என் பிருந்தாவனம்!
By - பாரததேவி | Published On : 11th September 2019 07:46 PM | Last Updated : 11th September 2019 07:46 PM | அ+அ அ- |

தங்கராசு, இருளாண்டியிடம் நானும் ஆடு மேய்க்க வரட்டுமா? என்றதற்கு இருளாண்டி சிரிக்கவும்,
""என்னடா சிரிக்கிறே?'' என்றான் தங்கராசு.
"" நீ ஒரு பெரிய விவசாயின்னு பட்டணத்துப் புள்ளய அதுவும் படிச்சபுள்ளயக் கொண்டாந்து உனக்கு கொடுத்திருக்காக, நீ ஆடு மேய்க்கறவன்னு தெரிஞ்சா அந்தப் புள்ளய உனக்கு கொடுப்பாகளா?. ஒரு புள்ளய கல்யாணம் முடிச்சி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டோமிங்கிற தெம்புல நீ ஆடு மேய்க்க வாரேங்கற, ஆனா அந்தப்புள்ள உன்னவிடுமா? அந்தப் புள்ளய பெத்தவகதேன் உன்ன விடுவாகளா? உன்ன நச்சி எடுத்துரமாட்டாக, அந்தப் புள்ளயென்ன நம்ம ஊரு பொண்ணுக கணக்கா கெடக்குன்னு நெனச்சயா? நம்ம ஊரு பொண்ணுகளச் சொல்லு, நம்ம புருஷன் ஆடுமேச்சா என்ன? காட்டுல விவசாயம் பாத்தா என்னன்னு நம்ம கூடவே அலைவாகளே.. கள எடுப்பா, நாத்து நடனுமின்னாலும் நாத்து நடுவா. இல்ல ஆடு மேய்க்கனுமின்னா நீ அம்பது ஆடு புடிச்சி விடு அவபாட்டுக்கு உன் கூடவே மேய்ப்பா. நம்ம என்ன சொன்னாலும் கேக்கவும் செய்யவும் செய்வா, ஆனா நீ பொண்ணு கட்டுன எடம் பெரிய எடம் அதனால, இந்த ஆடு மேய்க்கிற வேலை எல்லாம் உனக்கு லாய்க்குப் படாது. பேசாம படுத்து தூங்கு, நேரமும் நடுச்சாமமாயிருச்சி'' என்று சொன்ன இருளாண்டி படுத்ததுமே குறட்டைவிட ஆரம்பித்தான்.
தங்கராசுவிற்கு தூக்கமே வரவில்லை. கட்டாந்தரையில் புரண்டு, புரண்டு படுத்தான். உடம்பு வலியோடு அவன் மனசும் சேர்ந்து வலித்தது. கௌசிகாவை தன் பொண்டாட்டியாக, அவள் கழுத்தில் தாலி கட்டி கூட்டிக் கொண்டு வந்த நாளிலிருந்து நினைத்துப் பார்த்தான். ஒரு சினிமாவைப் போல் அந்தக் காட்சிகள் எல்லாமே அவனையும், அவன் வீட்டாரையும் சிறையிட்டு வைத்தது போல் தோன்றியது. கௌசிகா தன் வீட்டிற்குள் கால் வைத்ததிலிருந்து யாருமே சந்தோஷமாக இருக்கவில்லை என்ற எண்ணம் தோன்ற அவன் மனசு திடுக்கிட்டுப் போனது. வெட்ட வெளிக்காற்று சிலு, சிலுத்து வீசினாலும் அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. சட்டென்று எழுந்தான். இவன் எழுந்ததைப் பார்த்து திடுமென ஆடுகள் கலைந்து ஓடின.
""அதாருப்பா திடுக்கின்னு உங்க பாட்டுக்கு எந்திரிச்சி நின்னா ஆடுக கலயுமில்ல'' என்று கிடைக்கு காவலாக இருந்தவன் சத்தம்போட ஒன்றும் பேசாமல் மீண்டும் படுத்துக் கொண்டான். பல வழி பாதைகளில் போக முடியாமல் தத்தளித்தது போல் தத்தளித்தவன் கடைசியாக, ஒரு வழிப்பாதையை தேர்ந்தெடுப்பது என்று தைரியமாக முடி வெடுத்தான். மெல்ல கண் மூடி தூங்க ஆரம்பித்தான்.
விடிந்ததும் கெடைக்காட்டிலிருந்து கௌசிகாவின் நினைப்போடு வந்த தங்கராசுவை சங்கரிதான் வரவேற்றாள்.
""வாய்யா தங்கராசு! என்ன உன் அம்மி பூவாயி ஊருக்குப் போறதா சொன்னயாமே அவளப் பாத்தயா அவளப் பாக்கப் போனவன் இன்னைக்குப் பொழுது இருந்துட்டு வரலாமே எதுக்கு விடியமின்னே எந்திரிச்சி ஓடிவாரே'' என்றாள் பாசத்தோடு.
தங்கராசுவிற்கு அம்மாவின் முகத்தை நிமிர்ந்துப் பார்க்க முடியவில்லை. கூனி, குறுகிப் போய் நின்றான்.
சங்கரி மகனைப் பார்த்தாள். அவன் இரவு முழுக்க தூங்கவில்லை என்பதை அவனின் சிவந்து, சிறுத்துப்போன கண்களும், உப்பிய முகமும் அவளுக்குக் காட்டிக் கொடுத்தன. இவன் தனது சின்னாத்தாளான பூவாயி ஊருக்கே போகவில்லை என்பதை அறிந்து கொண்டவளாய், ""என்னய்யா தங்கராசு நான் கேட்டுக்கிட்டு இருக்கேன். நீ எதுவும் சொல்லாம இருக்கே'' என்றாள் கவலையோடு
இப்போதும் அவனால் அம்மாவை நிமிர்ந்துப் பார்க்க முடியவில்லை. அவன் கௌசிகாவை நிரந்தரமாக பிரிந்துவிட வேண்டுமென்ற முடிவோடுதான் கெடையிலிருந்து வந்திருந்தான் முதலில் இதைப் பற்றி கௌசிகாவிடம் சொல்லிவிட்டு பிறகுதான் அம்மாவிடம் சொல்ல வேண்டுமென்ற நினைப்பில், ""நான் அம்மி ஊருக்கே போகலம்மா. நம்ம தெக்கு வீட்டு இருளாண்டி நம்ம பிஞ்சப் பக்கந்தேன் கெட போட்டிருந்தான் நான் போறதப் பாத்துட்டு, "நீ இந்நேரம் காட்டுவழியே போக வேண்டாம். என் கூடவே இருன்னு' ஒரே பிடியா பிடிச்சிட்டான் என்னாலயும் அவன் பேச்ச மீற முடியல அதனால ராத்திரி அவன் கூடவே தங்கிட்டேன்'' என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போக முயன்றான். அவனால் தன் அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
""அப்ப நீ ராத்திரி சாப்பிடல''
""சாப்பிட்டேம்மா கெடக்காரங்க கொண்டாந்த சாப்பாட்ட வச்சி எல்லாரும் கூட்டாஞ்சோறா சாப்பிட்டோம்'' என்றான்.
""சரி பிஞ்சையில கிடக்க பருத்தி மாற பிடுங்கிச் சேக்க தங்கச்சி மூணு ஆளுகள கூட்டிட்டுப் போயிருக்கா, தம்பி மாறு பிடுங்கின காட்ட அப்படியே கோட உழவா உழுது போட்டுருவோமின்னு அவங்களோட போயிருக்கான். உனக்கின்னு ஒரு வேலையுமில்ல. நீ ராத்திரியெல்லாம் உறங்கவே இல்லன்னு உன் மூஞ்சியே சொல்லுது நீ போய் குளிச்சிட்டு வா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சாப்பிட்டுட்டு நல்லா படுத்துத் தூங்கு காட்டுக்கு நீ வர வேண்டாம்'' என்றாள் சங்கரி.
"நீயெல்லாம் ஒரு பொம்பளையா...' என்று தங்கராசு தன்னைப் பார்த்து கேட்டுவிட்டு கோபத்தோடு வெளியேறுனதை நினைத்து நினைத்து இரவெல்லாம் தூங்காமல் புழுங்கிக் கொண்டிருந்தாள் கௌசிகா. அவளுக்கு மனசு ஆறவே இல்லை. தன் படிப்பென்ன, தன் அழகென்ன, தான் செல்லமாய் வளர்ந்தவிதமென்ன நினைக்க, நினைக்க அவள் மனம் கொந்தளித்து குமுறியது. இனி என்ன ஆனாலும் சரி நேற்று தன்னைத் திட்டி விட்டுப் போன தன் புருஷன் இப்போது அதற்காக வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்பான் கெஞ்சுவான், குலாவுவான். ஆனால் அவனிடம் மயங்கிவிடக் கூடாது. இதையே சாக்காக வைத்து தன் ஊருக்கு இவனைக் கூட்டிப் போய் விடவேண்டுமென்ற எண்ணத்தோடு தலைவாரிக் கொண்டிருந்தாள் கெளிசிகா.
அப்போது தங்கராசு அறைக்குள் நுழைந்தான்.
கண்களில் மை தீட்டி நெற்றிக்கு அழகாய் குங்குமம் வைத்திருந்தாள். கைநிறைய பல நிற வண்ணத்திலான வளையல் அவளின் சிவந்த திரண்ட கைகளில் கல, கலத்தன.
மற்ற நேரமாயிருந்தால் தங்கராசு உணர்ச்சியில் தத்தளித்திருப்பான். ஆனால் இன்று அவளையேப் பார்த்தவாறு மௌனமாக இருந்தான். இவன் இப்படியிருக்க கௌசிகாவோ எப்படியாவது இன்று தன் கணவனிடம் பேசி தன் ஊருக்கு கூட்டிப்போய் விட வேண்டும் பிறகு நமக்கு வாழ்க்கை ஜாலிதான் என்ற எண்ணத்திலிருந்தாள். தன் கணவன் வந்து அறையினுள் நுழைந்ததைப் பார்த்தும் பார்க்காதது போலிருந்தாள்.
ரேடியோவில் ஜானகி அம்மாவின் குரலில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பாட்டை ரசித்துக் கொண்டிருந்தாலும் தங்கராசு அறைக்குள் வந்து இவ்வளவு நேரமாகியும் தன் அருகில் வரக்காணோமே என்று ஆசையும், குழப்பமுமாய் தவித்தாள். மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை. வெறும் பாறையாய் இறுகிக்கிடந்தது. தனக்கு கல்யாணமாகி வந்த இந்த ஏழுமாதத்தில் இப்படியொரு உணர்ச்சியற்ற முகத்தை அவள் அவனிடம் கண்டதில்லை அவள் அவன் கையைப் பிடித்தாள். அது கூட உணர்ச்சியற்று பாறையாய்தான் இருந்தது.
கௌசிகாவின் முகத்தைப் பார்க்காமலே தங்கராசு அவள் அருகில் அமராமல் சற்று தள்ளியே அமர்ந்தான்.
அவன் அப்படி அமர்ந்தது அவளுக்கு ஒருவித பயமாயிருந்தது.
அவன் எங்கோ பார்த்தவாறு, ""உன்கிட்ட கொஞ்சம் பேசனும்'' என்றான். அவன் குரல் கூட அன்னியமாகயிருந்தது.
கௌசிகாவிற்கு அதிர்ச்சியாயிருந்தது. அவன் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் சூடாக கொதிப்பது போலிருந்தது.
""சொல்லுங்கள்' என்றாள் மெல்ல...
""இதோ பார் கௌசி, நான் சொல்லப் போகிற விஷயத்தைக் கேட்டு நீ அழக்கூடாது. ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாது. நான் நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். நான் எடுத்திருக்க முடிவில எனக்கும் கூட இஷ்டமில்ல. நான் இப்ப எடுத்துருக்க முடிவு என்னையே சிதைச்சு, சின்னாப்பின்னமா ஆக்கிருச்சு... ஆனாலும், இந்த முடிவு நமக்கு.. என்றவன் அவசரமாய் இல்ல, இல்ல எனக்கும், உனக்கும் சரியான முடிவுதான்'' என்றான்.
- தொடரும்