பெண்களை   உயர்த்துவோம்...  சமுதாயத்தை உயர்த்துவோம்...

பணக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், வீட்டில் பல வேலைக்காரர்கள் இருப்பார்கள்.
பெண்களை   உயர்த்துவோம்...  சமுதாயத்தை உயர்த்துவோம்...

பணக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், வீட்டில் பல வேலைக்காரர்கள் இருப்பார்கள். வீட்டு வேலைகள் எதையும் செய்யாமல் ஜாலியாக வாழலாம் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால் உலகின் "நம்பர் ஒன்' பணக்காரரான பில்கேட்ஸை திருமணம் செய்து கொண்ட மெலிண்டாவின் மன நிலை எப்படி இருக்கிறது?

திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி உறவு முறை எப்படி இருந்தது? குழந்தைகள் பிறப்புக்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளை யார் சுமந்தது குறித்து மெலிண்டா பில்கேட்ஸ் "உயர்த்தும் தருணம் - பெண்களை வல்லமைப்படுத்துவது உலகத்தை எவ்வாறு மாற்றுகிறது' (The Moment of Lift: How Empowering Women Changes the World) என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்த நூலில் மெலிண்டா தனது அனுபவங்கள் பலவற்றை வெளியிட்டிருந்தாலும், கணவன் - மனைவி உறவு, குடும்ப கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுக்கும் பல டிப்ஸ்களையும் இந்த நூலில் எழுதியிருக்கிறார்.

"மேற்கத்திய உறவுகளில் விட்டுக் கொடுப்பதும், பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதும், ஒருவரது சிரமங்களை தனது இணையருக்கு புரிய வைப்பதுமே குடும்பத் தேரைப் பக்குவமாக செலுத்த உதவும்' என்கிறார் மெலிண்டா. அவர் மேலும் கூறியதாவது:

""அப்பா ஒரு பொறியாளர். "கணினி மென்பொருள்' முதுகலைப் படித்து முடித்தேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. பில் கேட்ஸூம் நானும் ஏழு ஆண்டுகளாக பரஸ்பரம் காதலித்தோம்.

திருமணம் 1994-இல் நடந்தது. முதல் குழந்தை பிறந்ததும், குழந்தை பராமரிப்பிற்காக வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன்.

குடும்பம் என்றாகும் போது , பெண், முதலில் "மனைவி' என்ற பொறுப்பை ஏற்கிறாள். பிறகு அம்மாவாகப் பரிமாணம் பெறுகிறாள். பொறுப்புகளும் கூடுகின்றன. நாளடைவில் பொறுப்புகள் சுமையாகவும் மாறுகின்றன. அந்தச் சுமைகளைப் பங்கீட்டு முறையாக கையாண்டால், கணவன் - மனைவி உறவுகளில் விரிசல் ஏற்படுத்தாமல் பலப்படுத்தும்.

வீட்டில் கணவர் மட்டும் வேலைக்குச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சூழலில் எல்லா வீட்டு வேலைகளையும் மனைவிதான் செய்ய வேண்டிவரும். கிட்டத்தட்ட எல்லா மனைவிமார்களும், "நாம் என்ன பிறருக் காகவா வேலை செய்கிறோம். நம் சொந்த வீட்டிற்காக. குடும்பத்திற்காகத்தானே எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறோம்' என்ற நினைப்பில்தான் செய்கிறார்கள். ஆனாலும் சில தருணங்களில், "எதற்காக நாம் மட்டும் குடும்பத்திற்காக விழுந்து விழுந்து வேலை செய்ய வேண்டும். கஷ்டப்பட வேண்டும் என்று வெறுப்பு தானாகத் தோன்றும். அதுபோன்ற தருணங்களை நானும் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் அந்தத் தருணங்களை நான் திறம்பட கையாண்டிருக்கிறேன். அது எப்படி என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். இரவு உணவை நானும் கணவரும் குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். சாப்பிட்டு முடிந்ததும் கணவர், குழந்தைகள் கையைக் கழுவிவிட்டு அவரவர்கள் அறைக்குச் சென்றுவிடுவார்கள். நான்தான் பாத்திரங்களைக் கழுவ வேண்டும். டைனிங் டேபிளை சுத்தம் செய்ய வேண்டும். கழுவிய பாத்திரங்களைத் துடைத்து அவைகள் இருந்த இடங்களில் வைக்க வேண்டும். இந்த வேலைகளை முடிக்க பதினைந்து நிமிடங்கள் பிடித்தன. தினமும் இது வாடிக்கையாகப் போய்விட்டது.

"தினமும் இதே கதைதானா' என்ற தார்மீகக் கோபம் என் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அது வெடித்தே விட்டது. அன்று இரவு உணவு முடிந்து கணவர் குழந்தைகள் உட்பட கைகழுவி அவர்கள் அறைகளுக்கு புறப்பட எத்தனித்தார்கள். இடுப்பில் கை வைத்துக் கொண்டு கொஞ்சம் கடுகடுப்புடன், " நான் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பும் வரை, நீங்கள் அனைவரும் அங்கேயே அமருங்கள்' என்றேன். "நான் எதற்காகச் சொல்கிறேன்' என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். உடனே ஆளுக்கொரு வேலையைச் செய்ய ஆரம்பித்தார்கள். பில்கேட்ஸ் பாத்திரங்களைக் கழுவ.. குழந்தைகள் சாப்பாடு மேஜையை சுத்தம் செய்ய.. எல்லா வேலையும் சில நிமிடங்களில் முடிந்தது. அனைவரும் ஒரே சமயத்தில் டைனிங் ஹாலிலிருந்து அறைகளுக்கு கிளம்பினோம்.

இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கணவன் மனைவிக்கு உதவி செய்யும்போது இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்படுவதுடன், மனதைத் திறந்து பரஸ்பரம் பேச வாய்ப்பும் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல எத்தனைதான் பிசியாக இருந்தாலும் கணவன் மனைவியுடன் கொஞ்ச நேரம் செலவு செய்வது சந்தோஷமான வாழ்க்கைக்குப் பலமான அஸ்திவாரமாகிறது.

பொதுவாக திருமண பந்தத்தில் பாலின சமத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலின சமத்துவம் தேவையானதும் கூட. முதல் முறையாக நான் கருவுற்றபோது, பில்கேட்ஸ் வேலை நிமித்தமாக ஓய்வில்லாமல் பயணம் செய்து கொண்டே இருப்பார். அந்தச் சந்தர்ப்பங்களில் தொலைபேசி, அலைபேசி மூலம் பேசிக் கொள்வோம். தம்பதிகளிடையே தொடர்ச்சியாக நிகழும் உரையாடல்களால் உறவு இன்னும் பலப்படும்.

மகள் ஜென்னை மழலையர் பள்ளியில் சேர்த்தபோது பள்ளிக்குக் கொண்டு விடுவதும், பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வருவதும் மிகப் பெரிய பளுவுள்ள வேலையாக எனக்கு மாறியது. வீட்டிலிருந்து பள்ளிக்குப் பயண நேரம் 40 நிமிடமும், திரும்பி வர 40 நிமிடமும் பயணிக்க வேண்டும். இது நாளடைவில் சிரமமாகத் தோன்ற, எனது உணர்வுகளை பில்கேட்ஸிடம் பகிர்ந்து கொண்டேன். எனது சிரமங்களைப் புரிந்து கொண்ட அவர், வாரத்தில் சில நாட்கள் குழந்தையை அவரே பள்ளியில் விட்டு, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வர ஆரம்பித்தார். சில வாரங்கள் ஓடின. ஒரு மாற்றம் வந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்வதில் அம்மாக்களை விட அப்பாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. "இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்' என்று சில அம்மாக்களிடம் விசாரித்தேன். பில்கேட்ஸ் உங்கள் குழந்தையை பள்ளியில் விடுவதற்காக வருவதைக் கண்டோம். வீட்டில் கணவரிடம் "பில் கேட்úஸ தனது குழந்தையை தானே பள்ளியில் வந்து விடுகிறார். அழைத்துப் போகிறார். நீங்கள் ஏன் நம் குழந்தைகளை பள்ளியில் விட்டு பள்ளி முடிந்ததும் அழைத்து வரக் கூடாது' என்று கேட்டோம். வேறு வழியில்லாமல் கணவர் ஒத்துக் கொண்டார்' என்றார்.

பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதில் பில்கேட்ஸூக்கு வந்த மாற்றம், பிறருக்கும் ஒரு முன்மாதிரியாக மாறிவிட்டது. பல அம்மாக்களுக்கும் பொறுப்புகளின் சுமை குறைந்தது.

மெலிண்டா எழுதியிருக்கும் நூலில் இந்தியா, ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அவர் சந்தித்த பெண்களின் வல்லமை குறித்த வெற்றிக் கதைகளையும் பதிவு செய்ய மறக்கவில்லை. மெலிண்டாவின் இந்த புத்தகம் தமிழில் "பெண்களை உயர்த்துவோம்... சமுதாயத்தை உயர்த்துவோம்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com