சமையல்! சமையல்! (27/11/2019)

சில்லி பிரெட், பிரெட் - 65, பிரெட் ரோல், பிரெட் வடை 

சில்லி பிரெட் 

தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் –- 10, தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி, சிவப்பு கேசரி கலர் - சிறிது, கொத்துமல்லித் தழை - சிறிது, எலுமிச்சைச்சாறு- சிறிதளவு, கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி, வெங்காயம் - ஒரு கிண்ணம் (பொடியாக நறுக்கியது), தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் - 3, மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி, நெய் - ஒரு தேக்கரண்டி, எண்ணெய் - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பிரெட்டை எடுத்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறியப் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளிச் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வறுத்த பிரெட் துண்டுகள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். பரிமாறும் முன் கொத்துமல்லித் தழை, எலுமிச்சைச்சாறு, சிறிது வெங்காயம் சேர்க்கவும். சுவையான, காரமான சில்லி பிரெட் தயார். 

பிரெட் - 65 

தேவையானவை: 
பிரெட் -6
கடலை மாவு -2 தேக்கரண்டி
சோளமாவு -2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் -1தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் -1/2 தேக்கரண்டி
சிவப்பு கலர் பொடி( கேசரி பவுடர்)-தேவையான அளவு
உப்பு }தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
65 மசாலாப் பொடி -1/2 தேக்கரண்டி
செய்முறை: 
பிரெட்டை ஓரங்களில் வெட்டி எடுத்துவிட்டு விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, சோளமாவு, கரம் மசாலாத் தூள், கேசரி பவுடர், உப்பு, 65 மசாலாப் பொடி, மிளகாய்த் தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அவற்றில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் துண்டுகளை பஜ்ஜி மாவு கலவையில் தோய்த்து எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். சூடான சுவையான பிரெட் 65 ரெடி. 

பிரெட் ரோல் 

தேவையானவை:
பிரெட் -10, தக்காளி சாஸ் -2 மேஜைக்கரண்டி, ஓமப் பொடி / சேவ் - 2 மேஜைக்கரண்டி, கொத்துமல்லித் தழை }கால் கிண்ணம், வேர்க்கடலை- 2 மேஜைக்கரண்டி, பச்சைமிளகாய்- 1, எலுமிச்சைச்சாறு -2 மேஜைக்கரண்டி, உப்பு, அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி, கார்ன் ஃபிளார் மாவு -1 மேஜைக்கரண்டி, எண்ணெய் -2 மேஜைக்கரண்டி.
செய்முறை: 
பிரெட் ஓரங்களை நறுக்கி கொள்ளவும். பின் மிக்ஸியில் கொத்துமல்லித் தழை, வேர்க்கடலை , பச்சைமிளகாய், உப்பு , எலுமிச்சைச் சாறு சேர்த்து சட்னியாக அரைத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கார்ன் ஃபிளார் மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியானப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பின் நான்கு பிரெட் எடுத்து கொள்ளவும். முதலில் ஒன்றின் மேல் பகுதியில் கார்ன் ஃபிளார் பேஸ்ட் தடவி, பின் அதன் மேல் வேறு ஒரு பிரெட்டை வைத்து தக்காளி சாஸ் தடவி ஓமப் பொடி தூவவும். பின் அதன்மீது ஒரு பிரெட் வைத்து அதில் சட்னியை தடவி.. ஓமப் பொடி தூவி அதன் மேல் மற்றொரு பிரெட் துண்டில் தக்காளி சாஸ் தடவி அதை வைத்து மூடி ரோல் செய்து, உருட்டி கொள்ளவும். பின் ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி உருட்டிய ரோல் வைத்து சுற்றிலும் பொன்னிறமாக பொரித்து எடுத்து துண்டுகளாக நறுக்கி பரிமாறவும். 

பிரெட் வடை 

தேவையானவை:
பிரெட் - 5 துண்டுகள்
அரிசி மாவு - அரை கிண்ணம்
சோடா மாவு - 1சிட்டிகை
வெங்காயம் -2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லிக் தழை - சிறிது 
இஞ்சி - 1/4 துண்டு 
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
மிளகு - 5
செய்முறை: 
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், பிரெட்டில் நான்கு ஓரத்தை வெட்டி எடுத்துவிட்டு, பின்னர் அந்த பிரெட் துண்டுகளை நன்றாக மசித்து அதில் அரிசி மாவு, உப்பு , பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி, மிளகு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாக வடை மாவு பதத்திற்கு பிசையவும். பின் மெதுவடை போன்று வடிவம் செய்து எண்ணெய் காய்ந்தவுடன் பொறித்து எடுக்கவும். சுவையான பிரெட் வடை தயார்.
- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com