சமையல்! சமையல்! ( 29/01/2020)

ராகி மில்க் ஷேக், ராகி ப்ரூட் புட்டிங், ராகி அடை புட்டு,  ராகி வெஜிடபிள் பக்கோடா  

ராகி மில்க் ஷேக் 

தேவையானவை 
கேழ்வரகு - 50 கிராம்
பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) - தலா 4
பேரீச்சை - 5
காய்ச்சியப் பால் - 200 மி.கி
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
சர்க்கரை - சுவைக்கேற்ப
செய்முறை: முதல்நாள்இரவு ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும். பின்னர், ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைக்கவும். பின்னர், இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும். அத்துடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும். சத்தான ராகி மில்க் ஷேக் தயார். ( விருப்பப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் அருந்தலாம்)

ராகி ப்ரூட் புட்டிங் 

தேவையானவை: 
கேழ்வரகு -200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
வாழைப்பழம் - 1 சிறு துண்டு
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
வறுத்த எள் - 2 மேசைக்கரண்டி
ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை - சிறிது
பொடியாக நறுக்கிய பேரீச்சை - 4
நெய் - 3 தேக்கரண்டி
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
பட்டைப் பொடி - அரைத் தேக்கரண்டி
பால் - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் அரை மேசைக்கரண்டி நெய்விட்டு வாழைப்பழம், தேங்காய்த் துருவலை வதக்கவும். ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ளவற்றில் பால், நெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து கிளறி, பின் சிறிது சிறிதாக பாலை சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலக்கவும். அடிப்பாகம் தட்டையான கிண்ணத்தில் நெய் தடவி கரைத்துள்ள மாவைக் கொட்டி இட்லி பாத்திரத்தில் ( கிண்ணத்தில் மூடி போட்டு) வேக வைக்கவும். சுமார் 20 நிமிடம் கழித்து எடுத்து தலைகீழாக கவிழ்த்து ஆறியதும் துண்டு போடவும். சுவையான ராகி ப்ரூட் புட்டிங் தயார்.

ராகி அடை புட்டு 

தேவையானவை:
கேழ்வரகு மாவு - 1 கிண்ணம்
எள் - 3 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
ஊற வைத்து வேக வைத்த கருப்பு 
கொண்டைக் கடலை - 1 கிண்ணம்
பொடியாக நறுக்கி வெங்காயம் - 2
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி தழை - சிறிது
வெண்ணெய், நல்லெண்ணெய் - தலா 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: கேழ்வரகு மாவுடன் வறுத்த எள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு தளர்வாக பிசைந்து தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி அடைகளாக சுட்டெடுக்கவும். ஆறிய பின் சிறு துண்டுகளாக செய்து மிக்ஸியில் ஓடவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி உதிர்த்த அடை, கொண்டைக் கடலை, தேங்காய்த் துருவல், மல்லிதழை, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். விருப்பப்பட்டால் கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். ராகி அடை புட்டு தயார்.

ராகி வெஜிடபிள் பக்கோடா 

தேவையானவை: 
கேழ்வரகு மாவு - 1கிண்ணம்
அரிசி மாவு - கால் கிண்ணம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு பல் - 6
சோம்பு - 1 தேக்கரண்டி
புதினா - 1 கைப்பிடி அளவு
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம், கோஸ், கேரட் துருவல் சேர்த்து - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: இஞ்சி, பூண்டு, சோம்பு, புதினா கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், கேழ்வரகு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கோஸ், துருவிய கேரட், உப்பு, நெய் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பிசறி வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ராகி பக்கோடா தயார்.
-பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com