கதை சொல்லும் குறள் - 40:  பாதுகாப்பு!

மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் மணி கண கணவென்று ஒலித்து முடிந்த இரண்டு நிமிடங்களில், அவிழ்ந்து போன மாங்காய் மூட்டையாக மாணவர்கள் வெளியே சிதறி ஓடிக் கொண்டிருந்தனர்.
கதை சொல்லும் குறள் - 40:  பாதுகாப்பு!

மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் மணி கண கணவென்று ஒலித்து முடிந்த இரண்டு நிமிடங்களில், அவிழ்ந்து போன மாங்காய் மூட்டையாக மாணவர்கள் வெளியே சிதறி ஓடிக் கொண்டிருந்தனர். பள்ளியின் கேட் அருகே சுகன்யா தன் மகளின் வரவை நோக்கி நின்று கொண்டிருந்தாள்.

""மாதவி உங்க அம்மா வந்துட்டாங்கடி'' என்று கோமதி தகவல் தந்தாள்.
அவளைச் சுற்றி நடந்து வந்த அவளின் தோழிகள் கொல்லெனச் சிரிக்க, நடையை வேகம் கூட்டி, தன் தாய் அருகே வந்தவள்,
""தினமும் இப்படி வந்து நிக்காதேன்னு எத்தனைமுறை சொல்றேன், கேக்க மாட்டேங்கிறியே, நான் என்ன சின்னப் பாப்பாவா, என் பிரண்ட்úஸாட  அப்பா, அம்மா யாராவது இப்படி வந்து நிக்கறாங்களா? +1 படிக்கிறேன், அடுத்த வருஷம் படிப்பை முடிச்சா காலேஜுக்குப் போயிடுவேன்; அங்கேயும் இப்படித்தான் வந்து நிப்பியா?''
தன் முகத்தில் பூத்த புன்னகையை மாற்றிக் கொள்ளாமல், ""மாதவி இப்படி பையைக் கொடு நான் தூக்கியாறேன்'' என்றாள் சுகன்யா.
""அம்மா ப்ளீஸ், தினமும் காலையிலும், மாலையிலும் இப்படி என் கூடவே வராதே அம்மா, என் சிநேகிதிகள் எல்லாம் கேலி பண்ணறாங்க''.
""அவங்க பண்ணட்டும்மா, அதனாலே நான் வராமல் இருக்க மாட்டேன். உன் பிஞ்சுக் கைகளைப் பிடிச்சுக்கிட்டு எல்.கே.ஜி. படிக்கக் கூட்டியாந்தது முதல் இன்றுவரை இதை செய்துக்கிட்டுத் தானே வரேன்''.
""என் மீது நம்பிக்கை இல்லையா?'' நேராக நின்று அன்பு மகள் சுகன்யாவின் கண்களை உற்று நோக்கிக் கேட்க,
""உன் மீது இருக்கும்மா; உன் வயசு மீது இல்லை''.
இரவு உணவை முடித்துவிட்டு, நீண்ட நேரம் படித்துவிட்டுப் படுத்த மாதவி உறங்கிப் போய் இருந்தாள்.
பள்ளிக்கூடத்திலிருந்து வந்தது முதல் முகத்தை  "உர்' என்று வைத்திருந்தாள். தாயிடம் சரியாகப் பேசவில்லை.
மாதவியின் சுருண்ட முடிகளில் சில அவள் முன் நெற்றியில், மின்விசிறி ஏற்படுத்திய காற்றில் அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தது; சுகன்யாவின் மனதைப் போல. பல வகையான எண்ணக் குவியல்கள் அலைகளாகப் பொங்கி அவளைக் கடந்த காலத்திற்கு இட்டுச் 
சென்றது...
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வாழைப்பழ ஜோசியர் குமரவேல் என்றால் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, நல்ல நாள் குறித்துக் கொடுப்பது, தோஷத்திற்குப் பரிகாரம் கூறுவது என்பதோடு ஜோசியமும் சொல்லுவார். அதுசரி அவருக்கு ஏன் வாழைப்பழ ஜோசியர் என்ற பெயர் வந்தது? இரண்டு வாழைப்பழங்களுடன் வெற்றிலைப் பாக்கு வைத்து வெறும் ஐம்பது ரூபாய் கொடுத்தால் போதும் வந்த காரியம் முடிந்துவிடும்.

ஆஸ்தியென்று பெரியதாக ஒன்றும் இல்லையென்றாலும், ஒரு பையன் மஞ்சுநாதன், ஆசைக்கு ஒரு பெண் சுகன்யா. குமரவேலின் மனைவி தாமரை, அழகி, அடக்கமானவள், கணவனின் வருமானத்தில் அழகாக, நிறைவாக குடும்பத்தை நடத்திச் செல்பவள்.

தன் பையன் மஞ்சுநாதனைப் போலவே, தன் பெண்ணிற்கும் கல்விச் செல்வத்தைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிச் சுகன்யாவைத் திருவல்லிக்கேணியில் இருந்த  ஸ்ரீ ஆண்டாள் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். 

தன் அம்மா தாமரையைப் போலவே, சுகன்யாவுக்குத் தங்க நிறம், நீண்ட விழிகள், எடுப்பான நாசி, சிவந்த அதரங்கள் என்று பதினான்கு வயசிலேயே தேவதையாக வலம் வந்தாள். தன்னுடைய பன்னிரெண்டாவது வயதிலேயே சுகன்யா பூப்பெய்து விட்டதால், இடைப்பட்ட வருடங்களில் பருவத்தின் பூரிப்பு அவளிடம் அதிகமாக இருந்தது. இயற்கை அந்த வயதிற்கே உண்டான பருவ ஆசைகளை அவளுள் மொட்டுவிட்டு இருந்த சமயம் அது.

குமரவேலின் எதிர்வீட்டில் ஒரு வக்கீல் வாழ்ந்து வந்தார். அவருடைய ஒரே மகன் செல்வம். பெயருக்கு ஏற்றாற்போல, அவனிடம் செல்வமும் இருந்தது, பெற்றோரின் செல்லமும் சற்றுக் கூடுதலாகவே இருந்தது.

இருபது வயசுக் காளையான செல்வம் பி.ஏ., படிப்பில் இரண்டாம் வருடத்தில் இருந்தான். அவனின் பார்வை சுகன்யாவையே வட்டமிடத் தொடங்கியிருந்தது. ஒன்பதாம் வகுப்பை முடித்து, பத்தாவது வகுப்புக்கு சுகன்யா செல்லும்பொழுது, செல்வத்தின் வலையில் வீழ்ந்து விட்டாள்.

தன் தந்தையின் காரில் செல்வம் சுற்றிக் கொண்டிருப்பான். ஒருமுறை பெரும் மழையில் நனைந்து கொண்டு வந்த சுகன்யாவுக்கு லிப்ட் கொடுக்கிறேன் பேர்வழி என்று, அவளைத் தன் காரில் ஏற்றி, ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, அவளைத் தன் காதல் வலையில் விழச் செய்துவிட்டான்.

யாருக்கும் தெரியாமல் சந்திப்பதாகச் சுகன்யாவும், செல்வமும் நினைக்க, விஷயம் அரசல்புரசலாகக் குமரவேலுவின் செவிகளில் விழ, எரிமலையாகப் பொங்கி எழுந்துவிட்டார். பதினான்கு வயசுப் பொண்ணுக்குக் காதல் கேக்குதான்னு பிரம்பால் விளாசி, படிப்பை நிறுத்தி, பரமக்குடியில் இருந்த தன் தமக்கையின் வீட்டுக்குச் சுகன்யாவை அனுப்பி வைத்து விட்டார்.

பரமக்குடியில் பள்ளிகள் இருந்தாலும் சுகன்யாவைப் படிக்க அனுப்பவில்லை. அத்தையின் வீடே ஜெயிலானது. வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்கப் படுத்தப்பட்டாள். எப்படா பதினெட்டு வயசை சுகன்யா அடைவாள் என்று காத்திருந்து, கும்பகோணத்தில் டிராக்டரின் உபரி பாகங்களை விற்பனை செய்யும், சில்லரை வியாபாரியான சுந்தருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.

சுகன்யாவும் பழைய நினைவுகளை எல்லாம் கெட்டக் கனவாக எண்ணி மறந்து சுந்தரத்தோடு மகிழ்ச்சியாகக் குடித்தனம் செய்யத் தொடங்கினாள். ஆரம்பத்தில் அவர்களுடைய வாழ்க்கையும் நல்லமுறையில் தான் நடந்தது, சுந்தரம், சுகன்யாவின் மீது அளவில்லாத அன்பைப் பொழிந்தான். திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் மாதவி அவர்களுக்கு மகளாகப் பிறந்தாள்.

யாருடைய கண் பட்டதோ, சுந்தரத்தின் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வேறு தொழில்கள் செய்து பார்த்தும் மீண்டும் மீண்டும் தோல்விதான். சுகன்யாவின் எல்லா நகைகளும் முதலில் அடகுக் கடைக்குச் சென்று பிறகு வட்டி ஏறியதால் சொற்ப விலைக்கு விற்கப்பட்டன.

கவலையை மறக்கிறேன் பேர்வழி என்று சுந்தரம் குடிக்கக் கற்றுக் கொண்டான். மது அரக்கன் பிடித்தவரை சும்மா விடுவானா? ஏகப்பட்டக் கடனை வாங்கி, கடனாளியாக, ஈரல் கெட்டு, சுகன்யாவைக் கைம்பெண்ணாக்கி மறைந்தான் சுந்தரம்.

குமரவேலும், தாமரையும் தன் பெண்ணின் இந்த அவலங்களை எல்லாம் பார்ப்பதற்கு முன்னரே இயற்கை எய்திவிட்டனர். சுகன்யாவின் அண்ணன் மஞ்சுநாதனுக்கு வாய்த்த மனைவி சூர்ப்பனகையின் மறு உருவம் என்று கொள்ளலாம். ஆதரவு தேடி வந்த நாத்தனாரை அவள் படுத்திய பாட்டில் சுகன்யாவினால் அங்கே இரண்டு மாதங்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ஒன்பதாவது வரைப் படித்தவளுக்கு எந்த வேலை கிடைக்கும்? ஒரே அறை கொண்ட ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்துகொண்டு, தனக்குத் தெரிந்த சமையலைக் கைக்கொண்டு இரண்டு மூன்று வீடுகளில் சமையல்காரியாக வேலை பார்த்தாள். பிறகு கையில் சிறிது பணம் சேர்ந்ததும், தன் ஒரே மகள் மாதவியை, நல்ல பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தாள். 

படிப்பு அரைகுறை, இளம் விதவை, அதிலும் அழகி,  அப்பப்பா இந்த சமுதாயத்தில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைப்பதற்கே பெரும் பாடாக ஆனது, வாழ்க்கையின் பாடமாகவும் அமைந்தது.

படிக்கிற காலத்தில், சரியாகப் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால் இன்று பெரிய படிப்பாளியாக, உயர்ந்த உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதித்துக் கெளரவமாக வாழ்ந்திருக்கலாம்.

இன்று மாதவி படிப்பறிவு இல்லாத ஒரு சமையல்காரியின் மகள். தன் மகள் மாதவி தன்னைப் போலவே அழகியாக இருக்கிறாள், பருவமும் அடைந்து விட்டாள், இனிக் கழுகுகள் அவளை வட்டமிடத் தொடங்கும், படிப்புக் கெட்டு, பருவக் கிளர்ச்சியில் காதலிக்கிறேன் பேர்வழி என்று பாதைத் தவறி அவள் போய்விடக் கூடாது என்று மாதவியை, சுகன்யா கண்குத்திப் பாம்பாகக் காவல் காக்கிறாள். மற்றவர்களின் கேலிப் பேச்சுப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை, வேலியாக இருந்துத் தன் மகளை நல்வழிப் படுத்துவாள். மாதவி, தாயாகும் பொழுது என்னைப் புரிந்து கொள்வாள் என்று தன் மனதை சுகன்யா சமாதானப்படுத்திக் கொண்டாள்.

சுகன்யா குழந்தைகள் நல மருத்துவமனை என்கின்ற கட்டடம் உயர்ந்து எழுந்து நிற்கிறது. டாக்டர் மாதவி, தன் கணவர் டாக்டர் மாதவனோடு ஒன்றாகத் தங்களுடைய சொந்த மருத்துவமனையில் பணிபுரிகிறாள்.

பாட்டி சுகன்யா, தன் பேரனைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

""அம்மா இன்று எனக்கு இரண்டு சிசேரியன் கேஸ்கள் இருக்கு; நான் வரச் சற்று தாமதமாகும்'' என்றாள் மாதவி.

""அத்தை, எனக்கு ஒரு மெடிக்கல் கான்பரென்ஸ் இருக்கு, எங்களுக்காகக் காத்திராமல் சாப்பிட்டு விடுங்கள்'' என்றான் மருமகன் மாதவன்.

ஜோடியாகப் படியிறங்கி, காரில் ஏறிச் செல்லும் தன் மகளையும், மருமகனையும் பார்த்து உள்ளம் பூரித்து நிற்கிறாள் சுகன்யா.

""பாத்தி'' என்று மழலையாகக் கூப்பிடும் பேரனை அணைத்து அவனுடைய கன்னத்தில் அழுத்தி முத்தமிடுகிறாள் சுகன்யா.

""செல்லம், நீயும் டாக்டராக வரணும் தெரியுமா'' என்று கொஞ்ச. பேரன் பொங்கிச் சிரித்தான். ஒரு தலைமுறையின் கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் தொடரும்தானே!

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்(கு)
எழுமையும் ஏமாப் புடைத்து.

 (குறள் எண்: 398)

பொருள் : ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com