நேரமில்லை என்று கூறும் தோழியரே.. ஒரு நிமிடம்.!

உங்கள் உடலுக்குள்ளேயே இயங்கும் இயற்கை கடிகாரம் எழுப்பியதும் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து அனைவரையும் கவனித்து பம்பரமாக சுழலும் நீங்கள், எப்பொழுது உங்கள் ஆரோக்கியத்தை
நேரமில்லை என்று கூறும் தோழியரே.. ஒரு நிமிடம்.!

உங்கள் உடலுக்குள்ளேயே இயங்கும் இயற்கை கடிகாரம் எழுப்பியதும் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து அனைவரையும் கவனித்து பம்பரமாக சுழலும் நீங்கள், எப்பொழுது உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கப்போகிறீர்கள்?
கடைசியில் நீங்கள் மிச்சம் வைப்பது மூட்டுவலி, முதுகுவலி, சர்க்கரைநோய், மனஉளைச்சல் என்று பலப்பல.. இவற்றைத் தவிர்க்க நன்றாக சாப்பிடுங்கள் என்று கூறுவது வழக்கமான ஒன்று.
வீட்டிலிருந்தாலும், அதற்கும்.. எதற்கும் நேரமில்லை என்று கூறுபவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி போதுமான நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
அந்த நேரத்தில் வீட்டிற்குத் தேவையான சத்துமாவு பொடிகள், சத்தான துவையல் மற்றும் ஊறுகாய் வகைகளை தயாரித்துக் கொள்ளலாம். நம் குடும்பத்திற்கு நாமே செய்த உணவுகள் என்ற மனமகிழ்ச்சி உங்களை மேலும் உற்சாகப்படுத்தும். குடும்பதினருக்கு எல்லாமுமாக இருக்கும் நீங்கள் முழு ஆரோக்கியத்துடனும் இருக்கலாம்.
* எழுந்தவுடன் சமையலறைக்குள் நுழையும் பெண்கள், காலையில் ஏதாவது ஒரு சத்துள்ள பானத்தை குடித்துவிட்டு சமையல் வேலைகளைத் துவங்குவது நல்லது. இதனால், அன்று காலையில் செய்யவிருக்கும் வேலைகளுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும். 
* சமையல் அறையில், தினமும் சமைப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரங்களைத் தவிர, கூடுதலாக இருக்கும் அல்லது வெகு நாட்களாக உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பாத்திரங்களை அப்புறப்படுத்துங்கள். அல்லது, பாதுகாப்பாக துணிகளால் மூடி, மேலிருக்கும் பரண்களில் வைத்துவிடுங்கள். 
* குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் தட்டு, டம்ளர் போன்ற உணவருந்தும் பாத்திரங்கள் போக, விருந்தினர்கள் வரும்போது உபயோகப்படுத்துவதை மட்டும் தனியே எடுத்து, சுவர் அலமாரிகளில் மேல் தட்டுக்களில் வைத்துக் கொள்ளலாம். இதனால், தேவையற்ற அதிக பாத்திரங்களை சுத்தப்படுத்தும் வேலையை அதிகரிப்பதுடன் இடத்தையும் அடைத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம். 
* எந்த பொருட்கள் உடைந்தாலும், ஒரு பகுதி தொலைந்து போனாலும் அந்த பொருட்கள் உபயோகம் இல்லையென்றாலும், இருக்கட்டும் என்று சேர்த்து, சேர்த்து வைத்துக் கொண்டு இடத்தையும் அடைத்துக் கொள்வதுடன், தூசு சேர்ந்து, சுத்தப்படுத்தும் வேலையையும் அதிகப்படுத்திவிடும். எனவே, அவற்றைத் தவிர்க்கலாம். 
* வேலைக்குப் போகும் பெண்களுக்கு, வீட்டை சுத்தப்படுத்துவது என்பது ஒட்டு மொத்த மனஅழுத்தத்தையும் ஒன்றாக ஏற்படுத்தக்கூடிய விஷயம். பண்டிகை காலங்களில் மட்டுமாவது வீட்டை சுத்தப்படுத்தலாம் என்றாலும் முடியாது. விடுமுறை நாட்களில், வேறு வேலைகள் இருக்கும். இப்படியாக தள்ளிச் சென்று கொண்டே இருக்கும். ஆனால், சுத்தப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை மட்டும் நிரந்தரமாக மனதில் நெருடிக் கொண்டே இருக்கும். இந்த நிலையைத் தவிர்க்க, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு ஜன்னல், ஒரு கதவு, 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கப்போர்ட் என்று சுத்தப்படுத்தலாம். இதனால், எப்போதுமே வீடு சுத்தமாக இருக்கும் என்பதோடல்லாமல், ஒருவித மனபாரமும் நீங்கும். 

* மாத இறுதியில், ஒரு 15 நிமிடங்கள் ஒதுக்கி, சமையலறையிலேயே ஒரு சிறு குறிப்பேடு வைத்துக் கொண்டால், என்னென்ன பொருட்கள் தீர்ந்துபோகும் தருவாயில் இருக்கின்றன? எவை அதிகமாக வாங்கப்பட்டுவிட்டது? என்ன வாங்க வேண்டும் என்பதை உடனுக்குடன் குறித்துக் கொள்வதால், தேவையற்ற அலைச்சலும், நேர விரயமும் தவிர்க்கப்படும். 
* தேவைக்கு அதிகமான அல்லது முற்றிலும் தேவையற்ற மசாலா டப்பாக்கள் அல்லது பெட்டிகள் சுத்தப்படுத்தும் வேலையை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் வைக்கவேண்டும். 
* இரவு தூங்கச் செல்வதற்கு முன், 10 நிமிடங்கள் ஒதுக்கி, வரவேற்பறையில் அல்லது சமையல் அறையில் உள்ள மேஜைகளில் அங்கிருக்க வேண்டிய பொருட்களைத் தவிர மற்றவற்றை அன்றே அப்புறப்படுத்திவிடலாம். அதேபோல், தேவையற்ற பழைய துணிகள், குழந்தைகளுக்குப் பயன்படாத, சரியில்லாத ஆடைகளை அப்புறப்படுத்திவிடலாம். 
* முளைகட்டிய உணவுகள், பச்சை காய்கள் அல்லது பழங்கள் கலவை, கதம்ப சாதங்கள், வேகவைத்த உணவுகள், மாவு உருண்டைகள், சூப், கீரை உணவுகள் சமையல் வேலைகளை எளிமையாக்குவதுடன் சத்தான உணவுகளாகவும் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. 
* தினமும் செய்வதற்கு இயலாமல் போனாலும், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலாவது, ஏதாவது ஒரு வகையான ஊறுகாய், துவையல், பொடி, சத்து மாவு போன்றவற்றை செய்து வைத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 
* கூடுமானவரையில், துணி துவைப்பது, காயவைப்பது, வீடு பெருக்குவது, மாடிப்படி ஏறி இறங்கி வேலை செய்வது போன்றவற்றை பழகிக் கொண்டால், உடல் பலம் பெறுவதுடன், நீரிழிவு, இதய நோய்கள், மூட்டுவலி, உடல் பருமன் போன்றவை வராமலும் தடுக்கலாம். 
* இவற்றுடன் சேர்ந்து, பொழுதுபோக்கு அம்சங்களாக, தொட்டியில் செடிகள் வளர்த்தல், பிடித்த பாடல் கேட்டுக் கொண்டு வேலைகளை செய்தல், குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு சிறு சிறு வேலைகளை செய்தல், பிடித்த பாடலுக்கு நடனமாடுதல், நல்ல புத்தகங்களை வாசித்தல் போன்றவையும் மனதிற்குப் புத்துணர்வை அளிப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரவல்லவை. 
மனிதர்கள் நோயில்லாமல் வாழ முடியுமா என்றால்.. முடியும் என்பதுதான் உறுதியான பதில்.
ஆனால் அதற்கான ஒட்டு மொத்த காரணிகளும் நம்மிடம் தான் இருக்கின்றன. நம் மீதும், குடும்பத்தின் மீதும் அக்கறை கொண்டு, ஜீவசத்துகள் உள்ள உணவுக்கு மாறிவிட்டால் நிச்சயம் முடியும்.
மரபு சார்ந்த உணவுகள் அத்தனையையும் மறந்து விட்டு, மதி கெட்டு வேதி உலகில் அனைவரும் விழுந்து விட்டோம். இனியும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
நமது முன்னோர்களிடம் இருந்து நாம் பெற்றதை நமது சந்ததிக்கு கொடுத்தால் தான் நமது ஜென்மம் ஈடேறும்.
பழமைக்குக் திரும்பி புது வாழ்க்கையை அடைவது, பிரிந்த தாயை வந்தடையும் பிள்ளை போன்று உணர்வுப்பூர்வமானது, உண்மையானது, உயிர் வளர்ப்பது.

(அடுத்த இதழில்)
ப. வண்டார்குழலி இராஜசேகர், 
உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com