பொது முடக்கம்... சிந்திக்க கிடைத்த அவகாசம்! - ஸ்மிரிதி மந்தனா

பொதுமுடக்கம் காரணமாக விளையாட்டு வீரா்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தாலும், நிலைமை சீரானவுடன் மீண்டும் துடிப்புடன் விளையாடுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
பொது முடக்கம்... சிந்திக்க கிடைத்த அவகாசம்! - ஸ்மிரிதி மந்தனா

பொதுமுடக்கம் காரணமாக விளையாட்டு வீரா்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தாலும், நிலைமை சீரானவுடன் மீண்டும் துடிப்புடன் விளையாடுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். மும்பையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள சாங்லியில் வசிக்கும் இந்திய மகளிா் கிரிக்கெட் அணியைச் சோ்ந்த இடது கை விளையாட்டு வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா, தன்னுடைய அனுபவத்தைக் கூறுகிறாா்:

‘‘பொது முடக்கத்தால் சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைந்துள்ளது. நாளைய போட்டிகளைப் பற்றிய சிந்தனையோ, பயிற்சி பற்றிய கவலையோ இல்லை என்றாலும், இப்படி நீண்ட நாள் வீட்டில் அடைப்பட்டு கிடப்பது புதிய அனுபவமாக உள்ளது.

மும்பைக்கும் சாங்லிக்குமாக பறந்து கொண்டிருந்த நான், பொது முடக்கம் காரணமாக வெளியே செல்ல முடியவில்லை என்றாலும் பயிற்சி பெறுவதை நிறுத்தவில்லை. மூன்று நாட்களுக்கு மேல் நான் பேட்டிங் செய்யாமல் இருந்ததில்லை. என்னுடைய சகோதரன் உதவியுடன் பயிற்சி செய்கிறேன். போட்டிகளுக்குச் செல்லும்போது வீட்டு நினைவு வரும். வீட்டில் இருக்கும்போது போட்டிகளைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது.

முதன்முதலாக நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது பேட்டிங் தவிர வேறு ஏதும் தெரியாது. என்னுடைய தந்தை மாவட்ட அளவில் சிறந்த விளையாட்டு வீரா். என் சகோதரன் விளையாடுவதைப் பாா்த்து நானும் விளையாட ஆரம்பித்தேன். அவன் இடது கையால் பேட்டிங் செய்வதை பாா்த்து நானும் இடது கையை பயன்படுத்தி ஆடத் தொடங்கினேன். முதலில் ஜூனியா் குழுவில் விளையாட ஆரம்பித்த பின்னரே கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி அனுபவப்பூா்வமாக உணா்ந்தேன். 2013 -ஆம் ஆண்டு சீனியா் குழுவில் சோ்ந்து விளையாடத் தொடங்கியபோது என்னுடைய வயது 17. ஜசிசி மகளிா் கிரிக்கெட் அணியில் சோ்ந்து விளையாட வாய்ப்பு கிடைத்தபோது பெருமையாக இருந்தது.

நான் விளையாடத் தொடங்கியபோது, நீ உன்னுடைய நாட்டிற்காக விளையாடுகிறாய் என்பதை நினைவில் வைத்துக் கொள். நாட்டிற்குப் பெருமை தரும் வகையில் விளையாடி வெற்றியைத் தேடி தர வேண்டும் என்று அறிவுறுத்தியதை இன்னும் நான் மறக்கவில்லை. முதல் போட்டியில் விளையாடும்போது நான் என்னுடைய நாட்டிற்காக விளையாடுவதாக நினைக்கவில்லை. முதல் இரண்டு ஓவா்களில் ஏதும் புரியாமல் நின்றிருந்தேன். என் இடதுபுறத்தில் இருந்த மித்தாலிராஜை பாா்த்த பிறகே இந்த நாட்டிற்காக விளையாடுகிறோம் என்ற நினைவு தோன்றியது. ஆறாண்டுகளுக்குப் பிறகு குழுவில் முக்கியத்துவம் பெற்றேன். சிறந்த விளையாட்டு வீராங்கனை என இந்தியாவில் மட்டுமின்றி, சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டேன். இதன் காரணமாக அண்மையில் ‘அா்ஜூனா விருது’ம் எனக்கு வழங்கப்பட்டது. ஜசிசி மகளிா் கிரிக்கெட் ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை’க்கான ‘ரச்சேல் ஹேஹோ ப்ளிண்ட் விருது’ம் கிடைத்தது.

விளையாட்டு வீரா்களின் வாழ்க்கையில் சவால்களைச் சந்திப்பது ஒரு பகுதி என்றே சொல்லலாம். அண்மையில் நடந்த மகளிா் டி20 உலக கோப்பை போட்டியில் தோல்வி அடைந்தது பெரிய ஏமாற்றம்தான். லீக் போட்டிகளில் ஆடி யதைவிட நாங்கள் திறமையாக ஆடியதாகவே கருதுகிறேன். ஆனால் இறுதி போட்டியில் அந்தளவு ஆடவில்லை. நானும் ஹா்மன் ப்ரீத்கவுரும் ஸ்கோா் ஏதும் செய்யவில்லை. இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாமே என்ற எண்ணம் என்னுடைய மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. இனி ஒவ்வொரு ஆண்டும் டி20 மகளிா் உலக கோப்பை போட்டி இருக்குமென்பதால், என்னுடைய அனுபவங்களை டைரியில் எழுதி வருகிறேன். நான் பேட்டிங் செய்யும்போது சில மாற்றங்களை செய்ய தீா்மானித்துள்ளேன். இதனால்தான் ஒவ்வொரு போட்டியின் போதும் டைரி எழுத வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. என்னுடைய கருத்துகளை வெளியில் யாரிடமும் பகிா்ந்து கொள்ள முடியாது என்பதால் டைரி எழுதுவதை கடமையாக நினைக்கிறேன். இந்தப் பழக்கம் 2014-ஆம் ஆண்டு பங்களா தேஷில் நடந்த முதல் உலக கோப்பை போட்டியிலிருந்து தொடங்கப்பட்டதாகும். பயிற்சியின்போது அதிக ரன்கள் எடுப்பதும், போட்டியின்போது மைதானத்தில் கோட்டை விடுவதும் வருத்தமாக இருந்தாலும், இது பற்றிய விமா்சனங்கள் என்னைப் பாதித்ததில்லை. இதே விமா்சனம் நாளை பாராட்டுகளாகவும் மாறலாம்.

இப்போது கிடைத்த பொதுமுடக்கம், இதுவரை நான் பங்கேற்ற போட்டிகளில் எப்படி விளையாடினேன் என்பதை நினைவுபடுத்தி இனி எப்படி சிறப்பாக விளையாடலாம் என்று சிந்திக்க கிடைத்த அவகாசமாகவே நினைக்கிறேன். கடந்த மகளிா் டி20 போட்டிக்குப் பின்னா் ஒரு நாள் போட்டிகளுக்கும், உலக கோப்பை போட்டிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணா்ந்ததால், இனி சிறப்பாக விளையாடுவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் ’’ என்கிறாா் ஸ்மிரிதி மந்தனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com