சாப்பிடவில்லையா? விட்டுவிடாதீர்கள்!

உங்கள் குழந்தை உணவை சரிவர சாப்பிடவில்லை என்றால், ரத்தசோகை நோய் இருக்கிறதா? என்று பரிசோதித்து உடனடி தீர்வு காணவேண்டும்.
சாப்பிடவில்லையா? விட்டுவிடாதீர்கள்!

உங்கள் குழந்தை உணவை சரிவர சாப்பிடவில்லை என்றால், ரத்தசோகை நோய் இருக்கிறதா? என்று பரிசோதித்து உடனடி தீர்வு காணவேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் அளவீடுகளின்படி ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் அளவானது 6 முதல் 59 மாதங்கள் வரை உள்ள குழந்தையின் ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 11 கிராமுக்கு குறைவாகவும், 5 முதல் 15 வயதில் 11.5 கிராமுக்கு குறைவாகவும் 12 முதல் 14 வயதில் 12 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் அவர்களுக்கு ரத்தசோகை நோய் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ரத்தசோகை, குழந்தையின் வயது, வசிப்பிடம், உணவு முறை ஆகியவற்றை உள்ளடக்கியது என்றாலும், உணவு பற்றாக்குறையால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக அளவில் ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. நன்றாக உணவு எடுத்துக் கொள்ளும் குழந்தைக்கு மலேரியா, காசநோய், ஹெல்மின்த் எனப்படும் குடற்புழு இருந்தாலும் ரத்தசோகை நோய் வருகிறது. குடல் நோய் இருக்கும்போது, சத்துகள் உட்கிரகிக்கப்படாமல் போலிக் அமிலம் குறைபாட்டினால் இந்நோய் ஏற்படுகிறது.
கீழ்வரும் அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் காணப்பட்டால், அவர்களுக்கு ரத்தசோகை இருக்கிறதா? என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
• சோர்வு மற்றும் மயக்க நிலை
• மந்தமான உணர்வு மற்றும் பசியின்மை
• வெளிர் நிறத்துடன்கூடிய உலர்வான தோல்
• முறையற்ற இதயத்துடிப்பு
• மூச்சு விடுவதில் சிரமம்
• தலைவலி மற்றும் நெஞ்சுவலி
• ஈரப்பதத்துடன் கை கால்கள் இருத்தல்
• உடல்வலி
• நீண்ட நேரம் உட்காரும்போது கைகால்கள் மரத்துப்போதல்
• கால்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி ரத்தசோகை இல்லாத நிலையிலும், குழந்தைகள் உணவை வெறுக்கிறார்கள் என்றால், அதற்கு கீழே குறிப்பிட்டது போன்று ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். அதை தெரிந்துகொண்டு சரி செய்வது பெற்றோர் அல்லது உணவூட்டும் தாயின் பொறுப்பாகும்.
• விளையாட்டிலேயே அதிக கவனம் கொண்டு, சாப்பிடாமல் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருக்கும் குழந்தையிடம், "இவ்வாறு இருந்தால், மயக்கம் வந்துவிடும். அல்லது சோர்வடைந்து விடுவாய். சாப்பிட்டுவிட்டு விளையாடினால், மேலும் திறமையாகவும், அதிக நேரமும் விளையாட முடியும்' என்று கூறினால், குழந்தைகள் ஆர்வமடைந்து, சாப்பிடுவார்கள்.
• உடல் நிலை சரியில்லாமல், அதை உங்களிடம் கூறுவதற்கு தெரியாமலும் இருக்கலாம். அதை நீங்கள்தான் பொறுமையாக, தலை வலிக்கிறதா? வயிறு வலிக்கிறதா? எப்படி இருக்கிறது என்று பக்குவமாக கேட்டு தெரிந்து, தேவை என்றால், மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.
• வயிற்றில் கொக்கிப் புழு, நாடா புழு போன்றவை இருந்தாலும் குழந்தைக்குப் பசியும், உணவு உண்ணும் விருப்பமும் குறைவாக இருக்கும். முறையான ஆலோசனையுடன் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியம்.
• வைட்டமின்கள் அல்லது தாது உப்புகள் போன்ற நுண்ணூட்ட சத்துகள் குறைவாக இருந்தாலும் உணவின்மீது விருப்பம் இருக்காது. இதற்கு உணவியல் நிபுணரை கலந்தாலோசிப்பது உதவியாக இருக்கும்.
• உணவு உண்பதற்கு போதுமான நேரம் அளிக்காமல், குழந்தையை அவசரப்படுத்தி சாப்பிடவைக்கும்போது, குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள். போதுமான நேரம் அளித்து, நிதானமாகவும் ரசித்தும் சாப்பிட வைத்தால், சரியாக சாப்பிடுவார்கள்.
• பள்ளிப் பாடம், வகுப்பறை கெடுபிடிகள், வீட்டுப்பாடங்களை செய்யாதிருத்தல் போன்ற விஷயங்கள் குழந்தைகளுக்கு மனதளவில் அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள். பெற்றோரும் ஆசிரியரும் சேர்ந்துதான் இதற்கு முடிவு காணவேண்டும்.
• அவர்களுக்கு பிடிக்காத உணவாகவும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணவாகவும், தினமும் ஒரேமாதிரியான உணவாகவும் இருந்தாலும் குழந்தைகள் விருப்பமின்மையை தெரிவிப்பார்கள். தானியங்கள், பருப்புவகைகள், காய்கள் என்று கலந்து பல வகையான உணவுகளை, சிறிது சிறிதாகவும் ஒவ்வொன்றாகவும் அறிமுகப்படுத்துவது நல்லது.
• உணவின் தன்மை, பக்குவம், சூடு அல்லது குளிர்ச்சி போன்றவையும் குழந்தைகள் உணவை வெறுப்பதற்கு முக்கியமான காரணங்களாகும். அவர்கள் விரும்பும் பக்குவத்தில் (தேவையாக அல்லது சரியாக இருக்கும் தருவாயில்) கொடுத்துவிடுவது நல்லது.
• உணவிற்கு சிறிது நேரத்திற்கு முன் குழந்தைகள் நொறுக்கு தீனிகள் ஏதேனும் சாப்பிட்டு இருந்தால் அவர்களுக்கு பசியிருக்காது. அதை தெரிந்துகொண்டு சிறிது நேரம் கழித்து உணவு கொடுக்கலாம். அல்லது, வேதிப் பொருட்கள் சேர்த்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்பகல் அல்லது மாலை நேர நொறுக்குத் தீனியாகக் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்கலாம்.
• புதிதாக இடம் பெயர்தல், உணவு உண்ணும்போது அம்மா அல்லது அப்பா குழந்தைகளுடன் இல்லாதிருத்தல், அவர்களுடைய தம்பி அல்லது தங்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தடுத்து பெற்றோர் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்புவதற்கு முயற்சித்தல் போன்ற சில வழக்கத்திற்கு மாறான காரணங்களும் இருக்கின்றன. பெற்றோர் நிதானமாக யோசித்தால், அவற்றை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
இதில் ஏதாவது ஒருகாரணம் கட்டாயமாக இருக்கும். அதை கண்டுபிடித்து விட்டால், நீங்கள் பொறுப்பான பெற்றோரே. குழந்தையும் சரியான நேரத்தில், தேவையான உணவை சாப்பிட்டுவிடும். இருவருக்கும் மகிழ்ச்சிதானே.... ! 
- டாக்டர். ப. வண்டார்குழலி இராஜசேகர்
உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, 
காரைக்கால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com