முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
சமயல்... சமயல்..: இந்த வாரம் அவல் ஸ்பெஷல்!
By - ஜோ.ஜெயக்குமார் | Published On : 29th July 2020 06:00 AM | Last Updated : 29th July 2020 06:00 AM | அ+அ அ- |

அவல் கேசரி
தேவையானவை:
அவல் - 2 கிண்ணம்,
நாட்டு சர்க்கரை - ஒரு கிண்ணம்,
முந்திரி - ஒரு தேக்கரண்டி,
நெய் - அரை கிண்ணம்,
ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை: அவல், முந்திரியை 2 தேக்கரண்டி நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில் அவலை சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் "கமகம' அவல் கேசரி ரெடி.
அவல் லட்டு தேவையானவை:
அவல் - 3 கிண்ணம்,
நாட்டு சர்க்கரை - ஒரு கிண்ணம்,
முந்திரி, திராட்சை - ஒரு கைப்பிடி,
ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி,
நெய் - முக்கால் கிண்ணம்.
செய்முறை: வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் அவலை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த அவலுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைஸôக அரைத்துக் கொள்ளவும். இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும் அவல் லட்டு தயார்.
அவல் - வெஜ் உப்புமா
தேவையானவை:
அவல் - 2 கிண்ணம்,
கேரட், உருளைக்கிழங்கு - தலா 1,
பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி,
பச்சைமிளகாய் - 4,
கடுகு - ஒரு தேக்கரண்டி,
கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி,
எண்ணெய் - 5 தேக்கரண்டி,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
கறிவேப்பிலை - அரை கிண்ணம்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, காய்கறிகள், பட்டாணி, நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், காய்கறிகள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும்.
காய்கள் வதங்கியதும் ஊறிய அவலைச் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். வாசனையில் மட்டுமல்ல.. சுவையிலும் அசத்தும் இந்த உப்புமா.
அவல் மோர்க்களி
தேவையானவை:
அவல் - 2 கிண்ணம்,
லேசாக புளித்த கெட்டி மோர் - ஒரு கிண்ணம்,
பச்சைமிளகாய் - 4,
கடுகு - ஒரு தேக்கரண்டி,
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி,
எண்ணெய் - 6 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு
செய்முறை: அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடிக்கவும். அவலுடன் மோர் மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, (மாவு தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும்) உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகும்வரை அடிக்கடி கிளறவும். கூழ் ஒட்டாமல் வந்ததும் சிறிது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.
அவல் புட்டு
தேவையானவை:
அவல் - ஒரு கிண்ணம்,
பொடித்த வெல்லம் - கால் கிண்ணம்,
தேங்காய்த் துருவல் - 2
தேக்கரண்டி, ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி,
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: அவலை நெய் விட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். பிறகு அதனுடன் தேங்காய்த்துருவல், வெல்லப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒருமுறை சுற்றி எடுக்கவும். இது புட்டு போன்று பொலபொலவென்று இருக்கும். விருப்பப்பட்டால் பாதாம், முந்திரி சேர்த்தும் பரிமாறலாம்.
அவல் பொரி உருண்டை
தேவையானவை:
அவல் பொரி - 3 கிண்ணம்,
வெல்லத்தூள் - ஒரு கிண்ணம்,
முந்திரி - ஒரு தேக்கரண்டி,
நெய் - 4 தேக்கரண்டி,
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி,
சுக்குத்தூள் - ஒரு தேக்கரண்டி,
வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா ஒரு கைப்பிடி.
செய்முறை: முந்திரி, அவல் பொரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெல்லத்தூளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி, அதனுடன் பொட்டுக்கடலை, அவல் பொரியைக் கலக்கவும். அவல் பொரி கலவையைப் பாகில் கொட்டிக் கிளறி, உருண்டைப் பிடிக்கவும். மாலை நேரத்துக்கேற்ற மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் இது.