பெண்களின் ஆட்சி!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் பெண்களின் ஆட்சி நடைபெறுகிறது.
பெண்களின் ஆட்சி!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் பெண்களின் ஆட்சி நடைபெறுகிறது.

பின்லாந்து நாட்டின் பிரதமர், 34 வயதுள்ள ஓர் இளம்பெண். சன்னா மரின். அவருடைய அமைச்சரவையில் 12 பெண் அமைச்சர்களும் 7 ஆண் அமைச்சர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

இக்காலத்தில் உலகின் பல நாடுகளில் பெண்கள்அரசியலுக்கு வருவது மிகவும் குறைவாக உள்ளது.

பெண்கள் அதிக அளவில்அரசியலில் ஈடுபடுவதும், அமைச்சரவையில் அதிக அளவில் இடம் பெறுவதும் பின்லாந்தில்தான்.

ஆம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பின்லாந்தில் தேர்தல் நடந்தது. சோசலிஷ ஜனநாயகக் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்தார் அன்ட்டி ரின்னே. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அஞ்சல்துறைப் பணியாளர்களின் சம்பளத்தை அவர் அதிரடியாகக் குறைத்தார். அதனால் எழுந்த போராட்டத்தைச் சரியாகக் கையாள அவருக்குத் தெரியவில்லை என்று எதிர்ப்பலை எழுந்ததால், பதவிவிலகினார்.

அவர் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர்தான் சன்னா மரின். அன்ட்டி ரின்னே பதவி விலகியதற்குப் பிறகு, பின்லாந்தின் பிரதமரானார் சன்னா மரின்.

சன்னா மரின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய இளம் வயதிலேயே அவருடைய தந்தை வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவர், தனது கல்விச் செலவுகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே பேக்கரியில் வேலை செய்தார். வார இதழ்களை விநியோகம் செய்தார். மேலாண்மை அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இளம் வயதில் இருந்தே அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது.

சன்னா மரினின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக உள்ள லி ஆன்டர்சன் 33 வயது இளம்பெண். சமூக அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர். இன்னோர் அமைச்சர் மரியா ஒஹிசலோ. உள்துறை அமைச்சரான அவர் சமூகவியல்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 32 வயதான கத்ரி குல்முனி பொருளாதாரப் பிரிவின் அமைச்சர்; துணை பிரதமரும் கூட. 55 வயதான பெண்மணி அன்னா மஜா ஹென்ரிக்சன் சட்டப் படிப்பு படித்தவர்.

உலகின் பிற நாடுகளில் இல்லாத அளவுக்கு பின்லாந்தில் மட்டும் பெண்கள் அதிக அளவில் அரசியலிலுல், நிர்வாகத்திலும் ஈடுபடுவதற்கு என்ன காரணம்? ஐரோப்பிய நாடுகளிலேயே முதன்முதலாக 1906 - ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை ஆகியவற்றை அளித்த நாடு பின்லாந்து. அதேபோன்று ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வேலை செய்கின்றனர். 1960 - ஆம் ஆண்டு பின்லாந்து தொழில்மயமாவதற்கு முன்பிருந்தே, பண்ணைகளிலும், விவசாய வேலைகளிலும் ஆண்களின் அளவுக்கு பெண்களும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். பின்லாந்தில் பெண்களின் ஆட்சி வெற்றிக் கொடிகட்டிப் பறப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். வீடுகளிலும் கூட பெண்கள் சம உரிமை பெற்று இருக்கிறார்கள். குழந்தைகளைப் பராமரிப்பது அங்கே ஆண்களின் வேலையும் கூட. பிறந்த குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை தாய் பராமரிக்கிறார்.

சன்னா மரின் அரசு சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேறு கால விடுப்பு 164 நாட்கள் என்று அறிவித்துள்ளது.

ஒரு குடும்பத்தில் உள்ள ஆணுக்கு 164 நாள்கள். பெண்ணுக்கு 164 நாள்கள் பேறு கால விடுப்பு. மொத்தம் 328 நாள்கள் விடுப்பு. பின்லாந்து ஆண்கள் தாயுமானவர்களாக இருக்கிறார்கள்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் "உலகத் தலைவர்கள் அமைப்பில்' சமீபத்தில் சன்னா மரின் பேசும்போது, "" உலகின் சமகாலப் பிரச்னைகளாக தட்பவெப்பநிலை மாறுதல், பாலினச் சமத்துவம், சமூக நலம் ஆகியவை உள்ளன. பழைய தலைமுறையினர் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதற்காக நாம் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியாது. பிறர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது. நாமே களத்தில் இறங்கிச் செயல்பட்டால்தான் உலகில் சமத்துவத்தைக் கொண்டு வர முடியும்'' என்றார்.


(படத்தில் இடமிருந்து வலமாக லி ஆன்டர்சன், கத்ரி குல்முனி, சன்னா மரின், மரியா ஒஹிசலோ)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com