மருந்து  கண்டுபிடிப்பில்  முதல்கட்டம்!

"கரோனா' என்னும் ஒற்றைச் சொல், உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. பதைபதைப்பு, பரிதவிப்பு, அச்சம், ஆதங்கம், வருத்தம், எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, கையறு நிலை என்று ஏகப்பட்ட குழப்பங்கள், சிக்கல்கள்
மருந்து  கண்டுபிடிப்பில்  முதல்கட்டம்!

"கரோனா' என்னும் ஒற்றைச் சொல், உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. பதைபதைப்பு, பரிதவிப்பு, அச்சம், ஆதங்கம், வருத்தம், எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, கையறு நிலை என்று ஏகப்பட்ட குழப்பங்கள், சிக்கல்கள், மோதல்கள். யாராவது இதற்கு மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்க மாட்டார்களா என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிச்சக் கீற்று ஒன்று தெரிகிறது. அது குறித்து துணைவேந்தர் சுதாசேஷய்யன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

இந்த ஆய்வு தொடங்கப்பட்டது பற்றி?

கரோனா தீநுண்மியால் தோன்றியிருக்கும் நோய், மானுட இனத்தைப் பலவகையிலும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. புதிய தீநுண்மி, புதிய நோய் என்ற வகையில் நான்கைந்து மாதங்கள்தாம் ஆகின்றன என்றாலும், இதற்குள்ளாகவே நான்கைந்து பிரளயங்கள் ஏற்பட்டுவிட்டனபோல் தோன்றுகிறது. சமூகச் சேய்மை காரணமாக நேரில் சந்திக்கவில்லையென்றாலும், தொலைபேசியில் பேச நேர்ந்தால், எதிர்ப்பக்கத்திலிருந்து வரும் முதல் வினா - "இதற்கு மருந்தே கிடையாதா?' மின்மாநாடுகளோ தொலைபேசிக் கூட்டங்களோ நிறைவடையும்போது, அநேகமாக அனைவரும் கூறுவது - "ஏதாவது தடுப்பூசியாவது கண்டுபிடிக்க மாட்டார்களா?'

இப்படியொரு சூழலில்தான், கரோனா பற்றிய பலவகையான தகவல்கள் வந்துகொண்டிருந்த நிலையில், இதுகுறித்த ஆய்வுகள் தொடங்கின. காலத்தின் கோலம் கருதி, இவை வேகமாகச் செய்யப்படவேண்டும் என்கிற முடிவும் எடுக்கப்பட்டது. கரோனா பாதிப்பு, நோய் நிலைமை, பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை போன்றவை குறித்த ஆய்வுகள் ஒரு புறம், பாரம்பரிய மருந்துப் பொருள்களில் தீநுண்மியைத் தடுக்கக்கூடியவை உண்டா என்ற அலசல் ஒருபுறம், ஏதேனும் வகையில் தடுப்பு மருந்து கிட்டுமா என்னும் வேகம் ஒருபுறம் - எல்லா திசையிலேயும் ஆய்வுகளுக்கு இறக்கைகள் கட்டப்பட்டன.

மற்றவற்றைச் செய்தபோது இருந்த நம்பிக்கை, தடுப்பு மருந்துக்கான ஆய்வு
களைத் தொடங்கியபோது, அவ்வளவாக இல்லை. காரணங்கள் உண்டு. இந்தத் தீநுண்மியானது, ஆர்.என்.ஏ. வகையைச் சேர்ந்தது (தீநுண்மிகளான வைரஸ்களில் ஆர்.என்.ஏ. வகை, டி.என்.ஏ. வகை என்று இரண்டு வகைகள் உண்டு). பொதுவாக, ஆர்.என்.ஏ. தீநுண்மிகள், தங்களின் தன்மைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கக்கூடியவை. இதனால், இவற்றை எதிர்த்துத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது கடினம். இன்னொன்று, இந்தத் தொழில் நுட்பம் எங்களுக்குப் புதியது. இருந்தாலும் தொடங்கினோம்.

இந்தத் தொழில்நுட்பம் பற்றி?

சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, ஏதேனும் கிருமியை எதிர்த்துத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதற்கான செயல்முறைகள் வேறு மாதிரியாக இருந்தன. அந்தக் கிருமியை (தீநுண்மியை) ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கவேண்டும். அதன் கூறுகளை ஆராய வேண்டும். எந்தக்கூறு அல்லது கூறுகளை எதிர்த்துத் தடுப்பு மருந்து செயல்படும் என்று காணவேண்டும். இதற்கு சில பல ஆண்டுகள் ஆகலாம். தவிரவும், தீநுண்மிகளை அவ்வளவு சுலபமாக ஆய்வகத்தில் வளரச் செய்யமுடியாது.

இப்போது நாங்கள் பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பம் "ரிவர்ஸ் வேக்ஸினாலஜி' என்பது. இதில் தீநுண்மியை ஆய்வகத்தில் வளரச் செய்ய வேண்டியதில்லை. தீநுண்மியின் மரபியல் தொடர் இருந்தால் போதுமானது. கரோனா தீநுண்மியின் மரபியல் தொடரை வைத்துக் கொண்டு, அதனைக் கணினியில் உள்ளீடு செய்து, அதன் கூறுகளை ஆராய்ந்தோம். எந்தெந்தக் கூறுகளுக்குத் தடுப்புமருந்துகளை உருவாக்கமுடியும் என்றும் ஆராய்ந்தோம்.
இந்த வகையில், கரோனா தீநுண்மியைப் பிணைத்துத் தடுத்துவிடக்கூடிய புரதம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறோம். செயற்கைப் புரதமான இதனை அடையாளம் கண்டிருக்கிறோம்.

இதில் பணியாற்றியவர்கள்/ பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் குறித்து?

மொத்தம் நான்கு பேர். எங்கள் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் துறையின் ஆராய்ச்சி மாணவர் டாக்டர் தம்மண்ண பஜந்த்ரி. இவர்தாம் கணிப்புகளை உருவாக்கியவர். நோய் எதிர்ப்பியல் துறையின் தலைவர் டாக்டர் புஷ்கலா, நோய் பரவுயியல் துறைத் தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் இணைந்து கொள்ள, மூன்று வாரங்களின் தவிப்பு, செயற்கைப் புரதக் கூறினை அடையாளம் கண்டபோது ஓரளவுக்கு அமிழ்ந்தது.

இதன் அடுத்தக்கட்டம்?

இது முதல் கட்டம்தான். அடுத்ததாக, ப்ரீ க்ளினிகல், மற்றும் க்ளினிகல் சோதனைகள் நடத்தப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேலெடுத்திருக்கிறோம்.

ஆய்வகச் சோதனைகள் நடத்தவேண்டும். ஒரு சில சோதனைகளைத் தமிழ்நாட்டிலேயே ஆய்வகங்களில் செய்வது என்றும் ஒரு சிலவற்றை அமெரிக்காவின் தடுப்பு மருந்து மையம் ஒன்றோடு இணைந்து செய்வது என்றும் உத்தேசித்திருக்கிறோம்.

தடுப்பு மருந்து எப்போது வரும்?

இது போன்ற ஆய்வுகள், பல கட்டங்களைத் தாண்டவேண்டும். இவையெல்லாம் வெறும் ஆய்வுகள் மட்டுமில்லை. மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு தரவேண்டியவை. ஆகவே, பல கட்டங்களைத் தாண்டி, பல வகையான பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் தடுப்பு மருந்தை மக்களுக்குப் பயன்படுத்த முடியும்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள், தக்க ஒப்புதல்களுக்குப் பிறகு, விரைவிலேயே தொடங்கவிருக்கின்றன. ஓராண்டுக் காலத்தில் நல்ல விடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com