உலகின் அதிக வருவாய் ஈட்டிய வீராங்கனை!

கடந்த ஓராண்டில் ரூ.284 கோடியை ஈட்டி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டிய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் ஜப்பானின் இளம் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒஸாகா (22). "போர்ப்ஸ்' இதழ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார
உலகின் அதிக வருவாய் ஈட்டிய வீராங்கனை!

கடந்த ஓராண்டில் ரூ.284 கோடியை ஈட்டி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டிய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் ஜப்பானின் இளம் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒஸாகா (22). "போர்ப்ஸ்' இதழ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் ஒஸாகா.

சர்வதேச அளவில் கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து வரிசையில் டென்னிஸ் விளையாட்டும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆடவர் டென்னிஸ் ஆட்டங்களுக்கு கிடைக்கும் அதே வரவேற்பு மகளிர் டென்னிஸýக்கும் உள்ளது.
மார்க்கெரட் கோர்ட், மார்ட்டினா நவரத்திலோவா, கிறிஸ் எவர்ட், ஸ்டெப்பி கிராஃப், மோனிகா செலஸ், மார்ட்டினா ஹிங்கிஸ், வில்லியம்ஸ் சகோதரிகள், சானியா மிஸ்ரா உள்பட பல வீராங்கனைகள் தங்களுக்கு என தனி புகழையும், பெருமையையும் கொண்டுள்ளனர்.

குறிப்பாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சிறப்பைப் பெற்றுள்ளார். அவரது ஆதிக்கம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக உலகளவில் நீடித்து வந்த நிலையில், புதிதாக இளம்தலைமுறை வீராங்கனைகள் அவருக்கு கடும் சவாலை ஏற்படுத்தி தோல்வியுறச் செய்து வருகின்றனர். நவோமி ஒஸாகா (ஜப்பான்), ஆஷ்லி பர்டி (ஆஸ்திரேலியா), ஆன்ட்ரிஸ்கு பியான்கா (கனடா) உள்ளிட்டோர் இதில் சிலர் ஆவர்.

நவோமி ஒஸாகாவின் எழுச்சி: ஜப்பானின் ஒஸாகா மாகாணம், சூ கூ பகுதியில் 1997 அக்டோபரில் பிறந்த நவோமி வலது கை வீராங்கனையாவார். ஜப்பான் மங்கைக்கும், அமெரிக்காவின் ஹைதி தந்தைக்கும் பிறந்தவர் நவோமி. 3 வயதாக இருக்கும் போதே அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். 16 வயதில் 2014-இல் நடைபெற்ற டபிள்யுடிஏ போட்டியில் முன்னாள் யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்டோஸரை வீழ்த்தியதின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார் ஒஸாகா.

இரண்டு ஆண்டுகள் கழித்து 2016-இல் முதல் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றதின் மூலம் உலகின் முதல் 50 வீராங்கனைகள் பட்டியலில் இடம் பெற்றார். 2018-இல் இந்தியன்வெல்ஸ் ஓபன் போட்டியில் முதல் பட்டத்தைக் கைப்பற்றினார் ஒஸாகா. அதன்பின் அவரது டென்னிஸ் வாழ்க்கை ஏறுமுகத்தில் உள்ளது.

குறிப்பாக ஜப்பான் இளம் வீராங்கனையான நவோமி ஒஸாகாவின் வெற்றிப் பயணம் கடந்த 2018 யுஎஸ் ஓபன் போட்டியில் இருந்து தொடங்கியது. அப்பந்தயத்தின் இறுதிச் சுற்றில் முன்னணி வீராங்கனை செரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் ஒஸாகா. 

அதன் தொடர்ச்சியாக 2019 இல் மற்றொரு கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றார். இதற்கு முன்பு அவர் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டனில் மூன்றாம் சுற்றோடு வெளியேறி இருந்தார்.  இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற சிறப்பும் அவர் வசம் உள்ளது. மைதானத்தில் 200 கி.மீ வேகத்தில் சர்வீஸ் போடும் திறமையைப் படைத்தவர் ஒஸாகா.

அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை: 

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் விளங்கிய ஒஸாகாவுக்கு தற்போது மற்றொரு பெருமையும் சேர்ந்துள்ளது. போர்ப்ஸ் இதழின் உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் வீரர், வீராங்கனைகள் பட்டியலில் அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

செரீனாவை பின் தள்ளினார்: இப்பட்டியலில் கடந்த 4 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த செரீனாவை இதன் மூலம் பின்னுக்கு தள்ளினார் ஒஸாகா. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.284 கோடி (37.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)பரிசுத் தொகை, வர்த்தக வாய்ப்புகள் மூலம் ஈட்டியுள்ளார். கடந்த 2015-இல் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா 29.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டியதே அதிக தொகையாக இருந்தது.

ஒட்டுமொத்த பட்டியலில் ஒஸாகா 29-ஆவது இடத்திலும், செரீனா 33-ஆவது இடத்திலும் உள்ளனர். பரிசுத் தொகை மூலம் மட்டும் அவர் 14.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார். நைக், நிஸான் மோட்டார்ஸ், ஷிùஸடோ, யோனெக்ஸ் என 15-க்கு மேற்பட்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் அவர் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

22 வயதே ஆன நவோமி ஒஸாகா வரும் ஆண்டுகளில் மேலும் பல வெற்றிகளை குவிப்பதின் மூலம் அதிக புகழையும், பொருளையும் ஈட்டுவார் என்பது திண்ணம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com