பளு தூக்கும் வீராங்கனைகளை உருவாக்குவதே லட்சியம்!

விவசாயமே பிரதான தொழிலான ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, நகருக்கு வந்துசென்று கணினி அறிவியல் முதுகலைப் பட்டம் படிக்கும் போதே விளையாட்டாய் பளு தூக்கத் தொடங்கி, தேசிய மற்றும் சர்வதேச
பளு தூக்கும் வீராங்கனைகளை உருவாக்குவதே லட்சியம்!


விவசாயமே பிரதான தொழிலான ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, நகருக்கு வந்துசென்று கணினி அறிவியல் முதுகலைப் பட்டம் படிக்கும் போதே விளையாட்டாய் பளு தூக்கத் தொடங்கி, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இதுவரை 5 தங்கப் பதக்கங்களை வென்ற தங்க மங்கைதான் ப. அனுராதா, இப்போது இவர் ஒலிம்பிக் போட்டிக்கும் தயாராகி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனுராதா. 28 வயது நிரம்பிய இவர் இதுவரை 3 தேசியப் போட்டிகளிலும், 2 சர்வதேசப் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை. பளு தூக்கும் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் படிப்பையும் முடித்துள்ள அனுராதா, "ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுத் தங்கம் வென்றதற்குப் பிறகு, பயிற்சியாளராகி நாடு முழுவதும் பெண்களை பளு தூக்கும் வீராங்கனைகளாக மாற்றுவதுதான் லட்சியம்' என்கிறார். அனுராதாவுடன் பேசியதிலிருந்து...

""புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவள் நான். நகரில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது எங்களின் நெம்மேலிப்பட்டி கிராமம். 9-ஆம் வகுப்பு படிக்கும்போதே எனது தந்தை பவுன்ராஜ் இறந்துவிட்டார். எனது அண்ணன் மாரிமுத்து, அம்மா ராணி ஆகியோர்தான் என்னை வளர்த்தனர்.விவசாயம் தான் எங்கள் குடும்பத்தின் பிரதான தொழில். இப்போதும் பணிக்குப் போனது போக, போட்டிகளுக்குச் சென்று திரும்பிய நேரங்களில் வயலில்தான் இருப்பேன்.

2009-இல் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.எஸ்.சி (கணினி அறிவியல்) படித்தபோது பளு தூக்கும் விளையாட்டில் பங்கேற்றேன். ஜெ.ஜெ கல்லூரியில் எம்.எஸ்.சி (கணினி அறிவியல்) படிக்கும்போது படிப்படியாக மாவட்ட மாநில போட்டிகளில் பங்கேற்றேன்.

காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கான தேர்வு எழுதி கடந்த 2016-ஆம் ஆண்டு வண்டலூரில் பயிற்சியில் சேர்ந்தேன். அதன்பிறகு 2017-இல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் பணி. தொடர்ந்து தோகூர் (கல்லணை) காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணி. அதனைத் தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் சிறப்புப் பிரிவில் உதவி ஆய்வாளர் பணி. இதற்கிடையே 2018-இல் கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற தேசிய பளுதூக்கும் போட்டியில் முதல் தங்கம் வென்றேன். தொடர்ந்து 2019-இல் விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற தேசியப் போட்டியிலும், தென்பசிபிக் கடலில் உள்ள சமோவா என்ற தீவு நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய போட்டியிலும் தொடர்ந்து தங்கம் வென்றேன்.

அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் மீண்டும் தங்கம் வென்றேன். அடுத்து 2020 ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவிலுள்ள தேசிய விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியில் தங்கிப் பயிற்சி பெற்று வந்தேன்.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்காக பயிற்சி வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளும் இந்த ஆண்டில் இல்லை. கரோனாவுக்குப் பிறகு நிலைமை சீரடைந்தவுடன் மீண்டும் பயிற்சி தொடங்கும். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதுதான் முக்கிய இலக்கு. அதன் பிறகு 2022-இல் சீனாவில் திட்டமிடப்பட்டுள்ள ஆசிய போட்டிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளேன்.

இதற்கிடையே பளு தூக்கும் வீரர்களுக்கான பயிற்சியாளர் படிப்பையும் முடித்திருக்கிறேன். மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக சேருவதற்கான தகுதி உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு என்ன செய்வது என முடிவெடுப்பேன்.

நாட்டில் இந்த விளையாட்டு மீது பெண்களுக்கு ஆர்வமில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் யாருமே முன்வருவதில்லை. எனவே, நல்ல பயிற்சியாளராகத் திகழ்ந்து ஏராளமான பளு தூக்கும் வீராங்கனைகளை உருவாக்குவதுதான் லட்சியம்'' என்கிறார் அனுராதா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com