39 வயதினிலே

இது என்ன! 39 வயதினிலே என்று ஒரு தலைப்பு?! "16' வயதினிலே பார்த்தாயிற்று. "36' வயதினிலேயும் பார்த்தாயிற்று. என்ன புதுமையாய் 39 வயதினிலே என்று!
39 வயதினிலே

இது என்ன! 39 வயதினிலே என்று ஒரு தலைப்பு?! "16' வயதினிலே பார்த்தாயிற்று. "36' வயதினிலேயும் பார்த்தாயிற்று. என்ன புதுமையாய் 39 வயதினிலே என்று!
 பொதுப்படியாகவும் பேச்சு வழக்காகவும் 40 வயது என்பது தானே சிறப்பு. பின் இந்த 39}க்கான தனித்துவம் தான் என்ன என்ற உங்களின் எதிர்பார்ப்பு நியாயம் தான். 40 வயதுக்கும் 39 வயதுக்கும் ஒரே ஒரு வயது வித்தியாசம் தான். மீச்சிறு விஷயத்தில் இரண்டும் வேறுபடுகிறது. ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் இருக்கிறதே அளப்பரியது!
 ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படையில் ஆயிரம் வேறுபாடுகள் உண்டு. இதில் சுவாரஸ்யமாய் முனைக்கு முனை வேறுபடுவதில் வருடா வருடம் வரும் பிறந்த நாள் முதலிடம் பிடிக்கிறது. அதிலும் வயது குறித்து அவர்கள் இருவரும் கையாளும் குணம் ரொம்பவே விசித்ரமானது.
 முதல் 10 வருடங்களில் வயது குறித்து பெரிதாக எந்த சிந்தனையும் எழுவது இல்லை. ஆனால் பதின்பருவத்துக்குள் நுழைந்தவுடனே வயது குறித்த மாயக்கனவுகள் சிறகு விரிக்க தொடங்கிவிடுகிறது இருவருக்குள்ளும். ஆனால் அதன் பிறகு பிறந்த நாள் குறித்தோ அதனால் தன் வயது கூடுவது குறித்தோ கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாதவர்கள் ஆண்கள். அதிலும் இருபது வரிசைகளில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்ற பிறகு வயது குறித்து அதுமுதல் அவர்கள் கண்டுகொள்வதேயில்லை, அரைசதம் அடித்து தலையில் அரைவட்டம் விழும் வரை. கல்யாணம் ஆனதோ தொந்தி விழுந்ததோ என இயல்பாக காலத்தை கடந்து சென்று விடுகிறார்கள்
 "பத்தொன்பதை' இழந்து "இருபது' க்குள் காலடி எடுத்து வைக்கும் பெண் பிள்ளைகள் இதில் மாறுபடுகிறார்கள். பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தாலும் ஒவ்வொரு வருடமும் தன் இளமை நழுவிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறார்கள்.
 பொதுவாக 26 வயதிலிருந்து 27 வயதுக்குள் அடி எடுத்து வைக்கும் போதோ 27 லிருந்து 28 வயதுக்குச் செல்லும் போதோ 28 லிருந்து 29 க்குச் செல்லும் போதோ பெரிதாக எதுவும் தோன்றாது. ஆனால் 29 வயதிலிருந்து 30 வயதுக்குள் நுழையும் போது இனி வயதின் இருபது வரிசையை நாம் இழந்துவிட்டோம் என்ற இனம்புரியாத கவலை "உள்ளேன் ஐயா' என கை தூக்குகிறது. இப்போது விவகாரத்துக்கு வருவோம். இருபதுகளின் வரிசையை இழந்ததற்கே இப்படி ஒரு அசூயை ஏற்படுமெனில் முப்பது வரிசையை இழக்கும் நிலை எத்தகையதாக இருக்கும்?
 இது கூட 38-லிருந்து 39- ஆவது வயதுக்குள் நுழையும் போது பெரிதாக எந்த ஒரு உணர்வும் தோன்றாது. 39லிருந்து 40 க்குள் அடி எடுத்து வைக்கும் போது தான் அத்தனை களேபரங்களும் மனதுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடும். ஏன் இந்த வயதிற்கு இத்தனை முக்கியத்துவம் எனில் 39 வயது என்பது வாழ்வின் பாதி பக்கங்களை கடந்து விட்ட நினைவை மனதுள் அலசி அலசி காயப்போட்டுக் கொண்டே இருக்கும்.
 இந்த 39 வயதை இப்படி விவரிக்கிறேன். "பெருமாள் கோவிலின் பொங்கலையும் அக்கார அடிசிலையும் வாங்கி வைத்துக் கொண்டாலும் முழுதாக மனமொன்றி உண்ண முடியாத வயது'.
 ஐயோ! மாடிப்படியெல்லாம் முன்ன மாதிரி ஏற முடியல என்று சொன்னாலும் அவமானம், சொல்லாமல் போனாலும் சங்கோஜம் என்னும் நிலை. "இன்னுமா முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளவில்லை என ஆளாளுக்கு மிரட்டும் தொனியில் கேட்கும் கேள்வியை எல்லாம் சிரித்தோ மழுப்பியோ கடந்தாக வேண்டிய கட்டாயம்'.
 "ஜெயண்ட் வீல், ப்ரேக் டான்ஸ் என தீம் பார்க்குகளில் சுற்று போகலாம் என பிள்ளைகள் அழைத்தாலும் அவற்றிற்கு பிறகான கழுத்து, முதுகு வலியை எண்ணி மன்றாடும் பிள்ளைகளிடம் வேண்டாம் என சொல்ல வைக்கும் வயது. இன்னும் சொல்லப் போனால் 39 -களில் வாழ்க்கை பாதி எழுதப்பட்ட நாவல் போல் தான். சிலருக்கு இஸ்திரி போட காத்திருக்கும் கஞ்சி ஏறிய பருத்தி புடவை. சிலருக்கோ இடைவேளையில் நிறுத்தப்படும் ஒரு திகில் படம். புயலை எதிர்நோக்கி இருக்கும் சென்னை நகரம் போல சிலர் மிக எச்சரிக்கையுடனும் பயணிக்கின்றனர் தற்போதைய காலத்தில்.
 ஆனால் இந்த வயதில் தான் பெண் தன் பெண்மையில் முழு பரிணாமத்தை எட்டுகிறாள். தன் முழு திறனையும் அவளால் வெளிப்படுத்தக் கூடிய காலமும் இதுவே. சாணக்கியன் அருளியதாக சொல்லப்படும் சாம தான பேத தண்டத்தை உபயோகிக்க சரியான முதிர்ச்சியை உருவாக்கும் வயது என்றும் சொல்லலாம். இந்த வயதினில் நம் காலை கட்டிக்கொண்டு அழும் பிள்ளைகள் இருக்கமாட்டார்கள். வளர்ந்து அவரவர் வேலையை அவரவரே பார்த்துக் கொள்ளும் நிலையில் இருப்பர். உலகத்தைப் புரிந்து கொண்டு, வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் பயணித்து, பண்பட்டு அதீத பொறுப்புணர்வுடன் களப்பணியாற்றும் காலம். இன்னும் சொல்லப்போனால் நட்பு பாராட்டலும் உறவுகளை பேணுதலும் இயல்பாய் இருக்கும் காலகட்டம் இது.
 இந்த வயதிற்கு பிறகு இன்னும் முழு உத்வேகத்துடன் இயங்க நம் மூளை நம்மை அறிவுறுத்தும். ஆனால் உடன்வர வேண்டிய உடல் சிலருக்கு அலைகழிக்கும். 35லிருந்து 45 வயது வரையான காலகட்டம் ஒரு அசாதாரண காலகட்டம். விசித்ரமான முடிச்சுகளை மனம் போட்டு போட்டு அவிழ்க்கும். வேறு வேறு முகமூடிகளை மனம் மாற்றி மாற்றி அணிந்து ரசிக்கும். சிலரோ விரக்தி விரித்த மாய வலையில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருப்பர். அதிகமான மணமுறிவு ஏற்படுவதாக கூறப்படும் காலகட்டமும் இதுதான்.
 இந்த 39 வயதினில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அங்கம், பெருவாரியானவர்கள் தம் பதின்பருவ வயது குழந்தைகளை கையாளத் துவங்கியிருப்பர். அவர்களை பக்குவமாக பராமரித்து பெற்றோர் ஸ்தானத்திலிருந்து விலகி அவர்களின் ஆகச்சிறந்த தோழி என உருமாறிக் கொள்ள வேண்டிய நேரமும் இதுதான். வளரிளம் பிள்ளைகளிடம் மட்டுமல்ல. ஒவ்வொரு உறவுகளிடத்தும் சரியான புரிதலுடன் பழகுவது நம் இருப்பை அழகாக்கும். வாழ்க்கை குறித்து நல்ல முதிர்ச்சியுடன் கையாண்டால் நம் ஆளுமை மதிக்கப்படும்.
 இந்த வயதில் சற்றேறக்குறைய சவாலாய் அமைவது கணவன் – மனைவி உறவு தான். தத்தம் உணர்வுகளுக்கும் யதார்த்தத்துக்கும் இடையே சிக்கி வாழ்க்கையையே தொலைத்துவிடும் பரிதாபங்கள் எக்கச்சக்கம் உண்டு. நேரப் பற்றாக்குறையின் பொருட்டோ, வளரிளம் பிள்ளைகளின் அருகாமை ஏற்படுத்தும் சூழ்நிலை குறித்தோ கடும் பணி நிலவரத்தினாலோ இணையிடம் பகிரும் முத்தத்தைக் கூட அவசர கதியில் கடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடும். இணையின் அயர்ச்சியை உணர வேண்டிய புரிதல் அவசியம். இன்னும் சிலருக்கோ பணியின் பொருட்டு பிரிந்திருக்க வேண்டிய காலகட்டம் இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண்ணின் மன நிலையை மிக அழகாக பிரதிபலித்துள்ள ஒரு குறுந்தொகை பாடல் இது:
 கன்று முண்ணாது கலத்தினும் படாது
 நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
 கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
 பசலை யுணீஇயர் வேண்டும்
 திதலை யல்குலென் மாமக் கவினே"
 " இப்படி கன்றும் உண்ணாது கலத்தினும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை. அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது. ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது' என்னும் இப்பாடலின் பொருள் நம் உள்ளத்தை கவர்கின்றன. ஒரு பெண்ணின் ஏக்கமும் பெருமூச்சும் நம் கண்முன்னே விரிகிறது.
 ஆனால் சிலருக்கு, அருகாமையில் இருந்தும் இல்லாத நிலை தான். "இன்னைக்கு உன் அலுவலகத்துல ஆலோசனை கூட்டம் நடக்க இருக்குல்ல. அதான் நானே எல்லாருக்காகவும் காப்பி போட்டுட்டேன்" என கணவன் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும். "நீ சிரிச்சு எத்தனை நாளாச்சி. புதுசா வந்திருக்குற பேய் படத்துக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன். வா போய் சிரிச்சிட்டு வரலாம்" என்றுச் சொல்லும் கணவனின் இந்த அன்புக்கு ஈடு ஏது? ஒரு லட்ச ரூபாய் செலவழித்து வாங்கித் தரும் தங்கநகை ஏற்படுத்தித் தராத மகிழ்ச்சியை இது தரும். "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே...!" என கொண்டாடும் ஜனகராஜை போல் எத்தனை ஆண்களால் இருந்துவிட முடியும் இரண்டு நாட்களுக்கு மேல்.
 அலுவலக நெருக்கடிகள் ஒருபுறம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காய் முன்னெடுப்புகள் மறுபுறம், வீட்டு சூழ்நிலை, உறவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்கள், முன்பு போல் முழு ஒத்துழைப்பு கொடுக்காத உடல் நிலை, பொதிமூட்டை கணக்காய் மனதில் அழுத்தம் பாரம், பறிபோன சின்ன சின்ன ஆசைகள் என மண்ணெண்ணெய்யில் ஊறப்போட்ட விறகுக் கட்டை போல பெண்களின் உணர்வுகள் சடுதியில் பற்றி எரியத் தயாராகவே இருக்கின்றன. இந்த உணர்வெழுச்சியை நேர்மறையான வழிகளில் மடைமாற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருத்தல் வேண்டும்.
 இவ்வளவு காலம் எல்லோருக்காகவும் வாழ்ந்தாயிற்று. இனி தான் என் வாழ்க்கையை நான் எனக்காக வாழப் போகிறேன் என்றாள் என் தோழி. அதை இப்படிச் சொல்லவே அவளுக்கு 39 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது அந்த வார்த்தைகளில் இருந்த வலியை என்னால் உணர முடிந்தது. ஆனால் இதே போன்ற ஒரு 39 வயதில் தான் நம் பாரத நாட்டின் இணையில்லா மாணிக்கங்களான விவேகானந்தர், பாரதியார் ஆகிய இருவரையும் நாம் இழந்துவிட்டோம். இவர்கள் எல்லாம் இந்த வயதிலேயே இப்படி சாதித்திருக்க நாம் எதை சாதித்துத் தொலைத்தோம் என்ற வெறுமை எண்ணம் விஸ்வரூபமெடுக்கும். சிலர் 15 வயதில் பிரபலமாவதும் உண்டு. சிலருக்கு 70 வயதில் தான் அந்த நிலையை எட்ட முடிகிறது.
 ஆக வாழ்வின் எந்த புள்ளியிலிருந்து நாம் தொலைந்து போவோம் என்பது யாருக்கும் நிச்சயமில்லை. 50 நாளை கடந்து நடை போடும் ஒரு "பிக் பாஸ்' வீட்டுக்குள் உலவும் மன நிலை தான் பெருவாரியானோருக்கு. யார் எந்த நேரம் வெளியேறுவார் என்பது யாருக்கும் தெரியாது.
 39 வயதில் நாம் முடங்கிப் போகவும் முடியும். ஒரு பெருங்கனவை கண்டு அதன்படி வாழவும் முடியும். புரட்டப்படாத ஒரு பழைய நூலைப் போல கிடந்து மனதெல்லாம் தூசு தட்டி நிற்காமல் அனைத்துக்கும் மூலாதாரமான அன்பை பிடித்துக் கொண்டு, செல்லும் இடமெங்கும் அவ்வன்பையே விதைப்போம். எங்கேனும் எவரேனும் அறுவடை செய்து கொள்ளட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com