மூலிகைப் பெண்மணி!

மூலிகைகளை பயன்படுத்தி, எளிதான முறையில் நோய்களை குணமாக்கும் பாட்டி வைத்தியத்துக்கு பெயர் போனது தமிழகம்.
மூலிகைப் பெண்மணி!


மூலிகைகளை பயன்படுத்தி, எளிதான முறையில் நோய்களை குணமாக்கும் பாட்டி வைத்தியத்துக்கு பெயர் போனது தமிழகம். அதை மெய்ப்பிக்கும் வகையில், திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் அமுதவல்லி, பல ஆண்டுகளாக தனது வீட்டு தோட்டத்தில் மூலிகைச் செடிகளை வளர்த்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இதனால், "மூலிகைப் பெண்மணி' என்று பெயர் பெற்றவர் இவர். மேலும், "மூலிகை வளர்ப்பு வல்லுநர்' என்ற விருதையும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இவருக்கு வழங்கியுள்ளார். நோயில்லா வாழ்வுக்கு உதவும் மூலிகைகளின் அவசியம் குறித்து பல மேடைகளில் பேசி வரும் இவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""அந்தக் காலத்தில் எனது தந்தை 20 மாடுகள் வைத்திருந்தார். மாடுகளிலிருந்து கறக்கும் பாலை, விற்காமல் எங்களிடம் பணி புரிவோருக்கே கொடுத்து விடுவார். அதேபோல் தோட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்களையும் அவர்களுக்கு கொடுப்பார். சிறுவயதிலிருந்து இதைப் பார்த்து வளர்ந்ததால், எந்தப் பொருள்களையும் விற்கும்எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை.

எனவேதான், என் வீட்டில் விளையும் மூலிகைகளையும், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றையும் வேண்டுவோருக்கு இலவசமாக வழங்கி வருகிறேன்.

ஆசிரியராக பணி புரிந்த சமயத்தில் மூச்சு விடுவதில் (ஆஸ்துமா) சிரமம் இருந்தது. இதனால், அலோபதி வைத்திய முறைகளை நாடியபோது பக்க விளைவுகள் ஏற்பட்டதோடு, செலவுகள் அதிகமானதே தவிர, குணமடையவில்லை. என்னுடைய மூச்சு பிரச்னைக்கு மூலிகைகளை நாடினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதனால், சில, மூலிகைகளை பயன்படுத்தினேன். எனது மூச்சுப் பிரச்னை முற்றிலும் நீங்கியது.

அதிலிருந்து மூலிகைச் செடிகளை சேகரித்து தோட்டமாக வைக்கத் தொடங்கினேன். அப்போது, கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், மூலிகைகளின் பயன்கள் குறித்து பேசினார். அதில்மஞ்சள் கரிசாலை குறித்து சொன்னார்.

மஞ்சள் கரிசாலை வள்ளலார் கண்ட மூலிகையாகும். வள்ளலார் 485 மூலிகைகள் குறித்து நமக்கு தெரிவித்துள்ளார். அவற்றில் சில அழிந்துவிட்டன. சில அழியும் நிலையில் உள்ளன. இந்த மூலிகைச் செடிகளை போற்றி பாதுகாத்தாலே, நோயில்லா வாழ்க்கை வாழ முடியும்.

எனவே, பிரமி, வல்லாரை, கரிசாலை, ஓமவல்லி, துளசி, தூதுவளை, காசினி, பெரியாநங்கை, பொன்னாங் கண்ணி, முசுமுசுக்கை, வாத நாராயணம், செம்பருத்தி, பசலை, திருநீற்றுப்பச்சிலை, மணத்தக்காளி உள்ளிட்ட பல்வேறு மூலிகைச் செடிகளை வளர்க்கத் தொடங்கினேன். பின்னர், எங்களது பள்ளி நிகழ்ச்சிகளில் இந்த மூலிகைகளை இலவசமாகவே வழங்கத் தொடங்கினேன்.
தற்போது, சேந்தமங்கலத்துக்கு குடிபெயர்ந்தாலும் அங்கும் மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி உள்ளேன். இதுதவிர, 5 வெவ்வேறு இடங்களில் மூலிகைத் தோட்டம், பழத்தோட்டம் என அமைத்து பராமரித்து வருகிறேன். அங்கு இந்த செடிகளுடன் நிலவேம்பு உள்ளிட்டவையும் வளர்க்கப்படுகின்றன.

கரிசாலையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால், கரிசாலை அதிக அளவில் வளர்க்கிறேன். நினைவாற்றலுக்கு வல்லாரையை மட்டுமே நாம் கூறுகிறோம். ஆனால், கரிசாலையும் நினைவாற்றலுக்கு பயன்படக்கூடிய மூலிகைச் செடியாகும். ஒடித்து வைத்தாலே வளரும் தன்மைக் கொண்டது.

அதேபோன்று, சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் பிரச்னைகள், சிறுநீரக நோய் இவற்றைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள் ஏராளமாக உள்ளன.மூலிகைகளை பிரபலப்படுத்துவதை அறிந்த நம்மாழ்வார், திருவாரூரிலுள்ள எனது வீட்டுக்கு 2002- இல் வந்தார். அப்போது அவர் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதேபோல், அவர் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பும் வந்தார். மாடித் தோட்டத்தை பார்வையிட்டு சிறந்த முறையில் உருவாக்கி இருப்பதாக பாராட்டி விட்டுச் சென்றார். தற்போது, தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கொடி வகை மூலிகைகள், காய், கனிச் செடிகள் அவருடைய ஆலோசனையின்படியே அமைக்கப்பட்டவை.

இப்போது, திருவிழாக்கள், கோயில் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று மூலிகைச் செடிகளை மக்களுக்கு வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். தற்போது, செடிகளை விட விதைகளையே அனைவரும் விரும்புவதால், விதைகளாகவும் வழங்கி வருகிறேன். வீடு தேடி வருவோருக்கும், அவர்களுக்கு தேவையான மூலிகைச் செடிகளை வழங்கி வருகிறேன்.

உலகத்தில் அவ்வப்போது, புதுப்புது நோய்கள் உருவாகி மனிதனை அச்சுறுத்தி வருகின்றன. இவற்றை எதிர்கொள்ள நவீன ரக மருந்துகளையே நாட வேண்டியுள்ளது. ஆனால், நம்மிடம் உள்ள மூலிகைச் செடிகள், எல்லாவித நோய்களுக்கும் தீர்வாக இருக்கும். வந்தபின் காப்பதை விட வருமுன் காப்பது மிகவும் சிறந்தது. எனவே, நம்முன்னோர்கள் நமக்கு இனம் காட்டிவிட்டுச் சென்ற மூலிகைகளை இனியாவது பயன்படுத்துவோம். வீடுகள் தோறும் மூலிகைச் செடிகள் வளர்ப்போம்'' என்றார்.

மூலிகைச் செடிகளின் பயன்கள்


கரிசாலை

நினைவாற்றலை அதிகரிக்கக் கூடியது. மஞ்சள் காமாலை நோய் வராது. கண்கள் பிரகாசமாக இருக்கும். உணவுடன் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தை சுத்திகரிக்கும். இலையைக் கொண்டு பல் துலக்கினால், பல் பலப்படும். நரம்புத் தளர்ச்சி, மூளைக் கோளாறு இவைகள் தொடராமல் தடுக்கிறது.

வெள்ளை குண்டுமணி

அல்சர் உள்ளவர்கள், வெள்ளை குண்டுமணி செடியின் இலையைச் சாப்பிட்டு வந்தால், அல்சர் பிரச்னை தீரும் வேலியில் கொடியாக படரவிட்டு இதை வளர்க்கலாம்.

நாகமல்லி

இதன் இலையை தின்றால் பாம்புக்கடி நஞ்சு அகலும். இலையை, எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து பயன்படுத்தினால், சொறி, கரப்பான், அரிப்பு ஆகியவை தீரும்.

தூதுவளை

நினைவு சக்தியை மேம்படுத்த தூதுவளையும் ஏற்றது.

ஆடாதோடா

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, குரல் வளத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சீந்தில்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது. வள்ளலார் பரிந்துரைத்த மூலிகை இது. இந்தியாவில் உருவானது.

இன்சுலின் செடி

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது. இதன் இலையை பறித்து தினமும் தின்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இது பிரேசிலை தாயகமாகக் கொண்டது.

இதுதவிர, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, மருதாணி, சிறுகுறிஞ்சான், உள்ளிட்ட மருத்துவக் குணங்கள் நிரம்பிய பல்வேறு செடிகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com