நெட்டியில் நேர்த்தியான கலைகள்!

தஞ்சாவூர் கைவினைக் கலைகள் உலக அளவில் பிரபலமானது. இதில், மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டது தஞ்சாவூர் நெட்டி வேலை.
நெட்டியில் நேர்த்தியான கலைகள்!


தஞ்சாவூர் கைவினைக் கலைகள் உலக அளவில் பிரபலமானது. இதில், மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டது தஞ்சாவூர் நெட்டி வேலை. நினைவு பரிசாக வழங்குவதற்கும், வீட்டில் அலங்காரப் பொருள்களாக வைப்பதற்கும் பயன்படும் இந்த நெட்டி வேலை மிகவும் பழைமையானது. பாரம்பரியமிக்க இக்கலையில் ஈடுபட்ட கலைஞர்களுக்கு இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் மானியங்கள் கொடுக்கப்பட்டன.  

நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி.  தஞ்சாவூரில் உள்ள குளம், ஏரியில் விளைகிறது. இதனுடைய நடுபாகம் தாமரைத் தண்டு போன்று நீளமாகவும் மேல் பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். கிளைகளில் செல்லி இலைகள் போன்று காணப்படும். இந்த நெட்டி டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேவையான அளவுக்கு கிடைக்கிறது. இதை வெயிலில் உலர்த்தி பதப்படுத்தப்படுகிறது.

நெட்டியின் மேல் தோலில் சிறு சிறு வேர்கள் காணப்படும். நெட்டியின் நடுப்பகுதியில் ஒரு நீளமான துவாரம் காணப்படும். தோலுக்கும், துவாரத்துக்கும் இடைப்பட்ட பகுதி தந்தத்தைப்போல வெண்மையாகக் காணப்படும். 

இதை நெட்டி என்றும், சடை என்றும், பித்து (பெண்டு) என்றும் கூறுவர். இதில், எந்த வர்ணமும் பூசப்படுவதில்லை. இது, இயற்கையில் வெண்மையாகவே இருக்கும்.

இத்தகைய நெட்டியைக் கொண்டு கோயில் அமைப்புகள், உருவ அமைப்புகள், இயற்கை காட்சிகள், கட்டட அமைப்புகள் போன்றவை செய்யப்பட்டு, கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்படும். 

இதில், தஞ்சாவூர் பெரியகோயில் அமைப்பு மிகவும் புகழ்பெற்றது. மேலும், மாமல்லபுரம் கடற்கரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, திருச்சி மலைக்கோட்டை போன்றவை மட்டுமல்லாமல், இறை உருவ அமைப்புகளும் தந்துரூபமாக உருவாக்கப்படுகின்றன.

நெட்டியில் செய்யப்படும் கலைப் பொருள்கள் தந்தத்தில் செய்யப்பட்டவை போன்று வெண்மையாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் உள்ளது. 

இவை 50 ஆண்டுகளானாலும் நீடித்து இருக்கும். தற்போது, இந்த நெட்டி வேலைப்பாடுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட் ள்ளது. அரிய கலையான இக்கைவினைக்கலையில் மிகச் சிலரே முழுமையாக ஈடுபட்டு வந்த நிலையில், சில ஆண்டுகளாகக் கற்றுக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் முன் வருகின்றனர். இதில், கிராமப்புற பெண்கள் அதிகமாக வருகின்றனர்.

இதுகுறித்து இக்கலையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையாக ஈடுபட்டு வரும் தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஆர். எழில்விழி தெரிவித்தது:

""இக்கலைக்கு முன்பை விட இப்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. பூம்புகார் விற்பனை நிலையம், காதி கிராஃப்ட் உள்ளிட்டவற்றில் நெட்டி வேலைப்பாடுக்கான தேவை அதிகமாகியுள்ளது. மேலும், பரிசுப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளிலும் வாங்குகின்றனர். இக்கலைக்குத் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், இதன் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

பெண்கள் வீட்டிலிருந்தபடியே செய்து விற்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும். மூலப்பொருள்களும் பெரிய அளவில் இல்லை. இக்கலை மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 1,000 வருவாய் ஈட்டலாம். ஒருவர் இத்தொழிலை எடுத்து செய்யும்போது, அவருக்கு உதவியாளர்கள் தேவைப்படும். அதன் மூலமாக 4 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கோயில், வீடு, கட்டடம் என எந்த வடிவத்தில் கேட்டாலும், அதை நெட்டி வேலையில் செய்து கொடுக்க முடியும். தற்போது, அயோத்தி ராமர் கோயில் வடிவத்தை இணையதளத்தில் பார்த்தேன். அதை வைத்து ராமர் கோயில் வடிவத்தில் நெட்டி வேலைப்பாடு செய்துள்ளேன். இதுபோல, எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

இதற்கென நேரம் ஒதுக்கீடு செய்து வேலை பார்க்க வேண்டியதில்லை. வீட்டு வேலை முடிந்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இக்கைவினைக் கலையை மேற்கொள்ளலாம். இதற்குக் கணக்கு போடும் திறன் வேண்டும். அதுவும் சிரமம் கிடையாது. மனக்கணக்கை வைத்துதான் பெண்கள் கோலத்தைப் போடுவர். படிக்காத பெண்களும் கோலம் போடுகின்றனர். அதேபோன்று திறமையைப் பயன்படுத்தி நெட்டி வேலைப்பாடுகளைச் செய்யலாம். வறுமையான நிலையில் இருந்த பல பெண்கள் இக்கலையைக் கற்றுக் கொள்ள முன் வந்தனர். தற்போது இப்பெண்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்து நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

இந்தக் கைவினைக்கலை குறித்து 1993- ஆம் ஆண்டு முதல் அரசு மூலமும், தனிப்பட்ட முறையிலும் பயிற்சி அளித்து வருகிறேன். இதுவரை என்னிடம் ஏராளமானோர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளனர். தற்போது, இத்தொழிலில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ 500 பேர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள புவிசார் குறியீடு மூலம் எங்களுக்கெல்லாம் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம், தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு என்ற பாரம்பரிய கலையை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இப்பெயரை வேறு யாரும் பயன்படுத்த முடியாது'' என்றார் எழில் விழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com