உழைப்பே உங்கள் இலக்கு!
By பூர்ணிமா | Published On : 02nd December 2021 06:58 PM | Last Updated : 02nd December 2021 06:58 PM | அ+அ அ- |

ஹாக்கி விளையாட்டில் நான் எடுத்துக் கொண்ட விடாமுயற்சியும், கடின உழைப்புமே பத்ம ஸ்ரீ மற்றும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் பெற காரணமாகும் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ( 26) கூறியுள்ளார்.
""கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுகள் பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டு விழாவின்போது வழங்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாள்களுக்குள் கேல் ரத்னா விருதையும் பெற்றது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக அமைந்துவிட்டது. நாட்டின் பெருமைக்குரிய இந்த விருதுகளைப் பெறுவதற்கு என்னுடைய கடினமான விடாமுயற்சியும், உழைப்பும் காரணமாகும்.
இந்த விருதுகள் நான் விளையாடத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் கிடைத்துவிடவில்லை. 20 ஆண்டுகள் தொடர்ந்து ஆடி வந்ததால் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ஆன பின்னர் அரசால் என்னுடைய திறமை அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டதாகும்.
ஹரியானாவில் உள்ள கிராமமொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், சிறுவயதிலேயே ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்டு பயிற்சிப் பெற்று விளையாடத் தொடங்கினேன். அப்போது எதிர்காலத்தில் நான் ஹாக்கியில் முன்னேறி, இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ஆவேன் என்றோ, விருதுகள் பெறுவேன் என்றோ நினைக்கவே இல்லை. என்னுடைய முயற்சிக்கு பெற்றோரும், பயிற்சியாளர்களும், சக விளையாட்டு வீராங்கனைகளும் கொடுத்த ஒத்துழைப்புமே நான் சிறந்த வீராங்கனையாக உயர உதவியது.
சாதாரண கிராமத்துப் பெண்ணான நான், இந்த உயர்ந்த விருதுகளை என் பெற்றோருடன் சென்று, குடியரசு தலைவர் கையால் பெற்றபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கடந்த ஆண்டுகளில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களால்தான் இந்தப் பெருமை கிடைத்துள்ளது. பெண்கள் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
விளையாட்டுத் துறையில் ஈடுபட விரும்பும் இளம் பருவத்தினர் கடினமான முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே சிறந்த வீரர்களாகவோ, வீராங்கனைகளாகவோ உயர முடியும். இந்தத் துறையில் வெற்றி தோல்வியைப்போல் ஏற்ற இறக்கங்களும் தொடர்ந்து இருக்கும். இதை உணர்ந்து ஆடும்போது கிடைக்கும் வரவேற்பும், ஆதரவும் உங்கள் இலக்கை அடைய உதவும்'' என்கிறார் ராணி ராம்பால்.