தூய்மைக் காவலர்!

வானத்திலிருந்து  பூமாரி பொழிந்தனர் வெற்றி  வாகை  சூடியதற்காக அல்ல. கரோனா  என்ற கண்ணுக்குத் தெரியாத  அரக்கனை வீழ்த்த நம் தூய்மைக்
தூய்மைக் காவலர்!



வானத்திலிருந்து  பூமாரி பொழிந்தனர் வெற்றி  வாகை  சூடியதற்காக அல்ல. கரோனா  என்ற கண்ணுக்குத் தெரியாத  அரக்கனை வீழ்த்த நம் தூய்மைக் காவலர்கள்  செய்து  கொண்டிருக்கும்  மகத்தானப் பணிக்கு, உயிரைப் பணயம்  வைத்து   அவர்கள் செய்து கொண்டிருக்கும் சேவைக்காக.  இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும்  இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய பணி அளப்பரியது.  அந்த வகையில்  நான் பணியில் இருந்தபோது  நடைபெற்ற சில நிகழ்வுகளை இந்தத் தருணத்தில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.

2004,  டிசம்பர்  26-ஆம்  தேதி  ஆழிப் பேரலை  தமிழ் நாட்டுக் கடற்கரைகளைப் புரட்டிப்  போட்ட நாள்.

எங்கு பார்த்தாலும்  உயிரற்ற  உடல்கள்.. இடிந்த கட்டடங்கள்..  கடலில் செல்லும் நாவாய்கள்  கட்டடத்தின்  மேல் ஏறி நின்று கொண்டிருந்தன.

அப்பொழுது  பேரூராட்சியின் இயக்குநராகப் பணியாற்றி கொண்டிருந்தேன். கடற்கரை ஓரமாய்  இருந்த  பேரூராட்சிகள்  அனைத்தும்  சின்னாபின்னமாகக் காட்சி அளித்தன.  எங்கும் நாற்றம், குப்பை கூளங்கள், இடிபாடுகள்,  அதனூடே சிக்கிக் கொண்டிருந்து  உடல்கள்.

26-ஆம் தேதி  மதியத்திற்குப்  பின் ஒவ்வோர்  பேரூராட்சியிலிருந்தும் தொலைபேசி  வந்த வண்ணம்  இருந்தன.  மீண்ட  மக்களுக்கு  உடனடியாக  உணவும், தங்கும்  வசதிகளும் செய்து தரப்பட்டன.

27-ஆம் தேதி சென்னையிலிருந்து  துறை செயலர் சாந்தா  ஷீலா நாயருடன் நானும் உடன் சில அலுவலர்களும்  புறப்பட்டோம், நாகப்பட்டினத்தை நோக்கி..

வழியில்  செல்லும் பொழுதே  அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு துப்பரவுத் தொழிலாளர்களுடன்  உதவிப் பொறியாளர்,  மேஸ்திரி  சகிதம் அனைத்து  உபகரணங்களுடன்  வேளாங்கன்னி பேரூராட்சி  அலுவலகத்திற்கு வரப்  பணித்தேன்.

டிராக்டரில்  அனைத்து  உபகரணங்கள்  மற்றும் மக்களுக்கு உடனடித் தேவையான  பொருட்களுடன்  சுமார்  800 பேர், 200 பேரூராட்சியிலிருந்து வந்திருந்தனர்.

மதுரை  மற்றும்  திருநெல்வேலிப்  பகுதிகளில் இருந்தவர்கள் கன்னியாகுமரிக்கும்,  சென்னைப் புறநகர்,  காஞ்சிபுரம்,  வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  கடலூருக்கும் சென்று பணியாற்றப் பணித்தேன்.

எனக்கு வேளாங்கன்னி முதல்  கல்லாறு வரையிலான  7 கிராமங்கள் சீர் செய்ய அளிக்கப்பட்டது.  உடனடியாக வேளாங்கன்னிக்கு விரைந்தேன்.  ஆட்கள் தயார் நிலையில் இருந்தனர்.  இடிபாடுகளில்  சிக்கி இருந்த உடல்கள் அகற்றப்பட்டன.  கடற்கரை சீரானது.

29-ஆம் தேதி  திடீரென்று  வேறொரு  சுனாமி எச்சரிக்கை  வந்தது.  அனைத்து மக்களையும் பாதுகாப்பான  இடங்களுக்கு அனுப்பி  வைக்கும் பொறுப்பும் உடன்  சேர்ந்தது.  அனைவரும் பத்திரமாக பாதுகாப்பான  இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.  பணிக்காக வந்தவர்களையும்  உடனடியாக பாதுகாப்பு  இடங்களுக்குச்  செல்லப் பணித்தேன்.  அனைவரும் டிராக்டரில் ஏறிப்  பயணித்தனர்.

அனைவரும் சென்றுவிட்டார்களா என்று  கடற்கரைப் பக்கம்  சென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  என் அருகே  ஒரு டிராக்டர் வந்தது.  டிராக்டரில்  சுமார் 20 துப்புரவு காவலர்கள்,  ஆணும், பெண்ணுமாக  இருந்தார்கள்.  அவர்கள் அனைவரும்  டிராக்டரைவிட்டு  இறங்கி  விட்டார்கள்.  பாதுகாப்பான இடங்களுக்குப் போகச் சொன்னால்  இங்கே  ஏன் வந்தீர்கள்?  என்று  கடிந்து கொண்டேன். 

"அம்மா  உங்கள் வண்டி  கடற்கரையை நோக்கிச் சென்று  கொண்டிருந்ததைப் பார்த்தோம்.  உங்கள்  உயிருக்கு  முன்னால்  எங்கள் உயிர்  பெரிதல்ல. அதனால் அம்மாவிற்குப் பாதுகாப்பாக   இருக்க,  எங்கள் டிராக்டரைத் திருப்பிக் கொண்டு  வந்தோம்'  என்றனர்  ஒட்டுமொத்தக் குரலில்.

வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து இரவுப் பகல்  பாராமல் உழைத்து உதவிக்கரம்  நீட்டும்  இவர்கள் தங்கள் உயிரையும்  பொருட்படுத்தாமல் எனக்காக கசிந்து உருகியதை  நினைத்த பொழுது என் கண்கள் கசிந்தன.

அதன்பின் 2005-இல் குடியரசு  தினத்தன்று  அனைத்துத் தூய்மை பணியாளர்களுக்கும்  மாவட்ட   ஆட்சித் தலைவரைக் கொண்டு சால்வை அணிவிக்கப்பட்டது.  இவர்களது  சேவையைப் பாராட்டி  முதல் அமைச்சர் சிறப்பு  கருணைத் தொகையாக  ரூபாய் 2000 சுனாமி  சீரமைப்பில்  பணிபுரிந்த பணியாளர்களுக்கு  வழங்கினார்கள்.

2005,  நவம்பர்  இறுதி வாரம்,  அப்பொழுதிருந்த  மாநகராட்சி  மண்டலம்  9 -இல் வெள்ள நிவாரணப் பணிக்காக  என்னை நியமித்திருந்தார்கள்.  வெள்ளம் சூழ்ந்திருந்த பகுதிகளில்  இருந்த மக்கள்  பாதுகாப்பான  இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  எங்கள்  பகுதியில்  இருந்த  சுரங்கப்பாதை  முழுவதும் தண்ணீர்.  இரவு 11 மணியிலிருந்து  தொடங்கி  மோட்டாரை  வைத்து நீரை அப்புறப்படுத்தி முடிக்கும்  பொழுது  காலை 4 மணியாகியது. 

அதன்பின் கோதண்டராமர்  குளத்தின்  பின் பகுதியில்  நீரை வெளியேற்ற வேண்டிய சவாலான  பணி.  நீர் வெளியேறுவதற்கு  வழி இல்லை. மாம்பலத்தில்  பெருவாரியாக  இருந்த  வெள்ளநீர்  குளத்தில்  வந்து சேர்ந்து  அந்தப் பகுதி முழுக்க  முதல்மாடி  வரையில்  தண்ணீர்  ஏறிக்கொண்டிருந்தது.

எப்படி  நீரை  வெளியேற்றுவது,  தீயணைப்பு  வண்டிகள் மூன்று, பணியமர்த்தப்பட்டன. அதன்பின், சோழிங்கநல்லூர்  பேரூராட்சியிலிருந்து ஒரு வண்டி  வரவழைக்கப்பட்டது.  ஆனால்  வெள்ள
நீர்  வடிந்தபாடில்லை.  வடிகால்கள்  அனைத்தும்  அடைத்துக் கொண்டிருந்தது. என்ன செய்வது  என்று தெரியாமல்  வெள்ள நீரையும்,  கழிவுநீர் செல்லும்  குழாயையும்  பார்த்துக் கொண்டிருந்தோம்.

திடீரென்று  அங்கு பணியாற்ற  வந்திருந்த  துப்புரவுப் பணியாளர்களில் ஒருவரான பென்சிலம்மா, " என் அருகில்  வந்து  என்னம்மா வெள்ள நீர் வடியவில்லை  என்று கவலையாய்  இருக்கிறதா?'  என்றார்  தெலுங்கில்.

நான் தலையை  ஆட்டினேன்.  "நான் ஒரு யோசனை சொல்லட்டுமா'  என்றார். "சரி' என்றேன்.  "இங்கிருந்து  அடையாறு  ஆற்றிற்கு  எத்தனை  சைபன்கள்' என்றார்.  உடனே  அங்கிருந்த  பொறியாளர், "25  வரை இருக்கும்'  என்றார். 

உடனே பென்சிலம்மா சொன்னார், "அம்மா ஒவ்வொரு  அடைப்பையும்  சரி செய்துவிட்டால் தண்ணீர் வடிந்துவிடும்.  ஆனால் அதற்கு  ஆட்கள்  வேண்டும்' என்றார். 

"ஆட்கள்  இருக்கிறார்கள், உடனே நடவடிக்கை தொடங்கலாம்'.  ஆற்றிற்கு தண்ணீர்  செல்ல  மோட்டார்  பொருத்துங்கள்  என்றேன்.  400ட்ல் வேகத்தில் இயங்கும் மோட்டாரைப்  பொருத்த  ஒரு குழு சென்றது.

ஒவ்வொரு  பணியாளரும்  ஆண்கள் மற்றும் பெண்கள், படைவீரர்களைப் போன்று செயல்படத் தொடங்கினர்.  பெரிய பெரிய கழிகளைக்   கையில் எடுத்துக்  கொண்டு  பணியில்  இறங்கினார்கள். முதல்  அடைப்பு சரிசெய்யப்பட்டது.  அடுத்தடுத்து ஒவ்வொரு அடைப்பும் சரி செய்யப்பட்டு வெள்ளநீர்  மோட்டார்  மூலம்  அடையாறு  ஆற்றில்  வெளியேற்றப்பட்டது.  3 மணி  அளவில்  வெள்ளநீர்  அனைத்தும்  வடிந்துவிட்டது. அந்தப் பகுதியிலிருந்த மாமி ஒருவர்,  அவர் நன்றியை  வெளிப்படுத்தும் விதமாக, எங்கள் அனைவருக்கும்  காபி  கொண்டு வந்து கொடுத்தார்.  

பென்சிலம்மாவின்  சமயோஜித  புத்தி  அந்த சூழலில் வெள்ளநீரை வெற்றிகரமாக  வெளியேற்றியது.  அவரை  அழைத்துப்  பாராட்டிய  பொழுது வெட்கத்தினால்  முகம் சிவந்தார் 45 வயது மதிக்கத்தக்க  அந்த பென்சிலம்மா.
தினமும் காலையில்  தெருக்களை  இடுப்பை வளைத்துத் துடைப்பம்  கொண்டு சுத்தம் செய்யும்  இவர்களை  யாரும் கண்டுகொள்வதில்லை.  இவர்கள் பணி குறித்து யாருக்கும் தெரியாது.   

கரோனாவுக்காக மட்டுமல்ல, எப்போதுமே    சில பகுதிகளில் தூக்கத்தை தொலைத்து இரவிலும்  சுத்தம் செய்து  கொண்டிருக்கும்  இவர்களது  பணியை ஊரார் நினைப்பது  சுலபம்.  அதனால்தான்  சுத்தம் செய்த  பகுதிகளில்  உடனே குப்பையைக் கொட்டி  அசுத்தம்  செய்கின்றார்களோ  இவர்களை  நினைக்க நெஞ்சு  பொறுக்குதில்லையே!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com