குற்றவாளிகள் எண்ணிக்கை குறைக்க என்ன வழி ?

நீதிமன்றங்களில் குற்றவாளிகளின் வழக்குகள் குறைவதற்கு வழி தேடுகின்ற கேள்வியுடன் யோசித்துப் பார்த்தால் அதற்கான விடை  கல்விக் கூடங்களில் தான் கிடைக்கும் என்று தனது தீர்க்கமான முடிவை தெரிவிக்கிறார். 
குற்றவாளிகள் எண்ணிக்கை குறைக்க என்ன வழி ?

நீதிமன்றங்களில் குற்றவாளிகளின் வழக்குகள் குறைவதற்கு வழி தேடுகின்ற கேள்வியுடன் யோசித்துப் பார்த்தால் அதற்கான விடை கல்விக் கூடங்களில் தான் கிடைக்கும் என்று தனது தீர்க்கமான முடிவை தெரிவிக்கிறார் பள்ளி ஆசிரியையாக மாறியுள்ள முன்னாள் வழக்குரைஞரான வித்யாலட்சுமி. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் இவர். தற்போது, "மாத்தி யோசி' என்கிற யூ டியூப் -சேனல் மூலம் அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""நீதிமன்றங்களில் குற்றவாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றால் சிறிய வயதிலேயே பண்படுத்தினால்தான் அது சாத்தியம். அந்த தாக்கத்தில்தான் வழக்குரைஞர் பணியை ஒதுக்கி விட்டு காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளியின் கல்வி ஆலோசகராகவும், நீதி போதனை வகுப்பை பயிற்றுவித்து வருகிறேன்.

நேர்மறையான சிந்தனைகள் இளைய சமூகத்தை சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதனால் தான் "மாத்தி யோசி' என்ற யூடியூப் சேனல் வழியாக அந்த நம்பிக்கையை விதைக்கின்றேன். "கற்றலில் கேட்டல்' நன்று என்ற வாக்கிற்கிணங்க நம்பிக்கை விதைக்கும் விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பொதுமுடக்கம் அமல்படுத்திய நாள்களில் தொடங்கி நாள்தோறும் தினமும் ஒரு வீடியோ என பதிவேற்றும் செய்து வருகிறேன்.

குற்றவாளிக் கூண்டில் நிற்பதற்கு எது காரணம் என்கிற யோசனையில் நான் அவ்வப்போது ஆழ்ந்துவிடுவது உண்டு. அப் போது சிறிய வயதில் சரியாக வழிகாட்டுதல் கிடைக்காத காரணத்தினால் இவர்களின் இந்த நிலை என்பது எனது எண்ண ஓட்டம். அதுதான் என்னை இன்றைக்கு ஆசிரியையாக மாறவைத்து மாத்தி யோசி வரைக்கும் வழிநடத்திச் செல்கிறது. நற்பண்புள்ள, நேர்மறை சிந்தனையுள்ள சமூகமாக மாற்றுவதில் எனது பங்களிப்பும் இந்த சமுதாயத்திற்கு உண்டு'' என்கிறார்.

வித்யாலட்சுமியின் சொந்த ஊர் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூராகும். அருகே கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பும், புதுவை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும் பயின்றவர். பின்னர் முதுகலையில் சட்டப் படிப்பும் முடித்திருக்கிறார். மனிதவள மேம்பாட்டிலும், குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு என இரண்டிலும் முதுகலைப் பட்டங்களையும் பெற்று உயர்கல்வியாளராக திகழ்கிறார்.

சமயச் சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கிவரும் வித்யாலட்சுமி தன்னுடைய யூ-டியூப் சேனலில் நற்சிந்தனைகளை தரும் கதைகள், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நிகழ்வுகளையும், செய்திகளையும் கொடுத்து வருகிறார். மேலும் சமூதாயத்தில் நடக்கும் தவறுகளை கண்ணியமாய் சுட்டிக்காட்டுகிறார்.

சட்டம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் அத்துறை நிபுணர்களைக் கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இதுவரை 110-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமைகளில் மாணவ சமுதாயத்திற்கான கதைகளையும், ஞாயிற்றுக்
கிழமைகளில் ஏன்? எப்படி? என அறிவுத்திறன் வளர்க்கும் செய்திகளையும் வழங்குகிறார்.

சிறந்த புத்தகங்களை படிப்பதன் மூலமும், நல்ல கருத்துகளை கேட்பதன் மூலமும் நம் எண்ணம் புத்துணர்வு பெறுகிறது. அந்தப் புத்துணர்வு அளிக்கும் பணியை நான் செய்து கொண்டிருக்கிறேன்'' என்கிறார் இவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com