கணவனை மீட்டுவந்த நவீன சாவித்திரி!

பீஜப்பூர் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில், கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்த சந்தோஷ் என்பவரை, கடந்த மே மாதம் முதல் வாரத்தில், நக்சலைட்டுகள் சிலர் கடத்திச் சென்றனர்.
கணவனை மீட்டுவந்த நவீன சாவித்திரி!

பீஜப்பூர் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில், கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்த சந்தோஷ் என்பவரை, கடந்த மே மாதம் முதல் வாரத்தில், நக்சலைட்டுகள் சிலர் கடத்திச் சென்றனர். காணாமல் போன தன் கணவரை, ஊர் முழுவதும் தேடிய அவரது மனைவி சுனிதா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தினங்களுக்குப் பின்தான் சுனிதாவின் கணவர் நக்சலைட்களால் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.  உண்மையை அறிந்த சுனிதா, தன் கணவரை மீட்க களத்தில் இறங்கினார்.  மே 6-ஆம் தேதி சுனிதா, தன் 14 வயது மகள், உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் மற்றும் சில கிராமவாசிகளுடன், தன் கணவரை தேடி, காட்டிற்குள் சென்று மீட்டுவந்துள்ளார். இது குறித்து சுனிதா கூறுகையில், ""காய்கறி வாங்கச்சென்ற கணவர் வீடுதிரும்பாதது கவலையும், குழப்பமுமாக இருந்தது. எங்குத் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதனால், காவல் நிலையம் சென்று விஷயத்தை சொன்னேன்.  அவர்களும் தேடத் தொடங்கினர். அப்போதுதான் அவர்,  நக்சல்களால் கடத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. 

இதற்கு மேல்  யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை,  கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில்  எந்த பலனும் இல்லை.  ஏதாவது உடனடியாக செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என்னுடைய  மற்ற இரண்டு குழந்தைகளையும்  பீஜப்பூர் போலீஸ் லைனில் உள்ள அவர்களது பாட்டி வீட்டில்  விட்டுவிட்டு,  மூத்த மகளை துணைக்கு அழைத்துக் கொண்டு காட்டுக்குள் தேடி  கிளம்பினேன். இதையறிந்த, உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரும்,  எங்களது கிராமவாசிகள் சிலரும் எனக்கு  துணையாக என்னுடன் வந்தனர்.

சில பல போராட்டங்களுக்குப் பிறகு 4 நாள்கள் கழித்து என் கணவரை கண்டுபிடித்தோம். அதன்பிறகு அவரை கடத்திச் சென்ற நக்சல்களிடம் பேசினோம். என் கணவரை விட்டுவிடும்படி  வற்புறுத்தினோம்.

ஒரு கட்டத்தில், மனம் மாறிய நக்சல்கள்,  இனி  இவர், போலீசில் பணிபுரிய கூடாது.  மீறினால்  விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தனர்.

கணவரை அழைத்துக் கொண்டு  மே 11-ஆம் தேதி ஊர் திரும்பினோம்.  என் கணவருக்கு  மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவரின் வாக்குமூலம் வாங்கிச் சென்றுள்ளனர்.

நக்சல்களைச் சந்திக்க காட்டுக்குள்  செல்ல எப்படி தைரியம் வந்தது என எல்லோரும் கேட்கிறார்கள்.  கணவர் ஆபத்தில்  இருக்கிறார் என்று தெரிந்தபின், எந்தப் பெண்ணும்  அமைதியாக  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டாள்.  தன் கணவனை காப்பாற்ற  எந்தளவுக்கும் துணிந்து  செல்வாள். அதைத்தான் நானும் செய்துள்ளேன். அந்தச் சமயத்தில் வேறு எதையும் யோசிக்கக்கூட தோன்றவில்லை'' என்கிறார் சுனிதா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com