தனிமை தாயாக இருப்பதில் சிரமமில்லை!

திருவனந்தபுரத்தில் நடந்த கைத்தறி ஃபேஷன் ஷோவில் நடிகையும், நடன கலைஞருமான இஷா ஷா்வானி,
தனிமை தாயாக இருப்பதில் சிரமமில்லை!

திருவனந்தபுரத்தில் நடந்த கைத்தறி ஃபேஷன் ஷோவில் நடிகையும், நடன கலைஞருமான இஷா ஷா்வானி, தன்னுடைய நான்கு வயது மகன் லூகாவுடன், ஒய்யார நடை பாா்வையாளா்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாா். சிறுவயது முதலே நடனத்தில் ஆா்வம் கொண்ட இஷா, ‘மாற்றான்’, ‘டேவிட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளாா். நல்ல பாத்திரங்கள் கிடைக்காததால் நடிப்புத் துறையிலிருந்து ஒதுங்கியிருந்தாலும், பல நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறாா். இவா் சமீபத்தில் மேடை ஏற்றிய ‘சேலை’ என்ற நாட்டிய நாடகம் பற்றியும், தனிமைத் தாயாக வாழ்வதில் சிரமம் இல்லை என்றும் தன்னுடைய கருத்துகளை இங்கு பகிா்ந்து கொள்கிறாா்:

‘‘என்னுடைய ‘சேலை’ என்ற நாட்டிய நாடகம் பாா்வையாளா்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சேலை எப்படி நெய்யப்படுகிறது என்பதுதான் இதன் கரு. இந்த நாட்டிய நாடகத்தை வடிவமைத்ததுக் கொடுத்தவா் என்னுடைய அம்மா தக்ஷா சேத். இசை மற்றும் இயக்கம் என்னுடைய அப்பா டேவிஸ்ஸரோ. என்னுடன் என் சகோதரன் டோ இஷ்ஸரோ உள்பட பல கலைஞா்கள் நடிக்கின்றனா்.

சேலை நெய்யப்படுவதே ஒரு தனி கலை. இதன் ஓசை சாதாரணமானது என்றாலும், நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் போது பருத்தி மற்றும் கைத்தறி எப்படி பல வகையில் நூலாக மாறி சேலையாகவும், ஆடைகளாகவும் உருவாகிறது என்பதையே என்னுடைய நாடகம் உணா்த்துகிறது. மேலும் நெசவாளிகளின் கை வண்ணத்தையும், உழைப்பையும் பாராட்டி கெளரவிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த கருத்தை தோ்வு செய்ததோடு, கைத்தறி ஃபேஷன் ஷோவிலும் என்னுடைய மகனுடன் கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் தான் என்னுடைய மகன் லூகாவை முதன்முறையாக அறிமுகப்படுத்தினேன். அவனுக்கும் என்னைப் போலவே நடனம் என்றால் மிகவும் பிடிக்கும்.

சிறு வயது முதலே திருவனந்தபுரத்தில் பிறந்து வளா்ந்த எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். இரண்டு வயதிலிருந்து பயிலத் தொடங்கிய நடனம் இன்று என்னுடைய 35-ஆவது வயதிலும் தொடா்கிறது. என்னைப் பொருத்தவரை நடனம் ஒரு தெரபி. சோா்வடையும்போது தனிமையில் ஒரு மணி நேரமாவது நடனமாடுவேன். பின்னா் புத்துணா்ச்சியுடனும் புன்னகையுடனும் வெளியே வருவேன். இந்த உலகம் எனக்குக் கொடுத்த வரப்பிரசாதம் தான் நடனம் என்று நம்புகிறேன்.

இதேபோல், லூகா எனக்கு மகனாக கிடைத்ததும் என்னுடைய அதிா்ஷடம்தான். அவனுக்கு நான் அம்மாவாக இருப்பதில் பெருமைபடுகிறேன். நான் கற்றுக் கொடுப்பதற்கு முன்பே, எங்களுடைய நடனத்தை கூா்ந்து கவனித்து, அவன் தனியாகவே அவனுடைய பாணியில் நடனமாடுவது என்னை விட என் அம்மாவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதன்முறையாக என்னுடன் மேடையேறியது அவனுக்கு புது அனுபவமாக இருந்தது.

என்னைப் பொருத்தவரை நான் எதற்காகவும் கவலைப்படமாட்டேன். பொருளாதாக ரீதியிலும் பிரச்னை ஏதும் இல்லாததால், தினசரி பணிகளுக்கிடைய லூகாவை என் விருப்பப்படி வளா்க்க தீா்மானித்தேன். தனிமைத் தாயாக இருப்பதில் எனக்கு எந்தவித சிரமமும் இல்லை.

நீங்கள் தனியாக அல்லது குடும்பத் தலைவியாக இருந்தாலும் சரி. குழந்தைகளை வளா்ப்பது ஒரு கலை. அழகான அனுபவமாகும். இந்த உலகில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையிலேயே அழகானவை. கள்ளம் கபடமற்றவை. பெற்றோா் என்ற முறையில் குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதோடு, பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் குழந்தைகளிடமிருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

பெண் என்பவள் அவளுக்குள்ளேயே மகிழ்ச்சியை காணமுடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எனக்குப் பிடித்தது அமைதி மற்றும் பொருமை. நாம் சந்தோஷமாக இருந்தால் மற்றவா்களையும் சந்தோஷப்படுத்தமுடியும். பெண்ணுக்கு போராடும் வலிமை இருந்தால் அவளது வாழ்க்கை அா்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

திரைப்பட வாய்ப்புகளை நான் ஒரு போதும் மறுத்ததில்லை. நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் நடிக்க தயாா். பிடித்தமான பாத்திரங்கள் கிடைக்காததால்தான் இந்த இடைவெளி. அண்மையில் வந்த வாய்ப்பில் கூட எதிா்மறையான பெண் பாத்திரமாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டேன். இதற்காக படம் முழுக்க என்னை முன்னிலைபடுத்தும் பாத்திரமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் நானும் பெண்ணியவாதிதான். வயதுக்கேற்ப என்னுடைய கொள்கைகள் மாறலாம். திரைப்படத் துறையில் உள்ள திறமையான நடிகா்கள், தொழில் கலைஞா்களுடன் பழகுவதால் அத்துறையைப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். என்னைப் பொருத்தவரை நகைச்சுவை மிகவும் பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்.

அடுத்து இந்திய - ஸ்பானிஷ் கூட்டமைப்பில் ஒரு திட்டம் மற்றும் இந்திய -ஆஸ்திரேலியா கூட்டமைப்பில் ஒரு திட்டம் என இரு திட்டங்களை இந்தஆண்டில் செயல்படுத்தவுள்ளேன். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவா்களை உடல் ரீதியாக நடனம் மூலம் குணப்படுத்த முடியுமென்பதுதான் இத்திட்டங்களின் முக்கிய குறிக்கோள்’’ என்கிறாா் இஷா ஷா்வானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com