விளையாட்டு  நிகழ்ச்சிகளை பெண்களும் தொகுத்தளிக்க முடியும்!

விளையாட்டு  நிகழ்ச்சிகளை  தொகுத்தளிப்பது, போட்டிகளின் போது  வர்ணனையாளராக செயல்படுவது  போன்றவை  ஆண்களுக்கு  மட்டுமே தகுதியானது  என்ற நிலையை  மாற்றி தற்போது  பெண்களும்  இந்தத்
விளையாட்டு  நிகழ்ச்சிகளை பெண்களும் தொகுத்தளிக்க முடியும்!


விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பது, போட்டிகளின் போது வர்ணனையாளராக செயல்படுவது போன்றவை ஆண்களுக்கு மட்டுமே தகுதியானது என்ற நிலையை மாற்றி தற்போது பெண்களும் இந்தத் துறையில் களமிறங்கி உள்ளனர். நியூஸ் சேனல்களில் பணியாற்றுவது போல் பெண்கள் இப்போது ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளர். வர்ணனையாளர்கள் போன்றவைகளில் பணியாற்றும் திறமையைப் பெற்றுள்ளனர்.

பிரபலமான ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றில் பணியாற்றும் மது மைலன்கொடி, பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை ஆங்கிலத்திலும், மாநிலமொழிகளிலும் தொகுத்தளிப்பதோடு, வர்ணனையாளராகவும் உள்ளார். இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளின்போது கன்னடத்தில் வர்ணனையாளராக பணியாற்றிய இவர், இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளின்போது மலையாளத்திலும் வர்ணனையாளராக பொறுப்பேற்று திறமையாக செயல்பட்டார்.

தட்சிண கன்னடாவை சேர்ந்த மது மைலன்கொடி, முதலில் கர்நாடகா பிரீமியர் லீக் போட்டியின்போது வர்ணனையாளராக பணியைத் தொடங்கி பின்னர் ப்ரோ - கபடி லீக் போட்டியின்போது வர்ணனையாளர் பொறுப்பெற்றார். தொடக்கத்தில் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்து வந்த இவரது திறமையை பார்த்த கர்நாடகா பிரீமியர் லீக்கை சேர்ந்த சிலர், தங்கள் போட்டியின்போது பயன்படுத்திக் கொள்ள விரும்பி மதுவை அணுகினர். மூன்றாண்டுகள் கர்நாடகா பிரீமியர் லீக் போட்டியின்போது தொகுப்பாளராகவும் , வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்த இவருக்கு ஸ்போர்ட்ஸ் சேனல்கள் வாய்ப்பளிக்க முன் வந்தன. இது இவருக்கு நிரந்தர வருமானத்திற்கும் வழி வகுத்தது.

பலரும் நினைப்பது போல் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பதோ வர்ணனை செய்வதோ சுலபமான விஷயமல்ல, ஒவ்வொரு விளையாட்டைப் பற்றியும், அது தொடர்பான விளையாட்டு வீரர்களைப் பற்றியும் முதலில் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். முந்தைய போட்டிகளின் வெற்றி தோல்வி பற்றிய புள்ளி விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அந்த போட்டிகளின்போது நடந்த சுவாரசியமான தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தால் வர்ணனையின் போது கூடவே சேர்த்து கூறினால் ரசிகர்களை கவரமுடியும், ரசிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் உற்சாகப் படுத்த வர்ணனை மிக முக்கியம். இதை ஆண் வர்ணனையாளர்கள் சிறப்பாக செய்வதுண்டு. இதற்காக தெரிந்த தகவல்கள் அனைத்தையும் ஓரேடியாக கொட்டிவிடக்கூடாது. வர்ணனை செய்யும்போது சரியான சமயத்தில் கூடுதல் தகவல்களை சேர்த்து சொல்வது கேட்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் என்று கூறும் மது மைலன் கொடிக்கு ஆங்கிலத்துடன் துளு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளும் தெரியும் என்பதால் அந்தந்த மொழிகளில் சரளமாக பேசுகிறார்.

விளையாட்டுத் துறைகளில் தொகுப்பாளராகவும், வர்ணனையாளராகவும் ஆண்களே வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில் பெண்கள் நினைத்தால் இந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்து காட்டாக உள்ள மது மைலன் கொடியைத் தொடர்ந்து திறமையான பெண் தொகுப்பாளினிகளுக்கு வாய்ப்பளிக்க ஸ்போர்ட்ஸ் சேனல்கள் முன் வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com