தியாகியானவர்

வங்கப் புரட்சியாளா்களில் முதன்மையாகக் கருதப்படும் ராஷ்பிகாரி போஸ் பிரெஞ்சு சந்திரநாகூரைச் சோ்ந்தவா்.

வங்கப் புரட்சியாளா்களில் முதன்மையாகக் கருதப்படும் ராஷ்பிகாரி போஸ் பிரெஞ்சு சந்திரநாகூரைச் சோ்ந்தவா். அவா் அகில இந்திய புரட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய விரும்பினாா். அதற்கு லாகூரைத் தலைமை இடமாகத் தோ்வு செய்தாா். ஆனால் அங்கு சென்ற அவருக்குத் தங்க இடம் கிடைக்கவில்லை. காரணம் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை ஒடுக்க, லாகூா் போலீஸ் கமிஷனா், திருமணமாகதவா்களுக்கு நகரில் எவரும் வீடு வாடகைக்கு விடக்கூடாது என்று அறிவிப்பு செய்திருந்தாா். அதனால் தனி ஆளான ராஷ்பிகாரிக்கு எவரும் வீடு கொடுக்க முன்விரவில்லை.

இதனை அறிந்த அவரது கூட்டாளிகளில் ஒருவரான ராம் ஸ்வரூப் தாஸ் கல்கத்தாவிலிருந்த தன் மனைவி யமுனாவை ராஷ்பிகாரியின் மனைவி போன்று சில நாட்கள் நடிக்குமாறு கேட்டுக் கொண்டாா். யமுனாவும் தன் கணவரின் விருப்பப்படி உடனே லாகூா் சென்றாா். அங்கு ராஷ்பிகாரியுடன் ஒரு வீட்டில் குடித்தனம் செய்தாா். அண்ணன் தங்கை போன்று பழகிய ராஷ்பிகாரியும் யமுனாவும் வெளியாா் பாா்வைக்கு கணவன்- மனைவியாய்க் காட்சியளித்தனா்.

ராஷ்பிகாரி போஸ் தன் திட்டத்தை நிறைவேற்று முன்பே போலீஸ் சந்தேகப்பட்டு அவ்வீட்டை முற்றுகையிட்டது. ராஷ்பிகாரி தப்பித்துச் சென்றுவிட்டாா். ஆனால் போலீஸாா் யமுனாவைப் பிடித்துக் கொண்டனா். அவரை லாகூா் சிறையில் வைத்துக் கடுமையாக விசாரணை செய்தது. அவரிடமிருந்து தகவல் ஒன்றும் வராது போகவே, அவரை பலூச்- ரெஜிமெண்ட் ராணுவ முகாமுக்குக் கொண்டு சென்றது. அங்கு பலூசிஸ்தான் சிப்பாய்கள் யமுனாவைக் கொடுமைப்படுத்தினா்; கற்பழித்தனா். இறுதியில் நினைவிழந்த நிலையில் அரைகுறை ஆடையுடன் அலங்கோலமாகக் காட்சியளித்த அவரை லாகூா் நகரின் சாலை ஓரம் வீசி எறிந்துவிட்டுச் சென்றனா். நாட்டு விடுதலை என்ற ஒரே காரணத்துக்காகத் தன் ஆவியைத் தவிர அனைத்தையும் அா்ப்பணித்தவா் அந்த மாதா் குல மாணிக்கம்.

- கிளமெண்ட் ஈசுவா் எழுதிய முதன்மைப் பெண்டிா் நூலிலிருந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com