மன அழுத்தத்திருந்து மீள்வது எப்படி?: தீபிகா படுகோன்

திருமணத்திற்கு முன் சில காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பிய தீபிகா படுகோன், அந்த பாதிப்பிலிருந்து மீண்ட பின் இன்று தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மருத்துவர்கள்
மன அழுத்தத்திருந்து மீள்வது எப்படி?: தீபிகா படுகோன்


திருமணத்திற்கு முன் சில காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பிய தீபிகா படுகோன், அந்த பாதிப்பிலிருந்து மீண்ட பின் இன்று தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மருத்துவர்கள் துணையுடன் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறார். இது குறித்து தன் அனுபவங்களை இங்கு மனம் திறக்கிறார் தீபிகா:

""நான் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். செட்டில் என்னைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் உற்சாகத்தோடு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் என்னைப் பொருத்தவரை அனைத்தையும் இழந்து தனிமையில் இருப்பது போல் தோன்றியது. உடனே செட்டிலிருந்து வெளியேறி என்னுடைய கேரவனுக்குள் சென்று கதவை தாளிட்டு விட்டு குளியலறைக்குள் சென்று அழத் தொடங்கினேன்.

அதுவரை நடிகை என்ற முறையில் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் உண்மையில் என் வாழ்க்கையில் வித்தியாசமானதாக தெரிந்தது. அன்றைய சூழ்நிலையில் முதலில் இதிலிருந்து எப்படி மீள்வது என்பதுதான் முக்கியமாக தெரிந்தது. அந்த சமயத்தில் என் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். என் குடும்பத்தினர் சம்மதத்துடன் வருங்கால கணவர் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் எதற்காக என்னுடைய மனதில் பலவிதமான கவலைகள் எழுந்தன என்பது தெரியவில்லை குழப்பமடைந்தேன்.

2014- ஆம் ஆண்டு பிப்ரவரி மத்தியில் ஒருநாள், நீண்ட நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திடீரென மயங்கி விழுந்தேன். மறுநாள் காலை கண் விழித்தபோது வயிறு காலியாக இருப்பது போன்றதொரு உணர்வு. அழ வேண்டும் போலிருந்தது. எந்நேரமும் எதையோ இழந்தாற்போல் தோன்றியது. என்னை சந்தோஷப்படுத்த யாராவது மகிழ்ச்சியான பாடல்களை பாடினால் எனக்குள் சோகம் அதிகரிக்கும். காலையில் எழுந்திருப்பது கூட கடினமாக தெரிந்தது. தூங்கிக் கொண்டே இருக்கலாமா என்று தோன்றும். அப்படியே தூங்கினாலும் அது உண்மையான தூக்கமாக இருக்காது. 

எனக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலமாதங்கள் மௌனமாகவே வேதனைபட்டேன். உலக சுகாதார அமைப்பின் தகவல்படி என்னைப்போல் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் பேர் இருக்கிறார்கள் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

அந்த நேரத்தில் என்னை பார்ப்பதற்காக என்னுடைய பெற்றோர் வந்திருந்தனர். அவர்கள் வருகை எனக்கு ஆறுதலாக இருந்தது. மீண்டும் அவர்கள் ஊருக்கு கிளம்பும்போது நான் உடைந்து போனேன். என் கண்களில் வழிந்த நீரை பார்த்து, என்ன ஆயிற்று? என்று என்னுடைய அம்மா கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. நடிப்பதில் ஏதாவது பிரச்னையா ? உடனிருப்பவர்களால் ஏதாவது தொல்லையா? என்று அவர் கேட்ட கேள்விகளுக்கு இல்லை என்று தலையை மட்டும் அசைத்தேன். சில நிமிடங்கள் கழித்து அம்மா சொன்னார். தீபிகா உனக்கு இப்போது மருத்துவ உதவி தேவை என்று நினைக்கிறேன்.

மருத்துவ ரீதியாக மனோதத்துவ நிபுணர் என்னைப் பரிசோதித்தபோது, இது மன இறுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று கூறிய போது, என்னை பிடித்திருந்த ஏதோ ஒன்று விலகியது போலிருந்தது. உடனே குணமடைந்தது போன்ற உணர்வு. மிகப் பெரிய பிரச்னையிலிருந்து விடுபட்டது போலிருந்தது. மேற்கொண்டு சிகிச்சை பெறத் தொடங்கினேன்.

எனக்கேற்பட்ட பிரச்னை என்ன என்பதை ஏற்றுக் கொண்டதால் அதற்குரிய மருந்துகளையும், நடைமுறை வாழ்க்கையில் நான் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் குறித்தும் மனோ தத்துவ நிபுணர் பரிந்துரைத்தார். நேரத்திற்கு உறங்குதல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவைகளைத் தொடர்ந்து கடைபிடித்ததன் மூலம் நான் யார் என்பதை திரும்ப உணரமுடிந்தது.

குணமடைந்தவுடன் என் அனுபவத்தை வெளிப்படுத்த நினைத்தேன். இந்த மன அழுத்த நோய் குறித்து எனக்கு ஏன் ஏதும் தெரியாமல் போயிற்று? என்னுடைய அம்மாவை தவிர வேறுயாரும் இதைப்பற்றி ஏன் உணரவில்லை? நான் ஏன் இதை வெளிப்படுத்தாமல் அலட்சியப்படுத்தினேன்? எனக்குள் எழுந்த இந்த கேள்விகள் தான் என்னை எனக் கேற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக பிறரிடம் கூறலாமென தோன்றியது. எனக்கேற்பட்ட பிரச்னையை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள யாராவது ஒருவர் படித்தால் கூட போதும்.

இந்த நோயால் நான் மட்டும் அவதிப்படவில்லை. மேலும் பலர் உள்ளனர் என்ற நினைவு அவர்களுக்கு தெரிந்தால் போதும். 

2015- ஆம் ஆண்டு மன அழுத்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் எனக்கேற்பட்டதை அனைவரும் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்று நானும், என்னுடைய குழுவினரும் தீர்மானித்தோம். "இந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகையில் ஒரு பேட்டியும், தொடர்ந்து தேசிய டிவி ஒன்றிலும் பேட்டி அளித்தேன். ஆனால் இது எனக்கு நேர்மாறான பாதிப்பை ஏற்படுத்துமென நான் எதிர்பார்க்கவில்லை. பட வாய்ப்புகளையோ புதிய ஒப்பந்தங்களையோ இழக்க நேரிடுமென்று நினைக்கவில்லை. உண்மையில் என்னுடைய அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதுதான் நோக்கமாக இருந்தது. 

சிலர் நான் விளம்பரத்திற்காக இப்படி செய்வதாக வெளிப்படையாகவே கூறினர். பரிதாபட்ட சிலர் இதை மருத்துவத் துறை மூலம் வெளிப்படுத்தினால் பலன் கிடைக்குமென அறிவுறுத்தினர். மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிலர், இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். 
நான் எதிர்பார்த்தபடியே பெரிய அளவில் ஆதரவு திரண்டது. நான் எங்கு சென்றாலும், நிகழ்ச்சிகளிலாகட்டும். படப்பிடிப்பிலாகட்டும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பலர் என்னை சந்தித்து ஆலோசனைப் பெறத் தொடங்கினர். இதுவரை வெளியில் தெரிவிக்க முடியாமல் மனதிற்குள் மறைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிப்படுத்தினர். என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதோடு விட்டுவிடாமல், என்னை சந்திக்க வருபவர்களுக்கு மேலும் நம்பிக்கையூட்ட "லிவ், லவ், லாஃப்' பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினேன்.

இந்திய மக்களிடையே மன அழுத்த நோய் பெருமளவில் பரவலாக உள்ளது. ஆனால் இதை வெளிப்படுத்துபவர்கள் குறைவு. 2017- ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் தகவல்படி இந்தியாவில் மன அழுத்த நோயால் 57 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்திய அரசு அமைத்த கமிஷன் ஆய்வுப்படி பொதுவாக காணப்படும் மன அழுத்தம் காரணமாக 85 சதவிகிதம் பேர் முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உள்ளனர் என்பது தெரிந்தது. இதன் காரணமாகவே உலகில் அதிக அளவில் தற்கொலை செய்வோர் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 130 கோடி மக்கள் தொகையுள்ள நம்முடைய நாட்டில் இந்த வியாதிக்கு கவுன்சிலிங் கொடுத்து குணப்படுத்த போதுமான மருந்துவர்கள் இல்லை என்பதே இதற்கு காரணமாகும். 

கடந்த நான்காண்டுகளில் எங்களுடைய "லிவ், லவ், லாஃப் பவுண்டேஷன்' இந்தியாவில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக சுகாதார பிரசாரத்தை பள்ளிக்கூட நிகழ்ச்சிகளிலும், கிராமப்புறங்களிலும் சிறந்த மனநல மருத்துவர்கள் உதவியுடன் மன நல பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதுதான் எங்கள் குறிக்கோளாகும். இதன் காரணமாகவே எங்கள் அமைப்புக்கு வாழ்க்கை, அன்பு, மகிழ்ச்சி என்று பெயரிட்டோம். ஒருவருடைய வியாதிக்கு முறைப்படி சிகிச்சை அளித்தால் இவை மூன்றும் தானாகவே கிடைத்துவிடும். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதுதான் எங்கள் நோக்கம் என்பதால் அன்புடன் அவர்களை அணுகி மன இறுக்கத்தைக் குறைக்கிறோம்.

இவை எல்லாவற்றையும் விட மனிதாபிமானம், விவேகம், ஊறு விளைவிக்காத நம்பகத் தன்மையுடன் நாங்கள் மக்களை அணுகுகிறேன். பாதிக்கப்பட்டவர்களின் மன நிலையை பொறுத்தே குணமடைவதுண்டு. இது எனக்கு அமைதி மற்றும் ஆறுதலை அளிக்கிறது. என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் நேர்மையானவர்களாக இருப்பதால் நானும் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். இன்றும் என் முயற்சிகள் மனதளவில் ஆழமாக பதியும்போது, மீண்டும் அந்த மன அழுத்தம் வந்துவிடக் கூடாதென்ற எண்ணம் தோன்றினாலும், அதை எதிர்த்து போராடக்கூடிய வல்லமை என்னிடம் இருக்கிறது'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com