இந்தியாவின் பேட்மிண்டன் தங்க மங்கைகள்!

ஒரு காலத்தில் இந்தியாவில் ஆண்கள் ஆதிக்கத்திலிருந்த பேட்மிண்டன் இன்று பெண்கள் கைகளுக்கு மாறியுள்ளது.
இந்தியாவின் பேட்மிண்டன் தங்க மங்கைகள்!

இதுவரை சர்வதேச அளவில் பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவுக்காக 108 பதக்கங்களைப் பெற்றுள்ள ஐந்து தங்க மங்கைகளின் விவரம் வருமாறு:
 ஒரு காலத்தில் இந்தியாவில் ஆண்கள் ஆதிக்கத்திலிருந்த பேட்மிண்டன் இன்று பெண்கள் கைகளுக்கு மாறியுள்ளது. பிரகாஷ் படுகோன் மற்றும் புல்லல்லா கோபிசந்த் ஆகிய இருவரும் பேட்மிண்டன் விளையாட்டில் பிரபலமாக விளங்கினர். இந்நிலையில் அண்மையில் பேட்மிண்டன் வோர்ல்ட் பெடரேஷன் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற பி.வி.சிந்து சரித்திர சாதனை படைத்தது வரலாறு ஆகும்.
 இவர்களைத் தொடர்ந்து மேலும் பல இளம் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுடன் பயிற்சிப் பெறுகின்றனர். இந்த வெற்றியும், சாதனைகளும் உடனே கிடைத்ததல்ல, கிரிக்கெட் விளையாட்டில் தீவிரமாக ஆர்வம் கொண்டிருந்த இந்தியர்களின் கவனத்தை பேட்மிண்டன் பக்கம் திசை திருப்பியதற்கு ஜ்வாலா கட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் காரணமாவர்கள்.
 2010-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்போது பேட்மிண்டன் இரட்டையர் பெண்கள் பிரிவில் தங்கம் பெற்ற இந்த இரட்டையர், தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் பெற்று தொடங்கி வைத்த வெற்றி, இன்று 28 வயதான பி.வி.சிந்து உலக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது வரை தொடர்கிறது.
 இதற்கிடையில் பேட்மிண்டன் விளையாட்டில் இளம்புயலாக வந்த சாய்னா நேவால், அதே வேகத்தில் 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் பேட்மிண்டன் போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறியதும், 2009-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த போட்டியில் "சூப்பர் சீரிஸ்' டைட்டிலைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையோடு, 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் பெற்றதுடன், இந்திய பேட்மிண்டன் "அரசி' என்ற பட்டத்தையும் பெற்றார். தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு உலகின் நெ.1 என்ற சிறப்பைப் பெற்றபோதுதான் லட்சக் கணக்கான இந்தியர்களின் கவனம் பேட்மிண்டன் விளையாட்டின் பக்கம் திரும்பியது.
 சாய்னா நேவாலின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. இந்திய பேட்மிண்டனின் கடந்த கால சாதனைகளையும், ஆண்களையும் பயிற்சியில் ஈடுபடவைத்தது. மற்றொரு வீராங்கனை ஜ்வாலா கட்டாவையும் முக்கியமாக குறிப்பிட வேண்டும். ஒற்றையர் பிரிவு ஆட்டத்துடன் ஒப்பிடுகையில், இரட்டையர் பிரிவில் ஆடுபவர்களை மாற்றாந்தாய் மனோ பாவத்துடன் பார்ப்பதுண்டு. அந்த நிலைமையை மாற்றிய பெருமை ஜ்வாலா கட்டாவையே சேரும். இந்தியாவில் இரட்டையர் பிரிவில் சிறப்பாக ஆடியவர்களில் ஜ்வாலாகட்டா குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
 2010-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்குப் பின்னர் பேட்மிண்டன் மட்டுமின்றி மற்ற விளையாட்டுத் துறைகளிலும் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்தது. அதன்பின்னரே விளையாட்டுத் துறையில் மத்திய அரசு கணிசமான தொகையை செலவிடவும், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவியளிக்கவும் முன் வந்தது. முன்னர் விளையாட்டு வீரரும் "துரோணாச்சார்யா' விருது பெற்றவருமான எஸ்.எம். ஆரிப்பிடம் பயிற்சிப்பெற்ற புல்லல்லா கோபிசந்த். முன்னாள் பேட்மிண்டன் இந்திய தலைமை பயிற்சியாளர் விமல்குமார் போன்றவர்களை பயிற்சியாளர்களாக அமைத்தது. விளையாட்டுத் துறையில் தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தது. இதுவே பேட்மிண்டனில் இளம் பெண்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற உதவியது.
 உலகத்தரம் வாய்ந்த பேட்மிண்டன் அகாதெமியை அமைத்ததில் புல்லல்லா கோபிசந்த் முக்கியமானவராவார். இவர் மூலம் பல பேட்மிண்டன் சாம்பியன்கள் உருவாயினர். பயிற்சி பெறுபவர்களுக்கு ஹைதராபாத் தலைமையிடமாக மாறியது. ஜ்வாலாகட்டா, சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கோபிசந்திடம் பயிற்சிப் பெற்றவர்களாவர்.
 விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீராங்கனைகளுக்கு இதுவரை இல்லாத அளவில் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பு பொருட்கள் விளம்பரங்களுக்காக இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க முன் வந்துள்ளன. 2015-ஆம் ஆண்டு சாய்னா நேவால் உலகின் நெ.1 என்ற சிறப்பைப் பெற்றவுடன் விளையாட்டு சாதன தயாரிப்பு நிறுவனமொன்று, தங்கள் விளம்பரங்களில் நடிக்க அவரை ரூ.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
 தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு பெரிய நிறுவனமொன்று தொகையை குறிப்பிடாமல் சாய்னாவை ஒப்பந்தம் செய்தபோது, விளையாட்டு வீரர்களில் ( கிரிக்கெட்டை தவிர்த்து) அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் 5-ஆவது இடத்தை பிடித்தார். 2019-ஆம் ஆண்டு போபர்ஸ் பட்டியலின்படி உலகில் அதிகமாக சம்பாதிக்கும் பெண் வீராங்கனைகளில் பி.வி.சிந்து 13-ஆவது இடத்தைப் பிடித்தபோது, அவரது வருமானம் ரூ.40 கோடி என கணக்கிடப்பட்டது. தற்போது பேட்மிண்டன் வோர்ல்ட் பெடரேஷன் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றிருப்பதால் வருவாய் மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் குறிப்பாக பி.வி.சிந்துவை தேர்ந்தெடுப்பதற்கு என்ன காரணம்?
 ""டென்னிஸ் கோர்ட்டில் விளையாடும்போது அவர் காட்டும் ஆர்வம், திறமை மட்டுமல்ல உயரம், காமிராவுக்கு ஏற்றமுகம், பேசும் விதம், நேர்த்தியான உடைகளை அணிதல் போன்றவைகளே காரணம்'' என்று பிரபல விளம்பர ஆலோசகர் பிரகலாத் கக்கார் கூறியுள்ளார்.


சாய்னா
தங்கம்    23
வெள்ளி    10
வெண்கலம்    6


பி.வி.சிந்து
தங்கம்    11
வெள்ளி    15
வெண்கலம்    3


ஜ்வாலா கட்டா
தங்கம்    10
வெள்ளி    4
வெண்கலம்    2


அஸ்வினி  பொன்னப்பா
தங்கம்    3
வெள்ளி    7
வெண்கலம்    3


சிக்கிரெட்டி
தங்கம்    4
வெள்ளி    6
வெண்கலம்    1
 

 - பூர்ணிமா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com