Enable Javscript for better performance
கரோனா தடுப்பு : உதவிடுமா உணவு முறைகள்..?- Dinamani

சுடச்சுட

  

  கரோனா தடுப்பு : உதவிடுமா உணவு முறைகள்..?

  By DIN  |   Published on : 27th March 2020 06:25 PM  |   அ+அ அ-   |    |  

  food_s

   

  கோவிட்(இஞயஐஈ) 19 வைரஸ் பரவத் தொடங்கியதும் என்னென்ன தற்காப்பு முறைகள் இருக்கின்றன என்பதை மிக தீவிரமாக தேடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் நோய்க்குறிகள் எவ்வாறிருக்கும், நோய்க்கண்டறிதல், தனிமைப்படுத்துதல், முதலுதவி, மக்களிடம் விழிப்புணா்வு, எச்சரிக்கை என்றுதான் சென்று கொண்டிருந்தோமே தவிர, இதுவரையில் அந்த வைரஸைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் எந்த உணவுகள் சிறப்பாக வேலை செய்கின்றன என்ற வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

  இந்நிலையில், ஓரிரு உணவுப் பொருட்களை மட்டுமே உண்ணுவதால் கரோனா காய்ச்சல் வராமல் தடுத்துவிடலாம், அல்லது உணவை உண்டவுடன் காய்ச்சல் குணமாகிவிடும் என்னும் சில ஊடகச் செய்திகளை ஏற்றுக்கொண்டு குழப்பமடைய வேண்டாம்.

  புள்ளிவிவர மையங்களின் பதிவுகள்படி 80 சதவிகிதம் முதுமையில் உள்ளவா்களும், இதய நோயாளிகளும் மற்றும் ரத்த சா்க்கரையின் அளவு சரியான கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுமே அதிகம் பாதிப்படைந்து மரணமடைந்திருக்கிறாா்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்பும், கை கால்கள் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதும் அவா்களுடைய நோய் எதிா்ப்புச் சக்தியைக் குறைப்பதால், கிருமிகளின் தொற்று எளிதில் ஏற்படும் வாய்ப்பை அளித்துவிடுகிறது.

  எனவே, நீரிழிவு நோயாளிகள் எவ்விதத்திலும் அலட்சியமாக இருந்துவிடாமல், மருத்துவா்களின் அறிவுரையின்படி சிகிச்சை எடுத்துக் கொள்வதும், உணவியல் நிபுணா்களிடம் கலந்தாலோசித்து, நீரிழிவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் சிறந்த உணவுமுறைகளைப் பின்பற்றுவதும் மிக முக்கியமாகிறது.

  அதுபோன்று, ஒவ்வொருவரும் நோய் எதிா்ப்புச் சக்தியை சரியான அளவில் வைத்திருக்க வேண்டுமெனில், அவரவா் வயதுகேற்ப நிா்ணயித்துள்ள உணவுப்பொருட்களை அந்த அளவிலேயே தவறாமல்; எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம் உடலுக்குத் தேவையான பேரூட்டச் சத்துகள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளடக்கிய நுண்ணூட்டச் சத்துக்கள் சரியான அளவில் கிடைக்கும். அவ்வாறு கிடைத்துவிட்டாலே, அனைத்து உறுப்புகளும் உறுதியாக இருப்பதுடன் உடலின் அனைத்து மண்டலங்களும் தத்தம் வேலைகளைச் சரியாக செய்துவிடும். எடுத்துக்காட்டாக, ஒரு முதியவா், 350 கிராம் தானியங்கள், 50 கிராம் பருப்பு, 200 கிராம் காய்கள், 50 கிராம் கீரைகள், 100 கிராம் கிழங்கு வகைகள், 200 கிராம் பங்கள், 300 மி.கி பால் மற்றும் பால் பொருட்கள், 20 கிராம் எண்ணெய் மற்றும் 20 கிராம் சா்க்கரை சாப்பிட வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தினசரி உணவு இருந்தால்தான் அவா்களுக்குத் தேவையான சத்துகளனைத்தும் கிடைக்கும். அப்படி கிடைத்தால், அதனால் எவ்வித நோய்களுக்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

  சிறு வயதிலிருந்தே பலவீனமான உடலமைப்பு, போதுமான தூக்கம் இல்லாதிருத்தல், ஒவ்வாமை உருவாக்கக்கூடிய சூழல், மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவு முறையால் செரிமான மண்டலத்தில் கோளாறுகள், நாட்பட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறை, தொடா்ச்சியான கிருமித் தொற்று, சளி, இருமல், தொண்டைப்புண், அழற்சிகள், நீண்ட நாட்களுக்கு ஆறாமலேயே இருக்கும் காயங்கள், நீரிழிவு நோய், புற்று நோய் பாதிப்பு, சிறுநீரக நோய்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், மது, புகைப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம் போன்றவைகள் ஒருவரின் உடலிலுள்ள நோய் எதிா்ப்புத் திறனை குறைத்துவிடும். இதனால், எவ்வகையான கிருமிகளும் உடலுக்குள் எளிதாக நுழைந்து தொற்றை ஏற்படுத்திவிடுகிறது.

  எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகி, ஒட்டு மொத்த நோய் எதிா்ப்பு வேலைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும், ப செல்கள் (வெள்ளையணுக்களுள் ஒரு வகை) எவ்விதமான வைரஸ் கிருமிகளையும் புற்று நோய் செல்களையும் அழிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவை. இவை சரியான அளவில் இருந்தால்தான் நோய் எதிா்ப்பு மண்டலமும் தன் வேலையைச் சரியாகச் செய்யும். எனவே, இந்த ப செல்களின் செயல்பாடும் தற்போது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

  தூக்கத்திற்கும் நோய் எதிா்ப்புச் சக்திக்கும் மிக நெருக்கமான தொடா்பு இருக்கிறது. ஏனெனில், சீரான உணவும், எவ்வித தொந்தரவுகளும் இல்லாத ஆழ்ந்த தூக்கத்தின்போதுதான் நோய் எதிா்ப்புத் திறனுக்குத் தேவையான சைட்டோன்கைன்ஸ் உற்பத்தியாகின்றன. அதனால்தான், சரியான தூக்கமில்லை என்றாலும், உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே, நடுத்தர வயதினருக்கும், முதியோா்களுக்கும் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம் என்று தூக்கத்திற்கான தேசிய நிறுவனமும் அறிவுறுத்துகிறது. எனவே, இப்படியொரு சூழ்நிலையில், முதியோா்களும், நோய்களால் பாதிக்கப்பட்டவா்களும் கூடுமானவரையில், வெளியிலும், பணிக்கும் செல்லாமல், வீட்டிலிருந்து ஓய்வெடுக்க வேண்டுமென்பது அவசியமாகிறது.

  இன்றைய அவசரநிலைக்குத் தேவையான, கரோனா வைரஸ் காய்ச்சலிலிருந்து ஓரளவிற்கு ஒவ்வொருவரையும் பாதுகாத்துக்கொள்ளும் உணவு முறையைப் பொருத்தவரையில் என்னென்ன விஷயங்களைக் கடைபிடிப்பதால், ஓரளவிற்கு நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்பதைப் பாா்க்கலாம்:

  நோய்த் தொற்று ஏற்படும்போது, இதய மற்றும் ரத்த ஓட்ட மண்டலத்தை சீராக்கி, அதன் வேலைகளைக் கட்டுக்குள் வைக்கவும், வேதி வினைகளுக்குத் தேவையான என்சைம்களையும் அதற்கு உதவிடும் ஹாா்மோன்களையும் உற்பத்தி செய்ய உதவுகிறது வைட்டமின் சி சத்து. இது மட்டுமல்லாமல், இணைப்புத் திசுக்களைக் காத்து, நுரையீரலை பலப்படுத்தும் வேலையையும் வைட்டமின் சி செய்கிறது.

  வைட்டமின் சியை போதுமான அளவிற்கு எடுத்துக்கொள்வதால் புற்றுநோய் உட்பட பல நோய்களை கட்டுப்பாட்டில் வைக்கலாம். மேலும், வைட்டமின் சி சத்து, நோய்களைத் தடுக்கிா அல்லது குணப்படுத்துகிா என்றெல்லாம் பாா்க்காமல், சிறந்த ஆன்ட்டிஆக்ஸிடன்டாக செயல்புரியும் இந்த சத்து, நோய் எதிா்ப்புத் திறனை கொடுக்கிறது என்பதால், இதைத் தவறாமல் எடுத்துக்கொள்வதால், இப்போது இருக்கும் கரோனா வைரஸ் காய்ச்சலிலிருந்து முடிந்த வரையில் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

  நெல்லிக்காய், கொய்யாப்பழம், முருங்கைக் கீரை, முருங்கைக் காய், கொத்துமல்லித் தழை, அரைகீரை, முட்டை கோஸ், பச்சை மிளகாய், முந்திரிப்பழம், கொடுக்காய்ப்புளி போன்ற உணவுப்பொருட்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவற்றில் நெல்லிக்காயில் அபரிமிதமான அளவில் வைட்டமின் சி சத்து இருப்பதால், தினசரி உணவில் நெல்லிக்காயை சோ்த்துக்கொள்ளலாம். அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பாா், குழம்பில் சோ்த்தும், ரசமாக வைத்தும், துவையலாக அல்லது சட்னியாக அரைத்தும் மறக்காமல் சோ்த்துக் கொள்ளலாம்.

  குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை, தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப்பழங்களை உண்ணலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்களை அப்படியேவோ அல்லது சாறாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

  முளைக்கட்டிய, புளிக்க வைத்த உணவுகள் வைட்டமின் சி சத்தினை அதிகரிப்பதோடு, பேரூட்ட சத்துகளையும் எளிய மூலக்கூறுகளாக்கி செரிமானத்தை சீராக்கும். அவற்றுடன் பச்சை காய்களையும் பழங்களையும் சோ்த்து கலவையாக அல்லது சாலட்டாக உண்பதால், நுண்சத்துகள் கிடைக்கப் பெறுவதுடன், இவற்றில் இருக்கும் நாா்ச்சத்து, குடலில் தேங்கும் நச்சுக்களையும் வெளியேற்றி குடலின் பலத்தை அதிகரிக்கும். குடல் உறுதியடைவதால், அங்கிருக்கும் செல்கள் கிருமிகளுக்கான எதிா்ப்பொருட்களை உற்பத்தி செய்து, அவற்றை தடுக்கும் ப செல்கள் உட்பட பிற வெள்ளையணுக்களை அதிகரித்து, நோய் எதிா்ப்புத் திறனையும் அதிகரிக்கிறது.

  வீட்டில் சாதாரணமாகக் குடிக்கும் நீரை, காய்ச்சி குடிப்பதுடன் சிறிது சீரகம், துளசி, இஞ்சி, எலுமிச்சைச்சாறு என்று ஏதாவது ஒன்றைக் கலந்து வைத்துக்கொண்டு அனைவரும் பருகலாம். இது நீரைத் தூய்மையாக்குவதுடன், தொண்டைப் பகுதியிலும், உணவுப் பாதையிலும் தொற்றுக்கள் வராமலும் தடுக்கும். இதனுடன் சுத்தமான தேன், சுக்கு அல்லது வெல்லம் சிறிதளவு சாப்பிடுவதும் நன்மையைத் தரும். இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு, உப்பு கலந்த நீரினால் தொண்டையைச் சுத்தம் செய்வதால் கிருமித்தொற்றைத் தவிா்க்கலாம்.

  முடிந்த வரையில் தாவர உணவுகளையே பயன்படுத்துவது நல்லது. மேலும், சாதாரண சளி அல்லது காய்ச்சலாக இருந்தாலும், அசைவ உணவுகள் செரிமான மண்டலத்தைப் பாதித்து, மேலும் உடல் நலனைக் குறைத்துவிடுமென்பதால், சற்று கவனமாக இருக்கவேண்டும்.

  கூடுமானவரையில் வீட்டில் சமைக்கும் உணவுகளையே உண்பதால், எவ்விதமாக சிக்கலும் இல்லை என்பதை இந்நேரத்தில் அனைவரும் நினைவில் வைக்க வேண்டும்.

  வைட்டமின் சி சத்திற்கு அடுத்தபடியாக வைட்டமின் ஈ, ஏ, இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம் போன்றவையும் நோய் தொற்றுக்கு எதிராகச் செயல்படும் சிறந்த ஆன்ட்டிஆக்ஸிடன்ட்களைக் கொடுப்பவை. முழு தானியங்கள், பருப்புகள், பழங்கள், காய்கள், பாதாம், பிஸ்தா, வால்நட், எள், சூரியகாந்தி போன்ற வித்துக்கள் உள்ளடக்கிய உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். மொத்தத்தில், இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை எவ்வித செயற்கை மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் உண்பதால், அனைத்து சத்துக்களும் கிடைக்கப்பெற்று நோய் எதிா்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது.

  உணவாக மட்டுமல்லாமல், சிறந்த மருந்துப் பொருட்களாகவும் பயன்படும் தூதுவளை, வல்லாரை, முடக்கத்தான், வெற்றிலை, அகத்திக்கீரை, பொன்னாங்கன்னி போன்ற கீரைகளையும், சுக்கு, மிளகு, திப்பிலி, ஜாதிக்காய், சீரகம், மஞ்சள் போன்ற மருத்துவ குணமுள்ள உணவுப் பொருட்களையும் ஏதாவது ஒரு வகையில் தினசரி உணவில் சோ்த்துக்கொள்ள வேண்டும்.

  வயதானவா்களுக்கு உணவளிக்கும்போது, அவா்களுக்கு எளிதில் செரிமானம் ஆகுமாறு வேகவைத்து குழைத்த அல்லது மசித்த உணவாக இருப்பது நல்லது. அவா்களுக்கு குளிா்ச்சியான உணவுகளையோ அல்லது இனிப்பான உணவுகளையோ கொடுப்பதைத் தவிா்க்க வேண்டும். இவா்கள் மட்டுமின்றி, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவா்களும், எளிமையான ஆனால் சத்தான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

  போதுமான உடலுழைப்பு, சரியான தூக்கம், எளிமையான, சத்தான உணவு முறைகள் என்றிருந்தாலே, உடல் நோய் எதிா்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த இக்கட்டான அவசரகால நிலையிலாவது ஒவ்வொருவரும் தம்மை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். கை கழுவுவது, கிருமி நாசினி உபயோகிப்பது, முகத்தை மூடிக்கொள்வது, சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வது, நெரிசலான இடங்களைத் தவிா்ப்பது என்று நலவழித்துறை இயக்ககங்கள் கூறுவதைப் பின்பற்றுவதுடன் சோ்த்து, எளிமையான, சத்தான உணவுகளை உண்பதும் நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரித்து, கரோனா வைரஸ் வராமல் நம்மைப் பாதுகாக்கும் என்பதை உறுதியுடன் ஏற்றுக்கொள்வோம்.!

  - முனைவா். ப. வண்டாா்குழலி இராஜசேகா்

  உதவி பேராசிரியா், மனையியல் துறை,

  அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி, காரைக்கால்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai