கல்வி சேவை!

1993-ஆம் ஆண்டு  எட்டாம் வகுப்பு  தேர்வு  எழுதுவதற்கு முன்பே  13 வயதில் திருமணமாகி  உத்தரப்பிரதேசம்  புலந்சாஹரியிலிருந்து  கணவருடன்  தில்லி வந்த சுனிதா சவுஹானுக்கு படிப்பைத் தொடராமல் விட்டுவிட்டது
கல்வி சேவை!

1993-ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்பே 13 வயதில் திருமணமாகி உத்தரப்பிரதேசம் புலந்சாஹரியிலிருந்து கணவருடன் தில்லி வந்த சுனிதா சவுஹானுக்கு படிப்பைத் தொடராமல் விட்டுவிட்டது மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 41 வயதாகும் சுனிதா, சமூக சேவையில் மாஸ்டர் டிகிரியும், எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, "மம்தா வெல்பேர் சொசைட்டி' என்ற பெயரில் தொண்டு நிறுவனமொன்றையும் நடத்தி வருகிறார். இந்த சாதனைக்காக இவர் எடுத்த முயற்சிகள் என்ன?

""என்னுடைய குடும்பத்தில் பையன்களைவிட நான் நன்றாக படிப்பேன். பள்ளியிலும் முதல் மாணவி நான்தான். திருமணத்திற்குப் பின் நான் படித்த அதே பள்ளியில் படிப்பைத் தொடர நினைத்தபோது. அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் மேற்கொண்டு படிக்க முயலவில்லை. அதிர்ஷ்டவசமாக என்னுடைய கணவரும், அவரது சகோதரரும் நான் படிப்பைத் தொடர உதவ முன்வந்தனர். 1998- ஆம் ஆண்டு பள்ளி இறுதியாண்டு படிப்பைப் பூர்த்தி செய்தேன். பின்னர், சற்று இடைவேளி ஏற்பட்டது. காரணம் எனக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்ததால் படிப்பைத் தொடர்வது சிரமமாக இருந்தது.

இறுதியில் 2008-ஆம் ஆண்டு இந்திராகாந்தி தேசிய திறந்த வெளிக் கல்லூரியில் படித்து சமூகசேவைத் துறையில் மாஸ்டர் டிகிரி பெற்றேன். பின்னர் படிக்க வசதியில்லாத குழ்தைகளுக்கும், படிப்பை பாதியில் நிறுத்திய ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் நோக்கத்தோடு தில்லியில் நான் வசித்து வந்த பகுதியிலேயே "மம்தா வெல்பேர் சொசைட்டி' என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றைத் தொடங்கினேன். பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதே என் குறிகோளாக இருந்தது.

நான் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவதை பார்த்த "பிராதம்' என்ற தன்னார்வ தொண்டு நிர்வாகிகள். நான் அங்கன்வாடியில் பணியாற்றுவதாக நினைத்துக் கொண்டனர். என்னிடம் விசாரித்தபோது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவதை சமூக சேவையாக கருதுகிறேன் என்று அவர்களிடம் சொன்னேன். அப்படியானால் குழந்தைகளுக்காக "பாலவாடி ஒன்றை ஏற்று நடத்த முடியுமா?' என்று கேட்டனர். நானும் ஒப்புக் கொண்டேன். முழுமையான பள்ளிக்கூடம் போல் முழு அளவில் பாடங்களைச் சொல்லித் தரத் தொடங்கினேன். சில மாதங்களுக்குள் அந்தத் தொண்டு நிறுவனம் எனக்கு பண உதவியளிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் சமூக சேவையில் முழுமையாக ஈடுபட்டேன். என்னுடைய தொண்டு நிறுவனத்தையும் முறைப்படி பதிவு செய்து கொண்டேன்.

நான் படிப்பதற்காக சமூக சேவைத் துறையை தேர்வு செய்தது எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. குழந்தைகளுக்கு அனைத்து பாடங்களையும் கற்றுத் தர இது மட்டும் போதாது என்று நினைத்தேன். எம்ஃபில் படித்து முடித்தேன். தற்போது பி.எச்.டி பெறும் முனைப்பில் உள்ளேன்.

நான் பள்ளிப் படிப்பை முடித்தால் போதும் என்று நினைத்த என் குடும்பத்தினர் இப்போது என்னைப் பற்றிப் பெருமை படுவதோடு எல்லாரிடமும் சொல்லி பாராட்டுகின்றனர்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மேற்கொண்டு தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி கற்க அனுப்ப மறுத்தவர்கள் கூட தொடர்ந்து படிக்க அனுப்புவதற்கு நான் முன்னுதாரணமாக இருப்பதாக கூறுகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் மாஸ்டர் டிகிரி பெற்ற தகவலை என் தந்தையிடம் தெரிவித்தபோது, அவர் கண்கலங்கி அழுதது மறக்க முடியாத நிகழ்வாகும்.

சமூக சேவைப்பற்றி படிக்கும்போதுதான் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்பதையும், பெற்றோர் தான் முன்னின்று ஊக்கப்படுத்த வேண்டுமென்பதையும் அறிவுறுத்த வேண்டிய அவசியத்தை தெரிந்து கொண்டேன். இதை உணர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கிறார்கள்'' என்கிறார் சுனிதா சவுஹான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com