கதை சொல்லும் குறள் - 22: ஊருக்கே பயன்படும்  ஊருணி!

ரத்தின சபாபதி என்றால் தமிழ்நாட்டில் அவ்வளவு பிரபலம். பாரம்பரியம் மிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாத்தா சபாபதி 1942-இல் சிறிய அளவில் சிமெண்ட் தொழிற் சாலையைத் தொடங்கினார்.
கதை சொல்லும் குறள் - 22: ஊருக்கே பயன்படும்  ஊருணி!

ரத்தின சபாபதி என்றால் தமிழ்நாட்டில் அவ்வளவு பிரபலம். பாரம்பரியம் மிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாத்தா சபாபதி 1942-இல் சிறிய அளவில் சிமெண்ட் தொழிற் சாலையைத் தொடங்கினார். கஜேந்திரன் சிமெண்ட்ஸ் முதலில் தமிழ்நாடு என்று தொடங்கி இன்று இந்தியா முழுவதிலும், வீடுகள் மற்றும் வானுயர்ந்தக் கட்டடங்கள் வரை கட்டப்படுவதற்கு உபயோகிக்கப்படும் ஒரு முக்கியமான பொருளாகிவிட்டது.

சபாபதிக்கு, அருணாச்சலம் செட்டியார் பால்ய நண்பராக இருந்தார். அவரோடு பர்மாவுக்குச் சென்று வட்டித் தொழிலில் ஈடுபட்டு, அதனால் பெரும் பொருளை ஈட்டி, அங்கே கலவரம் தொடங்குவதற்கு முன்னரே, தன் மனைவியின் உடல்நலம் கருதித் தமிழ்நாட்டிற்குத் திரும்பினார் சபாபதி. நண்டும் சிண்டுமாக ஆறு குழந்தைகள். அதில் ஐந்து பெண்கள். ஒரே ஒரு மகன் சங்கரன் சபாபதி. தன் செல்ல மகனின் பெயரில்தான் சிமெண்ட் தொழிற்சாலையைத் தொடங்க எண்ணினார். ஆனால் கஜேந்திரன் என்பது வலிமையான சின்னம் என்பதால் கஜேந்திரன் சிமெண்ட் அண்டு கோ என்ற பெயர் இடப்பட்டது.

தொழில் பெருகப் பெருக பணம் மலையாகக் குவிய ஆரம்பித்தது. தக்க வயதில் சங்கரனுக்குத் திருமணத்தை முடித்தார், அதைக் காணவே உயிர் வாழ்ந்ததுபோல திடீர் என்று ஒரு நாள் மாரடைப்பால் மாய்ந்துவிட்டார்.
இருபத்து ஆறு வயதிலேயே குடும்ப பாரத்தோடு, வியாபாரத்தையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலைக்கு சங்கரன் தள்ளப் பட்டார். ஆனால் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? அவரின் மேற்பார்வையில் தொழில் பன்மடங்கு பெருகியது. ஒரு பெண், ஒரு ஆண் என்று அளவான குடும்பம். மகன் ரத்தின சபாபதி, ஆண் அழகன். பண்பில் இமயம், ஈகையில் கர்ணன், அவன் சென்ற இடமெல்லாம் சிறந்தது, தொட்டது எல்லாம் வைரமாக மாறியது.

இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், டென்ட்டல், கேட்டரிங்,ஃபேஷன் டிசைனிங் என்று கல்வித்துறைகள் எல்லாம் ரத்தின சபாபதி பெயரில் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமா, "ரத்தினா சபா', தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு என்று எங்கும் நிறைந்திருந்தது ரத்தின சபாபதி பெயரில் இயங்கிய நிறுவனங்கள்.

சங்கரன் சபாபதிக்கு வயது எண்பத்தைந்து தொடங்கி விட்டது. முன்பு போல ஓடி, ஆடி வேலை பார்க்க முடியவில்லை.
""ரத்தினா''
""என்னப்பா''
""நான் கொடைக்கானலில் இருக்கும் நம்ம பங்களாவுக்குச் சென்று ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்''.
""தாராளமாகப் போய் வாருங்கள் அப்பா, நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். இந்த மாதக் கடைசியில் நான் உங்களோடு வந்து ஒரு நான்கு நாள்கள் தங்குகிறேன்''.
""டேய் ரத்தினா, உனக்கு இந்த ஆவணி வந்தால் வயசு முப்பத்து ஐந்து முடிகிறது. இன்னும் கல்யாணம் செஞ்சுக்காமக் காலத்தைக் கழிக்கிறே. உன் வயசில் எனக்கு நீயும் உன் தங்கையும் பிறந்து விட்டீர்கள். எத்தனையோ பேர் உனக்குப் பெண் கொடுக்க வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆனால் நீ பிடி கொடுக்க மாட்டேங்கறே. எனக்கு உன் பிள்ளைகளைக் கண்ணாரப் பார்க்க ஆவலா இருக்குடா''.
""அப்பா, அதான் உங்க மக தங்கத்தின் பிள்ளைகளைப் பார்த்துட்டீங்களே, அது போதாதா'' என்று ரத்தினம் வேடிக்கையாகக் கேட்க,
""அது சரி எப்ப இந்தப் பேச்சை எடுத்தாலும், ஏதாவது பதிலைச் சொல்லி என் வாயை அடச்சிடறே. மலைபோலச் சொத்து இருக்கு, அதை ஆள மருமகளும், மகன் வயித்துப் பிள்ளைகளும் வேண்டாமா?''
""சரிப்பா, கொடைக்கானலுக்குப் போய் வாங்க, நல்ல முடிவாச் சொல்கிறேன்''.
மகனின் இந்தப் பதிலைப் பெற்றுக்கொண்டு மனநிறைவோடு சங்கரன் கொடைக்கானலுக்குக் கிளம்பிச் சென்றார்.
மேனேஜர் மணியன், ரத்தினத்தின் முன் பவ்வியமாக, கைகளில் பல கோப்புகளை ஏந்தி நின்றார்.
முக்கியமான கோப்புகளுக்குக் கையெழுத்து இட்ட பிறகு, இந்தியா முழுவதிலும் ரத்தின சபா என்ற பெயரில் இயங்கிவரும் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் காப்பு மையங்கள், கவுன்சிலிங் சென்டர்ஸ், வெள்ள நிவாரண நிதிகள் என்ற பல அமைப்புகளுக்குச் சென்று சேரவேண்டியப் பணத்திற்கான காசோலைகளில் ரத்தினம் கையெழுத்திட்டார்.
அப்பப்பா, ஒரு மாதத்திற்கு இதற்காகவே ஒரு கோடிக்கு மேல் பணம் போய் விடுகிறது என்று மணியன் தன் மனதுக்குள் கணக்கிட்டார்.
ரத்தினத்தின் கம்பெனிகளில் வேலை கிடைத்தாலே, சொர்க்கத்தில் இடம் கிடைத்தாற்போன்ற மகிழ்ச்சியை இளைஞர்கள் அடைந்தனர். தன்னிடம் வேலை பார்ப்போருக்குக் கைநிறையச் சம்பளம், போனஸ், மருத்துவ வசதிகள், வசிப்பதற்குச் சொந்தக் குடியிருப்புகள், ஓய்வு ஊதிய வசதிகள் என்று பார்த்துப் பார்த்து ரத்தினம் செய்திருந்ததனால்தான் இப்படி மகிழ்ச்சியுற்றனர்.
தந்தைக்குக் கொடுத்த வாக்கின்படி, ஒருவழியாக ரத்தினம் கல்யாணம் செய்துகொள்ள இசைந்தார்.
"ரத்தினம்' அன்பொழுகத் தன் ஆசை மகனை அழைத்தார் சங்கரன்.
"சொல்லுங்கப்பா''
""இந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பார். வயது இருபத்தி ஐந்துதான், லண்டனில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பைப் படித்திருக்கிறாள். கங்கா ஸ்டீல் அண்டு கோவின் உரிமையாளர் சக்கரவர்த்தியின் ஒரே மகள், உனக்குச் சம்மதம் தானே.
ஒரு நிமிடம் புகைப்படத்தைப் பார்த்தான் ரத்தினம், ""அப்பா எனக்குச் சம்மதம்தான்; ஆனால் அதற்கு முன் நான் அந்தப் பெண்ணிடம் பேச வேண்டும்''.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர்களுடைய சந்திப்புக்கு நேரம் குறிக்கப்பட்டது.
லாவண்யா, லட்சணமாக அந்த ரவிவர்மாவின் ஓவியம் போலத்தான் இருந்தாள். ரத்தினத்திற்கு அவளைப் பார்த்தவுடனேயே பிடித்துப் போனது.

""லாவண்யா, நீ என்ன சாப்பிடுகிறாய்'' என்றான்.

""ஆப்பிள் ஜூஸ் மட்டும் போதும்'' என்றாள்.

ரத்தினத்திற்குக் காபியும், லாவண்யாவிற்கு ஆப்பிள் ஜூஸூம் வந்து சேர்ந்தது.

""லாவண்யா உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா'' என்றான் ரத்தினம்.

""பிடித்திருக்கிறது'' என்றாள்.

மனம் மகிழ்ந்த ரத்தினம் சில விஷயங்களை அவளோடு மனம் திறந்து பேசிய பிறகுச் சொன்னான்.

""லாவண்யா, எதிர்காலத்தில் நான் மக்களின் சேவைக்காகப் பலதிட்டங்களை வைத்திருக்கிறேன். என்னுடைய இந்தப் பரோபகாரச் செயல்களுக்காகப் பெரும் அளவில் பணத்தைச் செலவழிக்க நினைக்கிறேன். அதற்கு நீ ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. அதற்கு நீ ஒத்துழைப்பதாக உறுதி கூறினால், நான் நம்முடைய கல்யாணத்திற்குச் சம்மதிப்பேன்''.

""பெரும் பணம் என்றால்?'' என்று லாவண்யா இழுக்க..

""ஏன் என் சொத்துக்களை எழுதிக் கொடுக்கிறேன்'' என்று வைத்துக் கொள்.
""கலகலவென்று சிரித்தாள் லாவண்யா. நான் உங்கள் நல்ல மனதை இந்த நிமிடத்திலிருந்து காதலிக்க ஆரம்பித்து விட்டேன்'' என்றாள்.

மடமடவென கல்யாண வேலைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. வரலாறு காணாத திருமணத் திருநாள்களாக அவை இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டன. கல்யாணத்திற்கு ஒரு மாதமே இருந்தது. அப்பொழுது...

உலகமெங்கிலும் பய உணர்ச்சியைத் தூண்டியபடி வெளிவந்தது "கரோனா' என்கின்ற உயிர்க்கொல்லி நோய். சீனாவில் ஹுவான் நகரத்தில் உருக்கொண்டு, நாடு நாடாகத் தன் அழிவுக் கரங்களை நீட்டிச் சென்று பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொள்ளத் தொடங்கியது. இந்தியாவிலும் அந்த நோய் முகாமிட்டது.


எங்கும் எதிலும் எச்சரிக்கை நடவடிக்கைகள். முதலில் பள்ளிகள், கல்லூரிகள் என்று இந்தியாவின் எல்லா மாவட்டங்களும் தங்கள் மூடுவிழாவைத் தொடங்கின. பிறகு எல்லைகள் மூடப்பட்டன, போக்குவரத்து அமைப்புகள் அடைக்கப்பட்டன. கடைசியில் மக்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக்கூட அஞ்சித் தங்கள் இல்லங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்திய அரசாங்கம் உத்தரவு இட்டது.

சங்கரனுக்குத் தாங்கமுடியாத மனவருத்தம் ஏற்பட்டது. தன்னுடைய ஒரே மகனுக்குக் கண்கள் குளிரத் திருமணத்தை நடத்திப் பார்க்க முடியாமல் போனதே என்று மருகினார்.

""அப்பா, ஏன் அநாவசியமாகக் கவலைப்படுகிறீர்கள்? ஒரு ஆறுமாதம் போகட்டும் எல்லாம் சரியாகிவிடும், பின்பு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்''.

அப்பா பிரதமரின் நிவாரணநிதிக்கு பெரும் தொகையை கொடுக்க இருக்கிறேன்.

""ரத்தினா, இன்னும் உனக்குத் திருமணம் முடியவில்லை. கொஞ்சம் நிதானித்துச் செயல்படு''.

""அப்பா, நான் உங்கள் பிள்ளை, யோசிக்காமல் முடிவு செய்ய மாட்டேன்''.

இரண்டு நாள்கள் கழித்துத் தொலைக்காட்சிகளில், தினசரிப் பத்திரிகைகளில், முக்கியச் செய்தியாக கொட்டை எழுத்தில் பிரபல தொழில் அதிபர் ரத்தின சபாபதி, இந்திய கரோனா நிவாரண நிதிக்காக இருநூறு கோடி ரூபாயைக் வழங்கியிருக்கிறார் என்று வந்த செய்தியைப் பார்த்து உலக நாடுகள் அனைத்தும் வியந்தன.

""ஏண்டி, நமக்கு மாப்பிள்ளையா வரப்போறவன் பெரும் முட்டாளாக இருப்பான் போலிருக்கிறதே. இவ்வளவு பெரிய தொகையையா அள்ளிக் கொடுப்பான்; இப்படியே எதிர்காலத்திலும் அவன் செயல்பட்டால் நம்ம பொண்ணு நடுத்தெருவுக்கு வந்துடுவா போல இருக்கே''.

""அப்பா நிறுத்துங்க. தெரியாம பேசாதீங்க. என் வருங்காலக் கணவரின் பரந்த மனசைப் பார்த்து, பூரிச்சுப் போய் இருக்கேன். அவர் ஊருக்கு உபயோகப்படும் ஊருணியைப் போன்றவர். அள்ள அள்ள அது சுரந்துக் கொண்டே இருக்கும். உங்கப் பொண்ணும் அதிலே இருந்துப் பயன்படுவா, ஊருக்கே பயன்படும் அந்த ஊருணி எனக்கு உதவாமல் போயிடுமா'' என்று சொல்லிவிட்டுக் கம்பீரமாக நடந்து சென்றாள் லாவண்யா.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

( குறள் எண்: 215)

பொருள் :

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற அறிவாளனின் செல்வமானது, ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com