மீண்டும் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வாய்ப்பு!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்திய மகளிர் ஹாக்கி அணியை வெற்றிப் பெறச் செய்வதே தன்னுடைய லட்சியம் என்று கூறும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால்(25) இதுவரை
மீண்டும் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வாய்ப்பு!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்திய மகளிர் ஹாக்கி அணியை வெற்றிப் பெறச் செய்வதே தன்னுடைய லட்சியம் என்று கூறும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால்(25) இதுவரை இந்தியா விளையாடிய 241 போட்டிகளில் 118 கோல்களை போட்டவர் என்ற சிறப்பைப் பெற்றவர். இது அவர் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வாய்ப்பு என்பதால் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தன் குழுவினருடன் கடினமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 ஹரியானா மாநிலம் ஷாஹாபாத் மார்கண்டா என்ற சிறிய நகரில் பிறந்தவர் ராணி ராம்பால். சர்வதேச அளவில் நான்கு கேப்டன்கள் உள்பட 50 மகளிர் ஹாக்கி வீராங்கனைகளை உருவாக்கிய நகரம் இவருடையது. இவரது தந்தை ராம்பால் தினக்கூலி தொழிலாளி. அம்மா குடும்ப தலைவி. இரு மூத்த சகோதரர்கள் உண்டு. ராணி தான் குடும்பத்தில் ஒரே பெண்.
 ஏழாவது வயதிலேயே காலை 5 மணி பயிற்சிக்காக ராணி 3.45 மணிக்கெல்லாம் எழுந்து 4.30 மணிக்கு கிளம்பி, துரோணாச்சார்ய பல்தேவ்சிங்கின் ஷாஹாபாத் ஹாக்கி அகாதெமியில் பயிற்சி பெற செல்வராம்.
 தான் கடந்து வந்த பாதை குறித்து ராணி ராம்பால் கூறுகிறார்:
 "ஹாக்கி பயிற்சியின்போது, உடன் பயிற்சி பெறும் பெண்களின் வீடுகளுக்கு சென்றபோதுதான், என் வாழ்க்கையில் முதன்முறையாக படுக்கை அறை மற்றும் டைனிங் டேபிள் போன்றவைகளை பார்க்க நேர்ந்தது. அப்போது என் அம்மாவிடம், "ஒருநாள் நானும் அவர்களைப் போல் அனைத்து வசதிகளுடன் வாழ ஒரு வீடு கட்டுவேன்' என்றேன். அதற்கு அம்மா சிரித்தார், "அதிகமாக கனவு காணாதே. இப்போது நாம் ஒன்றும் தெருவில் வசிக்கவில்லை. நமக்கென்று ஒரு வீட்டில்தானே வசிக்கிறோம்' என்றார்.
 என்னுடன் பயிற்சி பெற்றவர்கள் அனைவருமே வயதில் மூத்தவர்கள் என்பதால் சீனியர் குழுவில் என்னை சேர்த்துக் கொள்வார்களா? என்ற சந்தேகம் இருந்தது. மேலும் சரியான ஊட்டச்சத்து இல்லாததால் மெலிந்திருந்தேன். அப்போது என்னுடைய எடை 37 கிலோ ஜூனியர் குழு பயிற்சியாளர் என் எடையை விட இருமடங்கு அதிகமான 80 கிலோ எடையை தூக்கும்படி கூறினார்.
 2005-ஆம் ஆண்டு லக்னோவில் முதன்முறையாக ஜூனியர் முகாமில் சேர்ந்த நேரம் அது. எனக்கு பயமேற்பட்டது. தயங்கினேன். "இந்த எடையை உன்னால் தூக்க முடியவில்லை என்றால், எழுதி கொடுத்துவிட்டுப்போ' என்று பயிற்சியாளர் கூறினார். ஹாக்கி விளையாட்டில் இருந்த ஆர்வத்தால் அந்த எடையை தூக்க முயற்சித்தேன். முடியவில்லை. அந்த பாரம் முழுவதும் என்மீது விழுந்தது. உடனிருந்த பயிற்சியாளர்கள் என்னை அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தனர்.
 உண்மையிலேயே என்னால் முடியவில்லை என்று கூறியதை கேட்டு, மீண்டும் அகாதெமி பக்கமே வராதே என்று முகத்தில் அடித்தாற்போல் கூறினார். ஆனால் சில வாரங்கள் கழித்து அகாதெமியிலிருந்து வந்த ஒருவர், தினமும் என்னை பயிற்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். "உன்னால் ஹாக்கி விளையாட முடியுமா? முடியாதா? என்பதை மட்டும் சொல்' என்று பல்தேவ் சிங் என்னிடம் கேட்டார். முடியும் என்றோ? முடியாது என்றோ? என்னால் சொல்ல முடியவில்லை. அப்போது என்னுடைய வயது 13.
 ஒரு நாள் அவரே என்னிடம் வந்து, "உன்னுடைய குடும்ப நிலைப்பற்றி எனக்குத் தெரியும். நீயாக முயற்சி செய்யாவிட்டால் என்னால் ஏதும் உனக்கு உதவி செய்யமுடியாது. உன்னுடைய ஆர்வம் எனக்கு தெரியும்' என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர் தீவிரமாக பயிற்சி பெறத் தொடங்கினேன். பயிற்சி முகாமில் இருந்தபோது எனக்கு முதன்முறையாக தேசிய அளவில் 2007-இல் அழைப்பு கிடைத்தது. அதற்கு தேவையான ஆவணங்கள், பாஸ்போர்ட் அனைத்தையும் பல்தேவ் சிங் சார் செய்து கொடுத்தார். தொடர்ந்து 14 வயதில் முதன்முறையாக 2008-இல் ரஷ்யாவில் நடந்த ஒலிம்பிக்ஸ் பந்தயத்தின்போது தேர்ச்சிப் பெற்று, இந்தியா சார்பில் விளையாடிய முதல் இளம் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றேன்.
 2009- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த சாம்பியன் சேலஞ்ச் விளையாடியபோது, அந்த ஆண்டின் இளம் வீராங்கனை என்ற பெருமை கிடைத்தது. 2010-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் அதிகமான கோல்கள் போட்டு சாதனை படைத்தேன். இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றபோது முறையே வெண்கலம் (2014) மற்றும் வெள்ளி (2018) பதக்கங்கள் கிடைத்தன. ஆண்களுக்கு நிகராக மகளிர் ஹாக்கி அணியும் இந்தியாவுக்கு பெருமை தேடி தரும் என்ற நம்பிக்கை எங்களுக்குத் தோன்றியது.
 நான் விதியையும், கடின உழைப்பையும் நம்புகிறவள். ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருந்தாலும் அதை நிறைவேற்ற கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியுமென்று நம்புகிறவள் நான். வெற்றி பெற இதைவிட குறுக்கு வழி வேறு இல்லை. 12- ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்து பட்டம்பெற நினைத்தேன். தேசிய குழுவில் இடம் பெற வேண்டிய நிலையில் பி.ஏ. படித்து முடித்தேன்.

பல்தேவ் சிங் என்னை சந்தித்தபோது, "ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்த நீ, உன்னுடைய வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்ப்பதாக நினைக்கிறேன். தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்புள்ளது. அதேபோன்றுதான் விளையாட்டுத் துறையும். ஒருமுறை தோல்வி ஏற்பட்டால் மீண்டும் வெற்றிப் பெற வாய்ப்புகள் வரும். அதே சமயம் ஹாக்கி விளையாடுவதையும் நிறுத்தாதே' என்று அறிவுறுத்தினார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் படிக்க வேண்டிய அவசியமென்ன என்று தோன்றினாலும், கல்வி என்பது வாழ்க்கை முழுவதற்குமான முதலீடு என்றே கருதினேன். தொடர்ந்து விளையாடி வந்ததுடன் பல்தேவ் சிங் சொன்னபடி, மேலும் படித்து ஆங்கிலத்தில் மாஸ்டர் டிகிரி பெற்றேன்.
 விளையாட்டின் மூலம் கிடைத்த பணத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டைப் புதுப்பித்தேன். என்னுடைய பெற்றோர் வசதியுடன் வாழவும், என் சிறு வயது கனவுகளை நிறைவேற்றவும் தொடங்கினேன். இடையில் இந்திய ரயில்வேயில் வேலை கிடைத்தது. தற்போது இரண்டாவது முறையாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததோடு, கேப்டன் பொறுப்பும் கிடைத்திருப்பதால் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்'' என்கிறார் ராணி ராம்பால்.
 - பூர்ணிமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com