சமையல்! சமையல்!

மிக்ஸ்ட் வெஜிடபிள் பான்கேக்,  ஓட்ஸ் பான்கேக், ஸ்பாஞ்ச் பான்கேக், கேரட் பர்ஃபி 

மிக்ஸ்ட் வெஜிடபிள் பான்கேக்

என்னென்ன தேவை:
 மெல்லியதாக அரிந்த கேரட், வெங்காயம்,
 குடைமிளகாய், வெள்ளரிப்பிஞ்சு எல்லாமாக சேர்த்து -1 கிண்ணம்
 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 மிளகுத் தூள் -1 தேக்கரண்டி
 மைதா மாவு -அரை கிண்ணம்
 எண்ணெய் -4 மேசைக்கரண்டி
 உப்பு - தேவைக்கு
 எப்படிச் செய்வது: அரிந்த காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மிளகுத்தூள், மைதா மாவு, இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். இதில் கால் கிண்ணம் நீர் விட்டுக் கலக்கவும். தவாவில் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவு ஊற்றி, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் தடவி ஒருபுறம் வெந்ததும் மறுபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சத்தான சுவையான இந்த மிக்ஸட் வெஜிடபிள் பான்கேக், தக்காளிச் சட்னியுடன் சேர்த்துச் சுவைக்க ஏற்றது.

ஓட்ஸ் பான்கேக்

என்னென்ன தேவை:
 ஓட்ஸ் ஒன்றரை - கிண்ணம்
 மெல்லிய அவல் - அரை கிண்ணம்
 தக்காளி, பெரிய வெங்காயம் -1
 கேரட் - பாதியளவு
 அரிந்த மல்லித்தழை -3 தேக்கரண்டி
 திக்கான மோர் -1 கிண்ணம்
 எலுமிச்சை சாறு -1 தேக்கரண்டி
 சில்லி ஃப்ளேக்ஸ் -2 தேக்கரண்டி
 சீரகம் -1 தேக்கரண்டி
 எண்ணெய் -3 மேசைக்கரண்டி
 ஈனோ சால்ட் - 1 தேக்கரண்டி
 உப்பு-தேவைக்கு
 எப்படிச் செய்வது: ஓட்ஸை மிக்ஸியில் நீர் விடாமல் அரைக்கவும். அவலை கொரகொரப்பாகப் பொடிக்கவும். ஓர் அகலமானப் பாத்திரத்தில் பொடித்த அவல், அரைத்த ஓட்ஸ், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, மல்லித்தழை, பொடியாக அரிந்த கேரட், பெரிய வெங்காயம், தக்காளி, சீரகம், மோர் இவற்றை கலந்து கொள்ளவும். அளவாக நீர் விட்டு மாவை இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்து 20 நிமிடங்கள் வைக்கவும். சமைப்பதற்கு முன்பு அந்த மாவை எடுத்து ஈனோ சால்ட் சேர்த்துக் கலந்து 3 நிமிடங்கள் கழித்து தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி ஓரங்களில் சிறிது எண்ணெய் விடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து காரச்சட்னியுடன் வைக்கவும். எலுமிச்சை சாறு மேலாகக் கலந்தும் சாப்பிடலாம்.

ஸ்பாஞ்ச் பான்கேக்

என்னென்ன தேவை:
 மைதா மாவு -1 கிண்ணம்
 லெமன் ஃபுட் கலர் - கால் தேக்கரண்டி
 தேங்காய்ப் பால் -1 கிண்ணம்
 எண்ணெய் -3 மேசைக்கரண்டி
 ஸ்டஃப் செய்ய:
 தேங்காய்த் துருவல் -1 கிண்ணம்
 துருவிய வெல்லம் -1 கிண்ணம்
 ஏலப்பொடி -1 தேக்கரண்டி
 எப்படிச் செய்வது: அடிகனமான வாணலியில் ஒரு கரண்டி நீர் விட்டு வெல்லம், தேங்காய்த் துருவல் ஏலப்பொடி மூன்றையும் சேர்த்துக் கிளறி எல்லாம் சேர்த்து வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,தேங்காய்பால், லெமன் ஃபுட்கலர் மூன்றையும் சேர்த்து தோசை மாவைவிட சற்று தளர்வாகக் கரைக்கவும். ஒரு தவாவில் லேசாக எண்ணெய்த் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். ஒரு புறம் வெந்ததும் எடுத்து, 2 தேக்கரண்டி தேங்காய் ஸ்டஃப்பிங் கை வைத்து சுருட்டவும்.

கேரட் பர்ஃபி

என்னென்ன தேவை:
 கேரட் துருவல், தேங்காய்த் துருவல் -
 தலா 1 கிண்ணம்
 ஏலக்காய்ப் பொடி- 1 சிட்டிகை
 செர்ரி - அலங்கரிக்க தேவையான அளவு
 கண்டென்ஸ்டு மில்க் - அரை கிண்ணம்
 வறுத்த முந்திரி, பாதாம் பொடி தலா -
 1 மேசைக்கரண்டி
 நெய்-தேவைக்கேற்ப
 எப்படிச் செய்வது: வாணலியில் நெய் விட்டு சூடானதும் கேரட் துருவல், தேங்காய்த் துருவல் போட்டு வதக்கவும்.
 பிறகு கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கிளறவும். சிறிது நெய், ஏலக்காய்ப் பொடி, முந்திரி, பாதாம் பொடி சேர்த்து வதக்கி, எல்லாம் வெந்து சுருளாக வந்ததும் அடுப்பை நிறுத்தவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, விருப்பமான வடிவத்தில் துண்டு போடவும். குக்கீஸ் கட்டரால் வைத்து அழுத்தி எடுக்கவும். அதன் மேலே செர்ரிப் பழம் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
 - ஜோ.ஜெயக்குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com