின் ஆறுதல், பெற்றோரின் தேற்றுதல், தங்கையின் உதவி ஆகியவையே அவரை சோர்ந்து போகாமல். முயற்சியைத் தொடர வைத்ததன. மரச்செக்கு எண்ணெய் தொழிலை ஆரம்பித்ததால் அவர் பழைய உணவு ஆலோசகர் பணியையும் விட்டுவிடவில்லை.
 ஆம்...தற்போது அவரது முயற்சி திருவினையாகியுள்ளது. மாதம் 63 லிட்டர் எண்ணெய் விற்பதால், வியாபாரக் கடலில் தத்தளித்தவர் தற்போது கட்டுமரம் கைக்கு கிடைத்த சந்தோஷத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.
 தனியார் உணவுப் பொருள் நிறுவனத்தில் பணியைத் தொடரும் அவர் தினமும் 3 மணி நேரத்தை மரச்செக்கு எண்ணெய் வியாபாரத்தில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
 எண்ணெய் தயாரிப்பில் கிடைக்கும் புண்ணாக்கும் நல்ல விலைக்குப் போவதாகக் கூறும் அவர், சமையல் பொடி தயாரிப்பு, இட்லிமாவு தயாரிப்பு ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளதாக பூரிப்புடன் கூறுகிறார். பாரம்பரிய சிறுதானியங்களான குதிரைவாலி, வரகு, கேப்பை, கம்பு, சாமை, தினை என நவீன கால நோய்களில் இருந்து உடல்நலம் காக்கும் உணவு மாவுகளை தயாரித்தும் விற்றுவருகிறார். தொழிலில் வெற்றி பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ள அவரை ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் நடத்தும் புதிய தொழில் முனைவோர் கூட்டங்களில் நம்பிக்கை உரையாற்றும் இளம் தொழில் முனைவோராக அடையாளப்படுத்துகின்றனர்.
 அந்த அளவுக்கு சண்முகப்பிரியா மரச்செக்கு தொழிலில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கும் நிலையை எட்டிப்பிடித்து ஏறுமுகம் கண்டுள்ளார்.
 கட்டுரை,
 படம் -
 வ.ஜெயபாண்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com