முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
பெங்களூரு நாகரத்னம்மா வாழ்க்கை படமாகிறது!
By - அ.குமார் | Published On : 29th July 2020 06:00 AM | Last Updated : 29th July 2020 06:00 AM | அ+அ அ- |

கர்நாடக சங்கீத கலைஞர், கலாசார ஆர்வலர், அரசவைக் கலைஞர் எனப் பல சிறப்பினைப் பெற்ற பெங்களூரு நாகரத்னம்மா, 1878-ஆம் ஆண்டு மைசூர் அருகே நஞ்சன் கூடு என்ற ஊரில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே கர்நாடக இசையை பயின்று, இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நாகரத்னம்மா, தமிழகத்தில் தியாகராஜர் சமாதி உள்ள திருவையாற்றில்தான் தன்னுடைய உயிர் பிரிய வேண்டுமென்பதற்காக அங்கு வந்து தங்கினார். திருவையாறு உற்சவத்தைத் தோற்றுவித்து, பிரபலப்படுத்த உதவினார். 1952-இல் காலமானார்.
அவரது விருப்பப்படியே அவரது உடல் திருவையாற்றில் அடக்கம் செய்யப்பட்டது.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் முழுவதும் கச்சேரிகளை நிகழ்த்தி ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்த இவர், அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் தங்கி வசித்து வந்தபோது, கச்சேரிகள் மூலம் கிடைத்த வருவாய்க்காக வருமான வரி செலுத்திய முதல்பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார்.
தென்னிந்தியாவில் ஹரிகதா காலட்சேபம் செய்வதிலும் பிரபலமாக விளங்கிய நாகரத்னம்மாவின் வாழ்க்கை வரலாற்றை 2007-ஆம் ஆண்டு வி.ஸ்ரீராம் "தி தேவதாஸ் அண்ட் தி செயின்ட்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார்.
ஆறாண்டுகளுக்கு முன் கன்னடத் திரையுலகில் பிரபலமான இயக்குநர் டி.எஸ். நாகாபரணா, இந்தப் புத்தகத்தை படித்தவுடன் நாகரத்னம்மாவின் வாழ்க்கையை திரைப்படமாக்க தீர்மானித்து, திரைக்கதை வடிவமைப்பை உருவாக்கினார். தயாரிப்பாளர்கள் யாரும் முன் வராததால் நாடகமாக மேடையேற்ற தீர்மானித்தார். எதிர்பாராத வரவேற்பு கிடைத்ததால், கடந்த ஆண்டில் பத்து தடவைக்கு மேல் நாடகம் மேடை ஏறியது.
நாகாபரணாவின் நண்பர்கள் மூலமாக இப்போது நாகரத்னம்மா வாழ்க்கை திரைப்படமாக தயாரிக்கப்படவுள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்திற்கு "வித்யா சுந்தரி பெங்களுரு நாகரத்னம்மா' என்று பெயரிட்டுள்ளார் இயக்குநர் நாகாபரணா. இசை தொடர்பான கதை என்பதால் பொருத்தமான நடிகையையும். இசையமைப்பாளரையும் தேர்வு செய்யும் மும்முரத்தில் உள்ள நாகா பரணா, அடுத்த ஆண்டில் படத்தை திரையிட தீர்மானித்துள்ளார்.