சமையல் சமையல்

பப்பாளிக்காய் தோல் மற்றும் விதையை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும்.
சமையல் சமையல்

பப்பாளி கூட்டு

தேவையான பொருள்கள்:
பப்பாளிக்காய் - அரை கிண்ணம்
பயத்தம் பருப்பு - அரை கிண்ணம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1 அரைக்க:
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
சீரகம் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை: பப்பாளிக்காய் தோல் மற்றும் விதையை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைக்க வேண்டும். தேங்காய் துருவலுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பு, நறுக்கிய பப்பாளிக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து காய் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, பப்பாளிக்காய் துண்டுகளை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு சிறிது உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

அதில் அரைத்த தேங்காய், சீரகம் விழுதைச் சேர்த்து கிளறிவிட வேண்டும். கூட்டு மிக கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளலாம். தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்ட பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான பப்பாளிக்காய்க் கூட்டு தயார்.

பப்பாளி சாலட்

தேவையான பொருட்கள்:
பப்பாளி - 1 (செங்காய் பதத்தில் உள்ளது)
முளைக்கட்டிய பச்சைப்பயறு - முக்கால் கிண்ணம்
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி- பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
தேன் - 1 தேக்கரண்டி
உப்பு, நெய் - தேவைக்கேற்ப

செய்முறை: பப்பாளியை நறுக்கி இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்க வேண்டும். பின்னர் முளைக்கட்டிய பச்சைப் பயிறையும் வேக வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு இஞ்சி- பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்து கிளறி அப்படியே பரிமாற வேண்டும். சுவையான சாலட் ரெடி. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள். பிரெட், சப்பாத்தி.

பப்பாளி பொரியல்

தேவையான பொருள்கள்:
பப்பாளிக் காய் - 1
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - முக்கால் கிண்ணம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகப்பொடி - கால் தேக்கரண்டி
சோம்பு பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கொத்துமல்லி - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: பப்பாளிக்காயை தோல் நீக்கி கொள்ள வேண்டும். பொடியாக பொரியலுக்கு நறுக்குவது போல் நறுக்க வேண்டும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்க வேண்டும். தேங்காய்த் துருவல், மிளகாய் மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த கடுகு, உளுந்தம் பருப்பு, வற்றல், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தையும் வதக்கி, பப்பாளிக்காயைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிட வேண்டும். மஞ்சள்தூள், சீரகப்பொடி, சோம்புப் பொடி சேர்க்க வேண்டும். நன்கு புரட்டி திரும்ப வேகவிட வேண்டும்.

காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய், மிளகாய் சேர்க்க வேண்டும். நன்கு புரட்டி விட வேண்டும். நறுக்கிய கொத்துமல்லி இலை சேர்க்க வேண்டும். சுவையான சத்தான பப்பாளிக்காய் பொரியல் ரெடி.

பப்பாளி குருமா

தேவையான பொருள்கள்:
பப்பாளிக்காய் - அரை கிண்ணம்
எண்ணெய் - இரண்டு குழிக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1
அண்ணாசிப் பூ - 1
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி - ஒன்று ( நறுக்கியது)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சோம்புத் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - 1 டம்ளர்

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் , அண்ணாசிப் பூ, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

பின், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பப்பாளிக் காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். பின் மஞ்சள் தூள், சோம்பு தூள், சீரக தூள், தனியாதூள், உப்பு சேர்த்து கிளறி தேங்காய்ப் பால் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும் பின் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com