நெகிழி இல்லா உற்பத்திக் கூடம்

ராமநாதபுரத்தை தூய்மை, பசுமை மாவட்டமாக்க  மத்திய அரசு தூய்மை பாரத இயக்கத்தைக் கடந்த 2018- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
நெகிழி இல்லா உற்பத்திக் கூடம்


ராமநாதபுரத்தை தூய்மை, பசுமை மாவட்டமாக்க  மத்திய அரசு தூய்மை பாரத இயக்கத்தைக் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இயக்கத்தின் நோக்கப்படி நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத நிலையை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு நெகிழிப் பயன்பாட்டை குறைக்க ஆலோசனை வழங்கினால் மட்டும் போதாது...அதை செயலிலும் காட்டவேண்டும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், குயவன்குடியில் உள்ள உத்திரகாளி சுய உதவிக்குழுவின் தலைவரான ஜெயா என்பவரோ தானே முன்வந்து அதைச் செயல்படுத்திக் காட்டுவதுடன், அதன் மூலம் தன்னைச் சார்ந்துள்ள பெண்களுக்கு வருவாயையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

ராமநாதபுரத்தில் கடந்த 2019 -ஆம் ஆண்டு ஆட்சியரால் தொடக்கி வைக்கப்பட்ட பசுமை மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஆறுதல் பரிசு வென்றபோதுதான் ஜெயாவுக்கு நாம் ஏன் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையிலான தொழிலில் ஈடுபடக்கூடாது என்ற ஆர்வம் ஏற்பட்டதாம்.

கணவரைப் பிரிந்த நிலையில் இரு பெண் குழந்தைகளுடன் அன்றாட உணவுக்கே அல்லாடி வந்த நிலையில், தொழில் என்பது சாத்தியமா என்ற கேள்வியோடு குயவன்குடியில் தனது தையல் தொழிலையே நெகிழி இல்லாப் பொருள் உற்பத்திக் கூடமாக்கி சாதித்துக் காட்டியும் வருகிறார்  ஜெயா. இவர் சொன்னது: 

""மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள் 15 பேரின் உதவியோடு, சணலில் பைகள் தயாரித்து அதைச் சந்தைப்படுத்தி வருகிறோம், உற்பத்திக்கான மூலப்பொருளை, கோவையிலிருந்து வாங்குகிறோம். ஆரம்பத்தில் பெண்கள் பயன்படுத்தும் வகையிலான சணல் பைகளைத் தயாரித்தோம். பின்னர் அலுவலகம் செல்லும் பெண்களுக்கான உணவுப் பாத்திரங்களை வைக்கும் பைகளையும், அதையடுத்து சகலருக்கும் பயன்படும் சணல் பைகளையும் தயாரித்து வருகிறோம்.

இவ்வாறு சணல் மூலப்பொருள்கள் மூலம் 30 வகையான பைகளை தையல் கடை மூலம் தைத்து சந்தைப்படுத்தி வருகிறோம். அத்துடன் 10 வகையான அரசு அலுவலகக் கோப்புகளையும் சணல் மூலம் தயாரித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு விநியோகிக்கிறோம்.

 பள்ளிக்குழந்தைகளுக்கான பைகள் தொடங்கி, திருமணத்துக்கான தாம்பூலப் பைகள், நவராத்திரிக்கான பைகள் என திருவிழாப் பைகளைத் தயாரிக்கிறோம்.

கரோனா பரவல் தடுப்புச் சூழலுக்கு ஏற்ப முகக்கவசங்களைத் தயாரித்து அதை விநியோகித்து வருகிறோம். பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அனைத்து முகக்கவசங்களையும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலமே தயாரித்து விநியோகித்து வருகிறோம்.

பிளஸ் 2 வரையிலே படித்துள்ளேன். திருமண வாழ்வும் நலமாக இல்லை. இரு பெண் குழந்தைகளுடன் நோயுற்ற கணவருடன் கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்தில் கணவரைப் பிரியும் கட்டாயம் ஏற்பட்டது.  எனது உத்திரகாளி மகளிர் சுய உதவிக்குழுவினரும் உதவிபுரிகின்றனர்.  குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாதம்  குறைந்தது ஐந்தாயிரம்  கிடைக்கிறது. தொழிலை விரிவுபடுத்த தமிழ்நாடு தொழில் முனைவோர் பயிற்சி திட்டத்தில் கடனுதவி கோரியுள்ளேன். மானியத்தில் கடன் கிடைக்க அனுமதி கிடைத்தும் பணம் கைக்கு வந்து சேரவில்லை. பணம் வந்ததும், தற்போது 5 பெண்களைக் கொண்டு செயல்படும் எங்களது தொழில் 50 பெண்களுக்கு உதவும் வகையில் விரிவுபடுத்தப்படும்'' என்றார் நம்பிக்கையோடு.

 ஓயாத தையல் இயந்திர சத்தங்கள், அப்போது ஒருவருக்கு ஒருவர் கிண்டலும், கேலியுமாக வாழ்க்கை நிஜ சோகத்தை மறந்து மகிழ்வில் திளைக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர்....தாங்கள் தயாரிக்கும் சணல் பொருள்கள் வண்ணம் வண்ணமாகக் குவிந்து கிடக்கிறது. ஆம்..இந்த வண்ணப் பைகள் வெறும் பொருள்கள் அல்ல...ஜெயா போன்ற அடித்தட்டு பெண்களின் வாழ்க்கைக்கான நம்பிக்கையின் அடையாள அடித்தளங்கள்!

படம்: ஜெ.முருகேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com