கதை சொல்லும் குறள் - 23: பகிர்ந்து உண்! 

""அம்மா...'' என்று தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடு லட்சுமி குரல் கொடுத்தது.
கதை சொல்லும் குறள் - 23: பகிர்ந்து உண்! 

""அம்மா...'' என்று தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடு லட்சுமி குரல் கொடுத்தது. அடுப்பில் இருந்த மண் சட்டியில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டைகளை வெளியே இழுத்தாள் பட்டம்மாள். தணல் அடங்கியதால் குழம்பு தன் கொதிப்பை அடக்கி வாசித்தது. ஒரு தட்டை எடுத்து சட்டியை மூடிவிட்டு, பரபரப்புடன் கொல்லைப்புறத்தில் இருந்த மாட்டுத் தொழுவத்தை நோக்கி விரைந்தாள்.

லட்சுமி, அவளைக் கண்ட மறுகணம் மீண்டும் ""ம்மா...'' என்று குதூகலத்துடன் குரலை ஓங்கியது. ஐந்து அறிவு படைத்த ஜீவன்தான், ஆனால் அதற்குத் தெரியும் பசிக்கும் தன் வயிற்றுக்கு உணவு கிடைத்துவிடும் என்று.

""என்னடி செல்லம், அம்மா வைக்கோல் போட மறந்துட்டேனா? என்ன செய்வேன்? என் புருஷன் அதான் உன் அப்பா, மார்க்கெட்டுக்குப் போய் பை நிறைய  வாங்கியாந்துட்டாரு. ஒரு மணிக்குள்ள சாப்பாட்டைத் தயார் பண்ணுன்னு சொல்லிட்டு அரிசி மண்டிக்குப் போயிட்டாரு. நண்டும் சிண்டுமா எட்டுப் புள்ளைகளைப் பெத்துப் போட்டிருக்கேன், அதுங்களும் பசிக்குதுன்னு உன்னைப்போல ஓடியாருங்க, அதான் அவசரம் அவசரமா சமையலை முடிச்சேன்''. 

ஏதோ, தன் வயதை ஒத்தத் தோழியிடம் பேசுவதைப் போல லட்சுமியிடம் பேசிக்கொண்டே, பட்டம்மாளின் கைகள் அங்கே இருந்த மரத்தொட்டியில் நிறைந்து இருந்த தண்ணீரில் தவிட்டை அள்ளிப் போட்டுக் கலக்கியது. பிறகு ஒரு கோணிப் பையில் இருந்த புண்ணாக்கை சிறு துண்டுகளாக உடைத்து தவிட்டோடு போட்டுக் கலக்கினாள். லட்சுமியை அவிழ்த்துவிட அது வேகமாக நடந்து வந்து மரத்தொட்டியில் உள்ளதை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கியது. 

லட்சுமி குடித்து முடிப்பதற்குள் வைக்கோல் கட்டைப் பிரித்து அதற்குத் தேவையான அளவு வைக்கோலை அதன் அருகே போட்டாள். லட்சுமி பசியாறத் தொடங்க, பிறந்து இரண்டே மாதங்கள் ஆன கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்டாள். அது ஓடிச் சென்று அம்மாவின் மடியை முட்டி பாலை உறிஞ்சத் தொடங்கியது.

""என் செல்லமே, நல்லாக் குடி'' என்று கன்றுக்குட்டியைக் கொஞ்சிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றாள்.

""பட்டு... பட்டு''ன்னு அழைத்துக்கொண்டே பட்டம்மாளின் கணவன் ராமசாமி சமையல்கட்டுப் பக்கம் வந்தான். மணி பன்னிரெண்டுதான் ஆகியிருந்தது, என்ன அதற்குள் வந்துவிட்டார் என்று பட்டம்மாள் எண்ணி முடிப்பதற்குள் ராமசாமி சொன்னார்,

""பட்டு, சாப்பிட ரெண்டு பேரைக் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கேன். என்னுடைய பால்ய நண்பர்கள், மதராசுக்கு நேத்து ஒரு கல்யாணத்திற்காக வந்தாங்களாம், என்னைப் பார்க்கணும்னு தங்கி இருக்காங்க. இன்னைக்கு ராத்திரி ரயில்லே ஊருக்குத் திரும்பறாங்க. சீக்கிரம் சாப்பாட்டை ரெடி பண்ணு''.

""உங்க சொந்த ஊரு, வேலம்பட்டிக்காரங்களா? இதோ நிமிஷத்திலே ரெடி பண்ணிடறேன்''.

""பட்டு... பட்டு''ன்னு ராமசாமி அன்பொழுக அழைக்கும் அவனுடைய மனைவி பட்டம்மாள், பேரிலே மட்டும் பட்டு இல்லை குணத்திலேயும்தான். 

இந்திய நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த சமயம், காந்தி என்கின்ற புதிய சக்தி இந்திய மக்களின் உடலிலும், மனசிலும் புகுந்து சுதந்திரத் தாகத்தை எழுப்பி இருந்த சமயம். இருபதே வயதான ராமசாமியைப் பதினைந்து வயதான பட்டம்மாள் கைப்பிடித்தாள். பட்டம்மாளின் மாமனார் வேலம்பட்டி மிராசுதார். அவருடைய பெயர் வேலம்பட்டி கிராமத்திலே மட்டும் அல்ல, திருச்சி வரைக்கும் புகழ் பெற்றிருந்தது. நடராஜப்பிள்ளை என்றால் அஞ்சா நெஞ்சன், தீவிர சுதந்திரப் போராட்ட வீரன், காந்தியவாதி என்பது யாவரும் அறிந்ததே.

புகழ் இருந்து என்ன புண்ணியம்? சிறைவாசம், கோர்ட்டு அது இதுன்னு நூறு காணி நிலமும், ஐந்து காணியாச் சுருங்கிப் போச்சு. மாமியார் புண்ணியவதி குடும்பம் நடுரோட்டிலே வருவதற்கு முன்னே பட்டுவின் கையிலே தன் புருஷனையும், ஒரே புள்ளை ராமசாமியையும் புடிச்சிக் கொடுத்துட்டுக் கண்ணை மூடிட்டா. பொண்டாட்டி போன ஆறாம் மாசமே நடராஜப்பிள்ளை அவளுக்குத் துணை சேரச் சிவலோகம் போய்ச் சேர்ந்தார்.

ராமசாமி, நன்றாக வாழ்ந்த ஊரில் நிலைமை கெட்டு வாழ விரும்பாமல், ஐந்து காணி நிலத்தை வித்து ரொக்கமாக்கிக் கொண்டு பட்டம்மாளுடன் பட்டணம் புறப்பட்டுவிட்டார். அப்பொழுதே ராமசாமி தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள். மூன்று ஆண், இரண்டு பெண்கள் என்று ஏழு பேரும் மயிலாப்பூரில் குடியேறினர்.

வேலம்பட்டியில் விவசாயத்தில் ஈடுபட்டதால், தனக்குத் தெரிந்த அரிசி வியாபாரத்தையே செய்ய முடிவு செய்தார். அரிசி மண்டியையும் ஆரம்பித்தார். வியாபாரம் பெருகியது. இதற்கிடையில் மேலும் மூன்று குழந்தைகள், எல்லாமே ஆண் பிள்ளைகள்.

இராயப்பேட்டையில் இரண்டு அடுக்குகள், புழக்கடையோடு கூடிய வீட்டை ஆயிரத்து தொள்ளாயிரத்துக்கு எண்பதில் வாங்கினார். வீட்டின் பால் தேவைக்காக லட்சுமி வந்து சேர்ந்தாள். பசுமாடு வீட்டில் இருந்தால் மகாலட்சுமியே இருப்பதாக மகிழ்ந்து போனாள் பட்டம்மாள்.

இதற்கிடையில், அப்பொழுதெல்லாம் ஊரிலிருந்து வருபவர்கள் ஹோட்டலில் தங்கும் பழக்கம் எல்லாம் கிடையாது. சொந்தக்காரர்கள் வீட்டில்தான் தங்குவார்கள். பட்டு, அப்படி வரும் சொந்த பந்தங்களை எல்லாம் நன்றாக உபசரித்து, தங்களுக்கு என்று எதையும் தனியாக எடுத்து வைக்காமல் விருந்தோம்பல் செய்வாள். பட்டம்மாளும் பெரிய இடத்துப் பெண்தான், புகுந்த வீடும் அப்படியே அமைந்து போனது. நடுவில் நிலைமை சீரழிந்தாலும், இப்பொழுது கொஞ்சம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக மாறியதும், பிறப்பின் மேன்மை அவர்களைப் பகிர்ந்து உண்பதைக் கடமையாக்கியிருந்தது.

அன்றும் அப்படித்தான், தனக்கு என்று எடுத்து வைக்காமல், வந்த விருந்தாளிகளுக்கும், கணவனுக்கும், குழந்தைகளுக்கும் வயிறார உணவைப் படைத்தாள் பட்டம்மாள். அதோடு விருந்தாளிகளின் இலையின் மீது சோற்றை அம்பாரமாகக் குவித்து வைத்தாள். 

இப்படித் தங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு எல்லாம் விருந்தோம்பி, பகிர்ந்து அளித்து வாழ்ந்த மகா உத்தமியானப் பட்டம்மாவுக்கு இன்று வயது எண்பத்து ஐந்து. அவள் கணவன் ராமசாமி இறந்து பத்து ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. அவள் பெற்ற எட்டுப் பிள்ளைகளும் ஏகபோகமாக வாழ்கிறார்கள். வெளிநாடுகள், உள்நாட்டிலேயே  பல மாவட்டங்கள் என்று சென்றுவிட்டனர்.

கடைக்குட்டி மாணிக்கத்திற்கு மட்டும் படிப்பில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. அதனால் என்ன வியாபாரத்தில் வெளுத்துக் கட்டுகிறான். அப்பா வாழ்ந்த வீட்டிற்குத் தற்போதைய விலையை நிர்ணயித்து அந்தப் பணத்தை மீதி ஏழு பேருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டான். அந்த வீட்டை மாளிகைபோலக் கட்டிக் கொண்டான். தாயைத் தன்னோடு வைத்துக் கொண்டான். பட்டம்மாள் செய்த தருமம் பலன் அளிக்காமல் போகுமா? மருமகளாக வந்த கோமதி, மாமியாரைத் தலைமேல் வைத்துத் தாங்கினாள்.

மாணிக்கத்தின் இரண்டு பெண் பிள்ளைகளும், ""பாட்டி பாட்டி'' என்று பட்டம்மாளைச் சுற்றிசுற்றி வந்தன.

தள்ளாமை பட்டம்மாவை ஆட்கொண்டது. எல்லாத்தையும் பார்த்தாகிவிட்டது. இன்னும் ஏன் கடவுள் தன்னை வைத்திருக்கிறான் என்று எண்ணுவாள்.

""பட்டென்று விழுந்து, சட்டென்று போயிடணும்'' என்பாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்பாவைப் போலவே மாணிக்கத்திற்கு அந்த நாளில் அசைவ உணவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

""கோமதி..''

""என்னங்க,''

""நான் கொஞ்சம் கடை வரை போய் வரேன்''.

""ஏன் டிரைவரை அனுப்பினா வாங்கியாரான்?''

பகல் மணி இரண்டைத் தாண்டி விட்டது. பட்டம்மாளுக்கு நல்ல பசி. சாதாரணமாக பகல் ஒரு மணிக்கு எல்லாம் சாப்பிட்டு விடுவாள். ஆனால் மாணிக்கம்  மார்க்கெட்டுக்குச் சென்று வரவே மணி பன்னிரண்டாகி விட்டது.

""அத்தே, வாங்க சாப்பிடலாம்'' என்று கோமதி அழைத்தாள்.

எப்பொழுதுமே சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிடப் பட்டம்மாவுக்குப் பிடிக்காது. கூடத்தில் விரிக்கப்பட்ட சிறிய தரை விரிப்பில் வந்து அமர, வழக்கமாக அவள் சாப்பிடும் வெள்ளித் தட்டில் சுடச்சுட நெல்லூர் அரிசிச் சாதத்தைக் கோமதி பரிமாறினாள். 

தன் மகனும், பேத்திகளும் சாப்பிடுகிறார்கள் என்பதைப் பார்த்தபின் பட்டம்மாள் ஆவலோடு சாப்பிட  ஆரம்பித்தாள். 

சிறிது ரசம், பிறகு தயிர் சாதம் என்று பட்டம்மாள் சாப்பிட்டு முடிக்கும் பொழுது கோமதி, ""அத்தே, இத மறந்துட்டேன். இந்தாங்க இதையும் சாப்பிடுங்க'' என்று புதினாத் துவையல் சிறிதைத் தட்டில் வைத்தாள். பட்டம்மாள் அதையும் எடுத்துச் சாப்பிட்டாள். வெள்ளி டம்பளரில் இருந்த தண்ணீரைக் குடித்தாள், பிறகு எழுந்தாள்.

""டமால்'' என்று ஒரு சத்தம். 

அப்பொழுதுதான் சாப்பிட்டு முடித்திருந்த மாணிக்கமும், கோமதியும், பட்டம்மாளின் பேத்திகளும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தபொழுது தரையில் பட்டம்மாள் விழுந்து கிடந்தாள்.

வயிறு நிறைய மற்றவர்களுக்கு உணவைப் படைப்பவள், வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, அவள் விருப்பப்படியே பட்டென்று விழுந்து, சட்டென்று போயே போய்விட்டிருந்தாள்.

பலருடன் பகிர்ந்து உண்டவளைப் பசியோடு எடுத்துச் செல்வானா அந்த இறைவன்}?

பாத்தூண் மரீஇயவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. 

(குறள்  எண் : 227)

பொருள்:

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com