கோடையில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்!

கோடையில் நார்சத்துக்களும் நீர்சத்துக்களும் நிறைந்த உணவுகள் மிகமிக அவசியம். இவற்றால் தாக வேட்கை, உடல் நீர்வறட்சி, நீரிழப்பு மட்டுமல்ல உடல் பருமன், முகப்பரு, கட்டிகள், முடி உதிர்வு, கல்லீரல் கணைய நோய்கள
கோடையில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்!


கோடையில் நார்சத்துக்களும் நீர்சத்துக்களும் நிறைந்த உணவுகள் மிகமிக அவசியம். இவற்றால் தாக வேட்கை, உடல் நீர்வறட்சி, நீரிழப்பு மட்டுமல்ல உடல் பருமன், முகப்பரு, கட்டிகள், முடி உதிர்வு, கல்லீரல் கணைய நோய்கள், யூரிக் ஆசிட் தொந்தரவுகள், சோர்வு, ரத்த கொதிப்பு, உடல் கொழுப்பு, மலச்சிக்கல், உடல் சூடு என பல பல நோய்களும் தொந்தரவுகளும் அகலும்.

அதிலும் பக்குவமான உணவை தேர்ந்தெடுத்து, சரியான முறையில் தயாரித்து பருகுவதால் மற்ற சத்துக்களுடன் நோய் எதிர்ப்பு சத்துக்கள் அபரிமிதமாக நமக்கு கிடைக்கும்.

எங்கும் அலையாமல் நமது அருகில் எந்த பராமரிப்பும் இல்லாமல் நம்மை சுற்றியுள்ள பல மூலிகைகள், கீரைகள், காய்கள், நமது பாரம்பரிய உணவுகளான அரிசிகள், சிறுதானியங்கள் மட்டுமே இவற்றிற்கு போதுமானது.
சிறுதானியங்களில் அதிக சத்துகளை கொண்ட தானியம் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கும் ஒன்றுதான் கம்பு. இதனில் நாட்டுக்கம்பில் உடலுக்கு தேவையான சத்துகள் அதிக அளவில் உள்ளதுடன் நோய்யெதிர்ப்பு ஆற்றலும் அதிகம் கொண்டிருக்கக்கூடிய தானியம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது.

கோடைக்கு மிகசிறந்ததும், அதேசமயம் விலை மலிவானதும் கூட. எல்லோராலும் மிக எளிமையாக தயாரிக்கக்கூடியது. இதில் தயாரிக்கப்படும் கம்மஞ்சோறு, கம்மங்கூழ் உடல் உறுதியை அளிக்கக்கூடியது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சரிவிகித ஊட்டச்சத்துகள் நிறைந்த நார்ச்சத்துகள் மிகுந்த எளிமையான காலை உணவாக இது இருக்கும்.

முதல்நாள் சிறிது நேரம் கம்பு மாவினை ஊறவைத்து பின் அடுப்பில்வைத்து நன்கு காய்ச்சி வெந்தவுடன் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி மண்பானை நீரில் வைக்கவேண்டும். பின் மறுநாள் தேவையான உருண்டைகளை எடுத்து நன்கு கரைத்து அதனுடன் மோர், சின்னவெங்காயம், உப்பு சேர்த்து பருக ருசி அபாரமாக இருக்கும். உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும்.

அதேபோல் முழு கம்பை ஒன்றிரண்டாக உடைத்து இரண்டு அல்லது இரண்டரை பங்கு நீரூற்றி வேகவைத்தால் கம்பன்சோறு தயார்..

கோடை காலத்தில் அவ்வப்பொழுது மதியம் வெள்ளை அரிசி உணவிற்கு பதில் இதனை எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு தெம்பை கொடுக்கும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. சாம்பார், குழம்பு, ரசம், மோர் என எல்லாவற்றிற்கும் ஏற்றது.

அரிசியில் தயாரிக்கப்படும் நீராகாரத்தில் பல பல சத்துக்கள் உள்ளன. குறிப்பாக மற்ற உணவுகளில் அதிகம் கிடைக்காத வைட்டமின் பி சத்துகளும் உடல் எளிமையாக உட்கிரகிக்கக்கூடிய மற்ற சத்துகளும் நிறைந்துள்ளது. மெக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, பொட்டாசியம் சத்துகளும் உடலுக்கு தேவையான மற்ற நுண்ணூட்ட சத்துகளும் உள்ளது. இதனை பருகுவதால் உடல் பலப்படும். நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க தேவையான தெம்பினை அளிக்கும், மலச்சிக்கல், வாய் புண், வயிற்று புண், சரும நோய்கள், உடல் பருமன், ரத்தக்கொதிப்பு போன்றவை நீங்கும். பிரசவித்த தாய்மார்களுக்கு பால்சுரப்பை அதிகரிக்கும் சிறந்த உணவு.

இவ்வளவு சத்துகளும் சாதாரணமாக கிடைக்கும் அனைத்து அரிசியிலும் தயாரிக்கப்படும் நீராகாரத்தில் கிடைக்குமா?

கட்டாயம் இல்லை. இயற்கை முறையில் விளைந்த பட்டை தீட்டப்படாத பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்படும் நீராகாரத் திற்கு தான் இவ்வளவு சிறப்பும்.

எந்த சத்துகளும் இல்லாத மாவுச்சத்தினை மட்டும் அதிகம் கொண்ட ரசாயனங்கள் மூலம் விளைந்த பட்டை தீட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்படும் நீராகாரம் உடல் பருமனை அதிகப்படுத்துவதுடன் தேவையில்லாத ஊளை சதையினையும் அதிகரிக்கும். மேலும் ரசாயன நச்சுக்கள் நொதித்த இதனை உட்கொள்வதால் வயிற்றுப்புண், மலச்சிக்கல், தேவையில்லாத கொழுப்பு, சாத்துப்பற்றாக்குறை என பல உடல் உபாதைகளும் அதிகரிக்கும்.

பாரம்பரிய அரிசிகளில் தூயமல்லி, கிச்சிலிச்சம்பா போன்ற வெள்ளை அரிசியைவிட சிகப்பு நிறத்தை கொண்ட பட்டை தீட்டப்படாத மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம், பூங்கார் போன்ற அரிசிகளில் தயாரிக்கப்படும் நீராகாரம் உடலுக்கு சிறந்த ஊட்டத்தை அளிக்கும் அரிசிகள். அபாரமான நோய் எதிர்ப்பு சத்துகளை கொண்டிருக்கக்கூடிய சிறந்த பாரம்பரிய உணவாகவும் உள்ளது.

இந்த அரிசிகளில் நீராகாரம் செய்ய முதலில் மூன்று மணி நேரம் அரிசியை நீரில் ஊறவைக்க வேண்டும். பின் ஒரு மண்சட்டியில் ஒன்றிற்கு நான்கு பங்கு நீரூற்றி சிறுதீயில் வேகவிடவேண்டும். நன்றாக வெந்த பின் அடுப்பை அனைத்து அரிசி சாதத்தை ஆறவிடவேண்டும். நன்றாக ஆறியபின் சுத்தமான நீரினை சாதத்தில் ஊற்றி இரவு வைத்துவிடவேண்டும். மறுநாள் காலை பழையசோறு தயார். இதனை நன்கு கரைத்து மோர், உப்பு, சின்னவெங்காயம் சேர்த்து பருகவேண்டும். காலையில் இந்த நீராகாரத்தை பருக உடல் குளிர்வதோடு பலம்பெறும். இதற்கு இணையான காலை உணவு கிடையாது. தயாரிப்பதும் மிக எளிமை, சத்துகளும் மிக அதிகம். காலை அவசரத்திற்கு சிறந்த உணவு. உடல் குளிர்ச்சிக்கு பழங்கள், கீரைகள் மற்றும் காய்களும் நமக்கு அதிகமாக உதவுகிறது.

நீர்சத்துகள் நிறைந்த காய்களை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது. அதிலும் பச்சை மிளகாய், வரமிளகாயை தவிர்த்து குறுமிளகை அதிகம் சமையலில் பயன்படுத்துவதும், புளிக்கு பதில் தக்காளி, கொடம்புளி, எலுமிச்சை ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்தது. இதனால் உடலின் உஷ்ணத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

வைட்டமின் சி சத்துகள் நிறைந்த பழங்கள், நமது சுற்றுவட்டத்தில், காலத்திற்கேற்ப கிடைக்கக்கூடிய பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.

பொதுவாக சந்தைகளில் கிடைக்கும் முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரைகளில் அதிக ரசாயனங்கள், நச்சுகள் நிறைந்த பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டிருக்கும். இவற்றிற்கு மாறாக அகத்திக்கீரை, முருங்கைக்கீரை அல்லது சாலை ஓரங்களில் கிடைக்கும் குப்பைக்கீரை, சாரணை, மூக்கிரட்டை, அம்மான்பச்சரிசி கீரை, ஆரைக்கீரை, கீழாநெல்லி, மணத்தக்காளி கீரை ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதிலும் சிறப்பு நாமே வீட்டில் கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, வெந்தயக்கீரை போன்று எளிமையாக வளரும் கீரைகளை வளர்த்து உண்டு ஆரோக்கியத்தை பெறலாம். இந்த கீரைகளை சாறெடுத்தும் அருந்தலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். இவையெல்லாமே உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது, உடலை குளிர்வித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.

கீரை சாறு செய்ய ஒரு கையளவு கீரையையும் அதனுடன் சமபங்கு தேங்காய் துருவலையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இவற்றை நன்கு அரைத்து சாறெடுத்து அதனுடன் தேவையான அளவு தேன்/நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த் தூள், சுக்கு தூள் சேர்த்து கலந்தால் சுவையான, சத்தான கீரை பானம் தயார்.

கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் பல வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி, ரோஜாப் பூ, சங்கு புஷ்பம், மல்லிகை போன்ற பூக்களையும் தேநீராக பருகலாம். இவையனைத்தும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கொண்டிருக்கக்கூடிய மலர்கள். இதற்கு இணையான உணவுகளை எந்த தேநீர் கடைகளிலும், அங்காடிகளிலும் கூட பெறமுடியாது.. வீட்டில் அழகுக்காக இருக்கும் இவை உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளிக்கொடுக்கும் அற்புத பூக்கள்.

அன்றாடம் எலுமிச்சை சாறு, வெந்தய குடிநீர், சீரக குடிநீர் போன்றவற்றையும் தவறாமல் எடுத்துக்கொள்ள உடலில் நீண்ட நாட்களாக இருக்கும் பல தொந்தரவுகள், நோய்கள் மெல்ல குறைவதை காணலாம். கோடைக்கு மட்டுமல்ல மற்ற காலங்களிலும் இயற்கையாக நமக்கு கிடைக்கும் இந்த உணவுகளை அன்றாடம் உணவாக பயன்படுத்த ஆரோக்கியம் மேம்படும். மனமும் புத்துணர்வுபடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com