தென்னிந்திய மொழிகளை கற்றுத்தரும் வங்கப் பெண்!

நான்காண்டுகளுக்கு முன் கொல்கத்தாவிலிருந்து கிளம்பி பெங்களூருவில் ஹாட் ஸ்டார் நிறுவனத்தில் பணியில் சேரவந்த அபிலாஷா சட்டர்ஜிக்கு(27) பெங்களுரு நகரத்தின் சுற்றுச்சுழலும், பல மொழிகள் பேசும் பிற 
தென்னிந்திய மொழிகளை கற்றுத்தரும் வங்கப் பெண்!

நான்காண்டுகளுக்கு முன் கொல்கத்தாவிலிருந்து கிளம்பி பெங்களூருவில் ஹாட் ஸ்டார் நிறுவனத்தில் பணியில் சேரவந்த அபிலாஷா சட்டர்ஜிக்கு(27) பெங்களுரு நகரத்தின் சுற்றுச்சுழலும், பல மொழிகள் பேசும் பிற மாநிலத்தவரும் இங்கு குவிந்திருப்பதை பார்த்தபோது புதியதோர் உலகத்திற்கு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். ஆனால் நாளடைவில் இந்த சூழ்நிலையுடன் ஒத்துப் போனவர், இன்று "பாஷா வித் அபிலாஷா' என்ற பெயரில் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தைத் துவக்கி பிறமொழியினர் சுலபமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் பேச பயிற்சியளித்து வருகிறார், எப்படி?

""நான் பணியில் சேர்ந்த அலுவலகத்தில் மட்டுமின்றி பெங்களுரில் உள்ள பல பன்னாட்டு அலுவலகங்களில் கன்னடர்களை விட அதிகமாக தமிழர், தெலுங்கர், வட நாட்டினர் பணியாற்றுவதைக் கண்டேன். எனக்கு தமிழ், தெலுங்கு மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது.

அவர்கள் என்னிடம் ஹிந்தியில் பேசினாலும், அவர்களது உதட்டசைவையும் உடல் மொழியையும் பார்த்து தமிழ், தெலுங்கு மொழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு சிறுசிறு வார்த்தைகளை பேசத் தொடங்கினேன். அவர்களும் என்னுடன் தமிழ், தெலுங்கு மொழியில் பேசுவார்கள். சில மாதங்களில் தமிழ், தெலுங்கு மொழியில் புரிந்து கொள்ளவும், பதிலுக்கு அவர்களுடன் இலக்கண சுத்தமாக பேச முடியாவிட்டாலும், திக்கித்திணறி பேசுவதற்கு பழகிக் கொண்டேன். கூடவே நான் கற்றுக் கொள்ளும் மொழிகளை வேற்று மொழிக்காரர்கள் பேசுவதற்கு கற்றுத் தரலாமே என்ற எண்ணம் எழுந்தது.

உடனே பாஷா வித் அபிலாஷா என்ற பெயரில் இன்ஸ்ட்டாகிராம் பக்க மொன்றைத் தொடங்கினேன். நானே எதிர்பார்க்காத வகையில் ஒரே நாளில் 46 ஆயிரம் பேர் என்னைப் பின் தொடர்வது தெரிந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தான் என்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினேன். மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தபோது, தமிழ், தெலுங்கு கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு சுலபமாக பேச நானே சிறுசிறு வாக்கியங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தலாமே என்று தோன்றியது. பெங்காலி மொழி பேசும் நான் இந்த இரண்டு தென்னிந்திய மொழிகளை மற்றவர்களுக்கு பேச கற்றுக் கொடுப்பது எனக்கே சுவாரசியமாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளை தாய் மொழியாகத் கொண்டவர்கள் பேசுவது போல் சரளமாக என்னால் பேச - முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், இவ்விரு மொழிகளிலும் நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஒருவேளை நான் தென்னிந்தியாவிலேயே செட்டிலாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இவ்விரு மொழிகளும் எனக்கு உதவக் கூடும்.

ஆனால் பெரும்பாலும் பலர் என்னிடம் பேசும்போது ஹிந்தியில் பேதுவதுதான் வருத்தமாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பேச கற்றுக் கொண்டாலும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அழகான இனிமையான மொழி, மலையாளம் கற்றுக் கொள்ள ஆர்வமிருந்தாலும், நான்கு தென்னிந்திய மொழிகளில் மலையாளம் கற்பது சிரமமாகப்படுகிறது என்று சொல்லும் அபிலாஷா சட்டர்ஜியின் இன்ஸ்ட்டாகிராமை கடந்த மூன்று மாதங்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1-7 மில்லியன் என்பது இவருக்குப் பெருமையாக இருக்கிறதாம்.

என்னைப் பின் தொடர்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் ஒருவேளை நீங்களும் தென் மாநிலங்களுக்கு வர நேர்ந்தால் உங்கள் வீட்டு வேலையாட்களிடமும், ஆட்டோ டிரைவர்களிடமும் பேசுவதற்கு இந்த மொழிகளைக் கற்றுக் கொண்டால் உதவியாக இருக்கும்'' என்கிறார் அபிலாஷா சட்டர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com