சமையல்! சமையல்!

அரிசியுடன் தேவையான அளவு நீர் சேர்த்து உதிரியாக வடித்து வைக்கவும். அன்னாசி பழத்தின் தோலை நீக்கிவிட்டு, வட்டத்துண்டுகளாக நறுக்கி பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பட்டை, சோம்பு,
சமையல்! சமையல்!

அன்னாசிப்பழ ரைஸ் 

தேவையானவை:
அன்னாசிப்பழம் - அரைப்பகுதி
பாசுமதி அரிசி - அரை கிலோ
பட்டை - சிறுதுண்டு
சோம்பு - 1 தேக்கரண்டி
கிராம்பு - 5 
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிது
முந்திரி பருப்பு - 6
உலர் திராட்சை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: அரிசியுடன் தேவையான அளவு நீர் சேர்த்து உதிரியாக வடித்து வைக்கவும். அன்னாசி பழத்தின் தோலை நீக்கிவிட்டு, வட்டத்துண்டுகளாக நறுக்கி பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பட்டை, சோம்பு, கிராம்பு இவைகளை ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக ஒடித்து, உலர்திராட்சை சேர்த்து சிறிது நெய்யில் வறுத்து எடுக்கவும். அடிகனமுள்ள பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி அன்னாசிப்பழத் துண்டுகளை இட்டு சிறிது வதக்கவும். இத்துடன் உதிரியான சாதம், மசாலாப் பொடி, உப்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் தூள் இவைகளை இட்டு நன்கு கலந்து கொள்ளவும். இரண்டு நிமிடம் குறைந்த தணலில் வேகவிடவும். பின்னர் மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறி கொடுத்து இறக்கவும். அன்னாசிப்பழ ரைஸ் தயார். அன்னாசிப்பழத்தில் தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் உள்ளதால் ஆரோக்கியத்திற்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

சோயா டிலைட் 

தேவையானவை:
சோயா - 200 கிராம்
பனீர் - 50 கிராம்
தக்காளி - 4
வெங்காயம் - 2
குடமிளகாய் - 1
இஞ்சி, பூண்டு விழுது - தலா அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை: சோயாவை குக்கரிலிட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பனீரை துண்டுகளாக நறுக்கி வைக்கவும் . தக்காளி, வெங்காயம், குடமிளகாய் இவைகளை நீளவாக்கில் நறுக்கி எடுக்கவும். வாணலியில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். பின்னர், குடமிளகாய், பனீர், சோயா சேர்த்து வதக்கவும். பின்னர், தனியாத்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர்விட்டு மூடிவிடவும். தண்ணீர் வற்றி சுருண்டு வரும் பதத்தில் நறுக்கிய கொத்துமல்லித் தழையைத் தூவி இறக்கிவிடவும். சுவையான சோயா டிலைட் தயார்.

- ஆர்.ஏ.ரமா, சென்னை.

ஜவ்வரிசி வடை 

தேவையானவை: 
ஜவ்வரிசி - 1 கிண்ணம்
உருளைக்கிழங்கு - அரைகிண்ணம் ( வேக வைத்து நன்கு மசித்தது)
வேர்க்கடலை - 4 தேக்கரண்டி ( உடைத்தது)
கடலைமாவு - 1 மேசைக்கரண்டி
பச்சமை மிளகாய் - 5
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: ஜவ்வரிசி 5-10 நிமிடங்கள் ஊறவைத்து தேவையற்ற தண்ணீரை நன்கு கவனமாகப் பிழிந்து எடுக்க வேண்டும். பின்னர், மசித்த உருளைக்கிழங்கை ஒரு அகலமான பாத்திரத்தில் இட்டு அதனுடன், நீர்வடித்து பிழிந்த ஜவ்வரிசி, கடலைமாவு, பொடித்த வேர்க்கடலை, பச்சைமிளகாய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை வடைகளாகத் தட்டி வாணலியில் சூடான எண்ணெய்யில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான ஜவ்வரிசி வடை தயார். 

பிரெட் சீஸ் சான்விச் 

தேவையானவை:
வெள்ளை பிரெட் - 4 - 8 துண்டுகள் 
சீஸ் துண்டுகள் - 4
நறுக்கிய வெங்காயம் - 1 
நறுக்கிய குடைமிளகாய் - பாதி அளவு
தக்காளி - 1 
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
சாட் மசாலா - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்அதில் மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிரெட் துண்டுகளை எடுத்து அதன் முனைகளை நீக்கிவிட்டு, ஒரு பிரெட் துண்டை எடுத்து, அதன் மேல் ஒரு சீஸ் துண்டை வைத்து, பின் அதன் மேல் வெஜிடேபிள் கலவையை வைத்து, மற்றொரு பிரெட் துண்டை வைத்து மூடி, முன்னும் பின்னும் வெண்ணெய் தடவி பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
இது போன்று அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்தால் சுவையான வெஜிடேபிள் சீஸ் சான்விச் தயார்.

- லோ.சித்ரா, கிருஷ்ணகிரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com