கதை சொல்லும் குறள் - 42: புதுவாழ்வு!

அல்லிக்குளம் என்கின்ற அந்த அழகான கிராமம் சென்னையிலிருந்து 52 கி.மீ தொலைவில் இருந்தது. அந்தக் கிராமத்தின் நடுநாயகமாக அமைந்திருந்த "பவானி அம்மன்' திருக்கோயில் மிகவும் புகழ் வாய்ந்தது.
கதை சொல்லும் குறள் - 42: புதுவாழ்வு!


அல்லிக்குளம் என்கின்ற அந்த அழகான கிராமம் சென்னையிலிருந்து 52 கி.மீ தொலைவில் இருந்தது. அந்தக் கிராமத்தின் நடுநாயகமாக அமைந்திருந்த "பவானி அம்மன்' திருக்கோயில் மிகவும் புகழ் வாய்ந்தது. புற்று வடிவில் சுயம்புவாக உருக்கொண்ட அம்மன், எழுநூறு வருடங்கள் பழைமை வாய்ந்தது என்று சரித்திர ஏடுகள் சான்றுகளைக் காட்டுகின்றன.

தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள், அன்னையின் மகிமையை உணர்ந்து அவளைத் தரிசிக்க வருவார்கள். பல தமிழ்க் குடும்பங்களுக்கு பவானி அம்மன் குலதெய்வமாக விளங்கியதால், குழந்தைகளுக்கு முடி இறக்கி, காது குத்துதல் தொடங்கி சதாபிஷேகம் வரை அல்லிக்குளம் பவானி அம்மன் திருக்கோயிலில் அரங்கேறும்.

சென்ற நூற்றாண்டு வரை அல்லிக்குளத்து மக்களுக்கு விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்தது. ஆனால் பவானி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அந்த அல்லிக்குளம் கிராமத்தில் பயிர் செய்யப்படும் இடங்கள் சுருங்கத் தொடங்கின. தங்கும் விடுதிகள், அதிநவீன ஹோட்டல்கள் என்று பெருகிப் போயின.

டீக்கடைகள், பூ, பழக்கடைகள், பிரசாதத் தட்டுகளை விற்கும் கடைகள், பஜ்ஜி, போண்டா விற்பனைக் கடைகள் என்று பவானி அம்மன் கோயிலைச் சுற்றிப் புற்றீசலாய்க் கிளம்பி விட்டன.

பவானி அம்மன் கோயில் தர்மகர்த்தாவின் மகன் கோலப்பன்; கோயிலின் மொத்த நிர்வாகமும் அவன் கையில்தான். இதைத் தவிர பவானி அம்மனின் அருள் அவன் மீது முழுமையாக இருக்கிறது; அதனால் அவன் சொல்வது எல்லாம் பலிக்கிறது என்ற செய்தியைத் தீயாகப் பரவச் செய்ததினால், வாழ்க்கை என்கின்ற பெரும் கடலில், பிரச்னைகள் என்கின்ற ஓயாத அலையில் சிக்கி, தவிக்கின்ற  உள்ளங்கள் எல்லாம் கோலப்பனிடம் குறி கேட்க வந்துக் குவிந்தனர்.

அமைச்சர்கள் வரை அவனிடம் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும்படிக் கேட்டு அவனுடைய அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்துக் கிடக்கிறார்கள். 

தணிகாசலம், கையில் ஏந்திய பழக் கூடையுடன், நீண்டு சென்றுக் கொண்டிருந்த வரிசையில், நகர்ந்துச் சென்றுக் கொண்டிருந்தான். காலையில் நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து குளித்து, ரெடியாகி காரை எடுத்துக் கொண்டு கஸ்டமர் வீட்டுக்கு வந்துவிட்டான். வரும் வழியில் ஒரு டீக்கடையில், ஒரு கப் டீ குடித்ததோடு சரி, இப்ப மணி எட்டாகுது, இதுவரை வேறு எதுவுமே சாப்பிடவில்லை.

விநாயகம் டிராவல்ஸ் கம்பெனியில் பணியாற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களில் தணிகாசலமும் ஒருவனாக இருந்தான். நேரம், காலம் என்பதெல்லாம் இவனுடைய தொழிலுக்குக் கிடையாது. எப்பொழுது எல்லாம் அழைப்பு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தொழில் செய்யக் கிளம்பிவிட வேண்டும். சிலநாட்களில் உள்ளூரிலேயே பயணிகளை அழைத்துச் செல்ல வேண்டி வரும், பல சமயங்களில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டி இருக்கும்.  இந்த ஐந்து வருடப் பணியில், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் என்று சென்று வந்திருக்கிறான். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாரக்கணக்கில் பயணிக்கும்பொழுது, மனதில் ஒரு வெறுமை வரும். அப்பொழுது சந்தித்த ஓட்டுநர்களில் சிலர், அவனைக் குஷிப்படுத்த மதுவை பழக்கி விட்டனர். முதலில் விளையாட்டாக ஆரம்பித்தப் பழக்கம், இன்று குடிப் பழக்கத்திற்கு அவனை அடிமையாக்கி விட்டது. அதிலிருந்து மீளமுடியாமல் கஷ்டப்படுகிறான். போன வாரம் நடந்ததை நினைத்து மனம் அதிர்ந்தான்.

அன்று இரவு நடுஜாமத்தில் வீட்டின் கதவைத் தட்டினான் தணிகாசலம்.

""என்ன, இன்னைக்கும் ஊத்திக்கிட்டு வந்துட்டீங்களா? இந்த இழவைக் குடிக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லறேன்?''

""ஏய், உள்ளே நுழையும் பொழுதே ஆரம்பிச்சிட்டியா, மனுசன் நாயா, பேயா உழைச்சுட்டு வரானே, அனுசரனையா ஒரு வார்த்தை இருக்கா, உழைச்சு உங்க இழவுக்குத்தானே கொட்டறேன்''.

""நீங்க மட்டும்தான் உழைக்கிறீங்களா, உலகத்துலே மத்த எந்த ஆம்பளையும் வேலை பார்க்கலையா? குடிக்கறதுக்கு இது ஒரு சாக்கு. சம்பாதிக்கறதுலே பாதிக்குமேலே குடிக்கே போயிடுது. இந்த லட்சணத்திலே இரண்டு புள்ளைங்க வேறே'' என்று லட்சுமி தேம்ப ஆரம்பித்தாள்.

கோபமும், குடியின் தாக்கமும் தலைக்கேற, லட்சுமியின் கன்னங்களை, அவனுடைய  கைகள் பதம் பார்த்தன.

லட்சுமி வீரிட்டு அலற, தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் திடுக்கிட்டுக் கண்விழித்து அழத் தொடங்கினர்.

மறுநாள் தணிகாசலம் கண் விழித்தபொழுது, வீட்டில் லட்சுமியையும், பிள்ளைகளையும் காணவில்லை. லட்சுமி கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மனைவியைத் தேடிக் கொண்டு தணிகாசலம் தன் மாமனார் வீட்டுக்குப் போனான். 

""ஏய், எங்கே வந்தே?'' என்று வாயிற்படியை அடைத்துக் கொண்டு கர்ஜித்தான் மைத்துனன் மணி.

""டேய் என்ன மரியாதை குறையுது?'' என்றான் தணிகாசலம்.

""உனக்கு மரியாதை வேறே கேடா, என் அக்காவை மாடு அடிக்கறாப்போல அடிச்சிருக்கே. அறிவுள்ள மனுசன் இப்படிச் செய்வானா? நீ மிருகம், குடிகாரன், மரியாதையாப் போயிடு. இல்லன்னா, நான் உன்மேலே கை வைக்க வேண்டிவரும்''

அவமானம் தாளாமல் தணிகாசலம் திரும்பி நடந்தான். பலமுறை லட்சுமியோடு கைபேசியில் தொடர்பு கொள்ள நினைத்தான்; அது துண்டிக்கப்பட்டே இருந்தது.

விநாயகம் டிராவல்ஸ் கம்பெனியின் முதலாளி கணேசனும், தணிகாசலத்தைக் கூப்பிட்டு மிரட்டி விட்டார்.

""தணிகாசலம், உன் மேலே நிறைய புகார் வருது, குடிச்சிட்டு வண்டி ஓட்டறியாம். வாடிக்கையாளர்களிடம் தன்மையா நடக்க மாட்டேங்கறியாம். இதுதான் என்னுடைய கடைசி எச்சரிக்கை, அடுத்த முறை சீட்டைக் கிழிச்சிடுவேன்''

கதிகலங்கிப் போனான் தணிகாசலம். வேலையும் போய், குடும்ப வாழ்க்கையும் கெட்டு, மானம் மரியாதையும் போய், சே என்ன வாழ்க்கைடா இது? செத்துப் போயிடலாமா என்று தோன்றியது.

அன்று காலை அவனுடைய கஸ்டமர், அல்லிக்குளத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு குடும்பத்தோடு வந்திருந்தார். பல தடவை, பயணிகளைப் பவானி அம்மன் கோயிலுக்குத் தணிகாசலம் அழைத்து வந்திருக்கிறான். ஆனால் கோயிலுக்குள் போகவேண்டும், கோலப்பனைப் பார்க்க வேண்டும் என்று எண்ணியதே இல்லை.

இன்று தணிகாசலத்தின் மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. சோகம் அப்பிக் கிடந்த மனதை ஆறுதல் படுத்த, அவனுக்கு அன்பான வார்த்தைகள் தேவைப்பட்டது. கோலப்பனைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறான். அவனிடம் குறி கேட்டால் அப்படியே நடக்கும் என்று நம்பிதானே இவ்வளவு கூட்டம் வருகிறது. நாமும் போய் நல்ல வார்த்தைகளைக் கேட்போம் என்று பழக்கூடை ஒன்றை வாங்கிக் கொண்டு வரிசையில் நிற்கிறான். அவனுடைய வாடிக்கையாளர், இரவு அல்லிக்குளத்தில் தங்குகிறார்கள், மறுநாள்தான் கிளம்புகிறார்கள் என்பது அவனுக்குச் சாதகமானது.

நல்லவேளையாக அன்று திங்கட்கிழமையாக இருந்தது, செவ்வாய், மற்றும் ஞாயிறுகளில் பவானி அம்மன் கோயிலில் கூட்டம் தாங்க முடியாது. மூன்று மணி நேரக் காத்திருப்புக்குப் பின் தணிகாசலத்தின் முறை வந்தது.

""ஸ்வாமி'' என்று தணிகாசலம் தன் கைகளைக் கூப்பினான். பழக்கூடையைக் கோலப்பன் முன் வைத்தான்.

""சொல்லு'' என்றான் கோலப்பன்.

""குடும்பம் பிரிஞ்சிடுச்சு, மனசிலே அமைதியில்லை, குடிப்பழக்கம் பேயா ஆட்டுது. விமோசனம் சொல்லுங்க'' என்றான்.

கைகளில் கோலப்பன் விபூதியை எடுத்தான், கண்களை ஒரு நிமிடத்திற்கு மூடினான், பிறகு திறந்தான், விபூதியை ஓங்கித் தணிகாசலத்தின் தலையில் அடித்தான், சிறிது விபூதியை அவன் நெற்றியில் பூசினான், பிறகு இரண்டு எலுமிச்சைப் பழங்களை எடுத்து தணிகாசலத்தின் கைகளில் திணித்தான்.

""ஜெய் பவானி, உனக்கு நிம்மதி வரும். குடும்பம் சேரும். இந்தப் பழங்களை ஜுஸ் பிழிஞ்சுக் குடி; குடிப்பழக்கம் போயிடும்'' என்றான்.

வெளியே வந்தான் தணிகாசலம், பசியில் காதுகள் அடைத்துக் கொண்டன. பகல் மணி இரண்டாகி இருந்தது. நேராக ஓர் உணவகத்துக்குச் சென்று வயிறு நிறையச் சாப்பிட்டான். பிறகு காருக்குத் திரும்பி வந்து ஐந்து மணி வரை நன்றாகத் தூங்கினான்.

கண்விழித்த பிறகு மனது பேய் ஆட்டம் போட்டது. படிப்பறிவு இல்லாத கோலப்பன் எப்படித் தளதளவென்று இருக்கிறான். பணிவிடை செய்ய ஆட்கள், அவன் சொல்லும் குறிக்காகக் காத்திருக்கும் வி.ஐ.பிகள், குவிந்து கிடக்கும் சொத்துக்கள். எனக்கும் படிப்பு ஆறு கிளாஸ் வரைதான்; குடும்பத்தின் நிலை அப்படி, சிறுவயதிலிருந்தே கஷ்ட ஜீவனம், இந்த அழகில் திருமணம், குழந்தைகள், பாழாப்போன குடிப்பழக்கம். அவன் முன்னால் கிடந்த கோலப்பன் கொடுத்த எலுமிச்சைப் பழங்கள் தணிகாசலத்தைப் பார்த்துச் சிரித்தன, என்னைச் சாப்பிட்டால் உன் குடிவெறி தீந்துடுமா என்று அவை கேட்பது போலத் தோன்றியது. காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். மணி மாலை ஆறாகி இருந்தது. சில்லென்ற தென்றல் காற்று அவன் உடலைத் தழுவிக் கொண்டது. அதில் சிறிது நேரம் சுகம் கண்டான் தணிகாசலம்.

ஒலிபெருக்கியிலிருந்து, யாருடைய பேச்சோ, அலைகளாக வந்து தணிகாசலத்தின் காதுகளில் விழுந்தது. முதலில் அசட்டையாக இருந்தவன் பிறகு அவைகளுக்குச் செவிமடுத்தான். அவன் கால்கள் அவனை அந்தப் பெரிய மைதானத்திற்கு இட்டுச் சென்றது, அங்கே பெரும் கூட்டம் கூடியிருந்தது. கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு அதுவாக இருந்தது. பேசிக்கொண்டிருந்தவர் சங்கரானந்தா என்கின்ற துறவி. உலகம் முழுவதும் சென்று மக்களுக்கு நற்போதனைகளை வழங்குபவர். ஒரு மூலையில் தணிகாசலம் மண்டியிட்டு அமர்ந்தான். சங்கரானந்தா சொல்பவற்றை அவன் செவிகள் உள் வாங்கியது.

""இன்றைய இளைய தலைமுறையினர் பல்வேறான தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகி சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். போதை மருந்துகளுக்கும், குடிப்பழக்கத்துக்கும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு நல்வாழ்வைத் தொலைக்கிறார்கள். இந்த உடம்பு இறைவன் நமக்குக் கொடுத்த வரப்பிரசாதம். 

கூன், குருடு, செவிடு என்று இல்லாமல் பிறப்பதே அரிது என்கிறார் ஒளவையார். முதலில் இந்த உடலைச் சுமப்பதே இழிவு என்று நினைத்தேன், ஆனால் இந்த உடம்பின் உள்ளே உட்பொருளாக இறைவன் அமர்ந்துக் கொண்டு, அதை இயக்குகிறான் என்பதை அறிந்து கொண்டபிறகு இந்த உடம்பைப் பேணிப் பாதுகாக்கின்றேன் என்கின்றார் திருமூலர்.

இந்த உடம்பு நமக்கு இறைவன் கொடுத்தது. அதை வீணாக்கலாமா? நாமும் வாழ்ந்து நம்மைச் சார்ந்தவர்களையும் வாழச் செய்ய நம்முடைய இந்த உடம்பே உதவுகிறது. தீயப் பழக்கங்களினால் உடம்பு கெட்டால், அதைத் திரும்பவும் பெற முடியுமா? நோய்களின் பிடியில் சிக்கிய உடம்பு, அதைச் சுமப்பவனுக்கும் உதவாது, மற்றவர்களுக்கும் உதவாது. அவன் உடம்பே அவனுக்குப் பெருஞ்சுமையாக ஆகிவிடும்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் தீயப் பழக்கங்களினால் இன்னுயிரை இழக்கின்றனர். குடும்பங்களை விட்டுப் பிரிகின்றனர், ஏன் தற்கொலைக்குக் கூடத் தள்ளப்படுகின்றனர்.

இங்கே குடியிருக்கும் பவானி அம்மனின் அருளால், கூடியிருக்கும் இந்தக் கூட்டத்தில் எவரெல்லாம் இத்தகைய தீயப்பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறீர்களோ, அவற்றை உதறிப் புதுவாழ்வைத் தொடங்குங்கள்''” என்று சங்கரானந்தா பேசிக் கொண்டே இருந்தார்.

தணிகாசலம் நூல்களைக் கற்றறிந்தவன் இல்லை. ஆனால் கற்றறிந்த சங்கரானந்தாவின் அறிவுரைகள், அவனுடைய வாழ்க்கையின் தளர்ச்சியை நீக்கும் ஊன்றுகோலாக அமையும் என்பதில் சந்தேகம் சிறிதும் இல்லை.

கற்றில னாயினுங் கேட்க  அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

( குறள் எண்: 414)

பொருள் : நூல்களைக் கற்றறிந்தவன் என்று இல்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும். அது அவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல் போல் துணையாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com