கதம்பம்!

இந்தியாவிலேயே முதல் முறையாக நிலத்தடி சுரங்க பணியில் இரு பெண்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
கதம்பம்!

நிலத்தடி சுரங்க மேலாளர்!


இந்தியாவிலேயே முதல் முறையாக நிலத்தடி சுரங்க பணியில் இரு பெண்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் நிலத்தடி சுரங்க மேலாளராக சந்தியா ரசகத்லாவையும், நிலத்தடி சுரங்க மேம்பாட்டு மேலாளராக யோகேஸ்வரி ரானேவையும் நியமித்துள்ளது இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.

2019-இல் சுரங்கச் சட்டம் 1952-இன்படி செய்யப்பட்ட திருத்தங்களில், பெண்கள் முறையான சான்றிதழ்களை பெறும் பட்சத்தில் நிலத்திற்கு மேல் அல்லது நிலத்திற்கு கீழ் என எந்தவிதமான சுரங்கத்திலும் பணியாற்றலாம் என்றது. இதன்படி தற்போது சந்தியாவும், யோகேஸ்வரியும் முறையான பயிற்சி பெற்ற பின் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சவால் விட்டு சாதனை படைத்தவர்!

பெண்கள் பலவீனமானவர்கள் என்று நினைப்போருக்கு சவால்விட்டு சாதனை படைத்துள்ளார் ஜமுனா என்ற கிராமத்துப் பெண்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது முதூர்கம் கிராமம். இவ்வூரைச் சேர்ந்த ஆதிவாசி பெண்ணான ஜமுனா, விறகு சேகரிக்க காடுகளுக்கு போகும்போதுதான் மரங்களை நேசிக்கத் தொடங்கினார்.

வன மாபியாக்கள், மரங்களை வெட்டி கடத்துவதை நேரில் கண்டு ஆரம்பத்தில் கண் கலங்கினாலும், பின் எதிர்த்து போராடத் தொடங்கினார்.

மாபியாக்களின் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சாமல் "வன பாதுகாப்பு சமிதி' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 10-ஆம் வகுப்பு வரையே படித்த இந்த பெண், இன்று ஆயிரக்கணக்கான மரம் நேசிப்பாளர்களுடன் சேர்ந்து வனத்தில் உள்ள மரங்களை பாதுகாத்து வருகிறார்.

கோட்டாறு, ஆ.கோலப்பன், நாகர்கோவில்.

ஏஞ்சலினாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!


இங்கிலாந்தில் 1940 - ஆம் ஆண்டு முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில் . அரசியல்வாதி, ராணுவ அதிகாரி, எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்ட இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்து வந்தார்.

இவர் 1943- ஆம் ஆண்டு காசா பிளாங்கா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மொராக்கோ சென்றபோது அங்குள்ள கவ்டவ்மியா மசூதியை கண்டுவியந்து அதனை தத்ரூபமாக ஓவியம் தீட்டினார்.

பின்னர் அந்த ஓவியத்தை அவர் அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ் வெல்டுக்கு பரிசளித்தார்.

இந்த புகழ்பெற்ற ஓவியம் பல்வேறு நபர்களின் கைக்கு சென்று கடந்த 2011 -ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் கையில் வந்து சேர்ந்தது.

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலின் இந்த ஓவியத்தை அதிகவிலை கொடுத்து தன்வசம் ஆக்கினார் ஏஞ்சலினா.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலின் கவ்டவ்பியா மசூதியை ஏஞ்சலினா ஏலத்தில் விட்டார்.

இந்த ஓவியம் இரண்டு மில்லியன் பவுண்டுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியம் ஏழு மில்லியன் பவுண்ட் அதாவது சுமார் ரூபாய். 71 கோடியே 33 லட்சத்து 97 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com