தானம் செய்யுங்கள் - கவலைகளை தீருங்கள்!

கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மொத்த தலைமுடியையும் இழந்து தவிப்பவர்களுக்காக, தலைமுடியை அர்ப்பணிக்கும் மனம் நம்மில் எத்தனை பெண்களுக்கு வரும்?
தானம் செய்யுங்கள் - கவலைகளை தீருங்கள்!

கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மொத்த தலைமுடியையும் இழந்து தவிப்பவர்களுக்காக, தலைமுடியை அர்ப்பணிக்கும் மனம் நம்மில் எத்தனை பெண்களுக்கு வரும்?
 சென்னையைச் சேர்ந்த மாடல் அக்ஷயா நவநீதன். கேரளாவைச் சேர்ந்த பெண் காவலர் அபர்ணா போன்றவர்கள் புற்றநோயாளிகளுக்காக தங்கள் தலைமுடியை தானம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பலரையும் தானம் செய்ய வைத்திருக்கிறார்கள்.
 குறிப்பாக அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் மார்பகப் புற்றுநோய் பெண்களைப் பாதிக்கிறது. இது எந்த வயதிலும் ஏற்படும். ஆனால் பெரும்பான்மையாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து வகைப் புற்றுநோய்களில் 25-31% மார்பகப் புற்றுநோயாகும்.
 புற்றுநோய்க்கும் முடிதானம் செய்வதற்கு என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?
 புற்றுநோய் சிகிச்சைக்கு கீமோ தெரபி சிகிச்சை கொடுக்கும் போது தலையில் உள்ள முடி கொத்துக் கொத்தாக கீழே விழுந்து விடுகிறது. தலை மொட்டையாகி விடுகிறது. இந்த கஷ்டத்தை அனுபவிக்காமல் இருப்பதற்காக நோயாளிகள் சிலருக்கு முன்னதாகவே மொட்டையடித்துவிட்டு கீமோ தெரபி சிகிச்சை அளிக்கிறார்கள்.
 இவ்வாறு சிகிச்சை பெறுபவர்கள் பணிகளுக்கு செல்லும் போது தலைமுடி இல்லாமல் வெளியே செல்ல கூச்சப்படுகிறார்கள். வசதி படைத்தவர்கள் விக் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். எல்லோராலும் விக் வாங்க முடிவதில்லை. பெண்களிடமிருந்து தானமாக பெற்ற முடிகளை வைத்து விக் உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அளித்து வருகிறார்கள். இது குறித்து அக்ஷயா நவநீதன் சொல்கிறார்:
 புற்றுநோய் சிகிச்சையில் ஏற்படும் மாற்றங்களை படித்து மிகவும் மனம் வருந்தினேன். அதனால் இந்த ஆண்டு ஜனவரி மாதமே என்னுடைய தலைமுடியை தானம் கொடுக்க முடிவு செய்தேன். ஆனால் என் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கணவனை இழந்த பெண்கள் தான் மொட்டை அடித்து கொள்வது வழக்கம் என்று என்னிடம் சென்டிமெண்ட் பேசினார்கள். ஆனால் எதையும் காதில் வாங்கவில்லை. என்னுடைய தலைமுடியை தானம் செய்தேன். தலைமுடி தானம் செய்த பிறகு அழகான தோற்றத்தை இழந்துவிட்டதாக சொன்னவர்கள் அதிகம். ஆனால் நான் இது என்னுடைய மறுபிறப்பாக உணர்கிறேன். என்னுடைய தன்னம்பிக்கை அதிகமானது. வானில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னுடைய அனுபவத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டேன். என்னைப் பார்த்து பல பெண்கள் முடி தானம் செய்ய முன்வந்தது சந்தோஷமாக இருக்கிறது என்கிறார் அக்ஷயா நவநீதன்.
 சிறுவன் ஏற்படுத்திய மாற்றம்!
 கேரள மாநிலம் திருச்சூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் அபர்ணா. 46 வயதாகும் இவர் உள்ளூர் பள்ளி ஒன்றில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது 5 வயது சிறுவன் தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பை பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொண்டான். இதனை கேட்டு மனம் களங்கிய அபர்ணா உடனே தன்னுடைய தலைமுடியை தானம் செய்தார்.
 அபர்ணாசொல்கிறார்: கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு தலைமுடி உதிர்வுஎன்பது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த வலியைத் தரும். என்னுடைய ஆதரவை அவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டே நான் மொட்டையடித்துக் கொண்டு அதனை வெளிப்படுத்தினேன். என்னுடைய முடி பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக தானம் அளித்துவிட்டேன்.
 கவலையை தீர்க்க உதவுகிறது!
 சென்னையில் ஐ.டி துறையில் பணியாற்றும் பெண்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் இந்த முடி தானம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். முடிதானம் குறித்து ஐடி பெண் ஊழியர் லட்சுமி பிரான்சிஸ் கூறுகையில், "இரண்டாவது முறையாக முடி தானம் செய்கிறேன். கடந்த 2014-ஆம் ஆண்டு முதன்முறையாக முடியை தானம் செய்தேன். எனது முடி பிறரது கவலையை தீர்க்க உதவுகிறது என்பதால் இதை செய்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
 விசாகபட்டினம், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தன்னார்வலர்கள் சேகரித்து அனுப்பும் முடி பெற்று விக் தயாரிக்கப்படுகறிது. ஏற்காடு, வேலூர் போன்ற ஊர்களில் உள்ள கிராமத்துப் பெண்கள் இந்த விக்கை தயாரிக்கிறார்கள்.
 முன்பு விட பெண்களிடம் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக, உணவூட்டம் மற்றும் பிற விஷயங்களால் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன., அதிக கொழுப்பு நிறைந்த உணவு, ஆல்கஹால் உட்கொள்ளுதல், உடல் பருமன் மற்றும் புகையிலை பயன்பாடு, கதிரியக்கம் போன்ற சுற்றுச்சூழல் இந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 "குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தலைமுடி தானம் பெறுவதற்காக உண்டியல் வைத்திருக்கிறோம். மாதத்திற்கு 300 பேர் தங்கள் முடியைத்தானம் செய்து இந்த உண்டியலில் போடுகிறார்கள். தானம் பெறும் தலைமுடிகளை கொண்டு விக் தயாரிக்கப்படுகிறது. முன்பு விக்கை ஒன்றை உருவாக்குவதற்கு மட்டுமே நாலாயிரம் ரூபாய் கட்டணம் ஆனது. ஆனால் இப்போது சில சமூக சேவை அமைப்புகள் இந்த உதவியை செய்கிறார்கள். பெண்களுக்கு பெண்கள் உதவும் இந்த நோக்கம் வரவேற்கதக்கது. அதை விட பெண்கள் தங்களுக்கு புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கும் முயற்சியில் இறங்கினால் போதும்' என்கிறார் அடையார் புற்றுநோய் மருத்துவமனை உதவி பேராசிரியர் சுரேந்திரன்.
 -வனராஜன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com