நிறைய தண்ணீர் அருந்துங்கள்!

ஆதி மனிதன் வேட்டையாடி உணவைச் சுவைக்கத் துவங்கிய அக்காலம் முதல் அறியப்பட்ட சுவைகளின் வரலாற்றைத் தெரிந்து வைத்திருப்பதுடன், சுவையின் அறிவியல் உண்மைகளையும் உணவால் சுவைகளில் ஏற்படும்
நிறைய தண்ணீர் அருந்துங்கள்!


ஆதி மனிதன் வேட்டையாடி உணவைச் சுவைக்கத் துவங்கிய அக்காலம் முதல் அறியப்பட்ட சுவைகளின் வரலாற்றைத் தெரிந்து வைத்திருப்பதுடன், சுவையின் அறிவியல் உண்மைகளையும் உணவால் சுவைகளில் ஏற்படும் மாறுதல்கள் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம். ஆறு சுவைகளுள் ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் உதவுகிறது. இனிப்புச் சுவை தசையை வளர்க்கிறது. புளிப்புச் சுவை கொழுப்பைக் கரைக்கிறது. கார்ப்புச் சுவை எலும்பை வளர்க்கிறது, துவர்ப்புச் சுவை ரத்தத்தை விருத்தி செய்கிறது, கசப்புச் சுவை நரம்புகளை உறுதி செய்கிறது, உவர்ப்புச் சுவை உமிழ்நீரைச் சுரக்க வைக்கிறது.

சுவையை உணரும் அடிப்படை அலகு நாக்கில் உள்ள சுவை அரும்புகள்தான். மனிதனின் நாக்கில் ஏறக்குறைய 10,000 சுவை அரும்புகள், கோள வடிவத்திலும் 50-70 மைக்ரான் விட்ட அளவிலும் அமைந்துள்ளன. குழந்தைகளுக்கு சற்று அதிகமான எண்ணிக்கையிலே இருக்கும் சுவை அரும்புகள் முதுமைக்காலத்தில் எண்ணிக்கையில் குறைவதால்தான், முதியவர்களுக்கு, சுவை அறியும் திறன் குறைகிறது. உட்கொள்ளும் மருந்துகளால் மணம் மற்றும் சுவையறியும் திறன் குறைபாடு இருப்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 35 வயது மற்றும் அதற்குக் கீழுள்ள வயதினரைவிட 4.4. மடங்கு அதிகமாக முதியவர்களே சுவைத்திறனை இழப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதும் இக்கூற்றினை உறுதிப்படுத்துகிறது.

ஒரே உணவால், ஒருவருக்குக் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட பிரதான சுவையை மற்றொருவர் சரியாக உணர்ந்தாலும், சுவையின் அளவீடு இருவருக்கும் மாறுபடும். இதுவே சுவையின் அடர்த்தி அல்லது ஆழம் என்ற அளவீடாகக் (thershold) கூறப்படுகிறது. இது மரபியல் சார்ந்தது என்றாலும் ஒருவருக்கொருவர் மாறுபடுவதுடன் சுவையற்றவர் மிக நுட்பமாக சுவையறிபவர் என்ற தனித்தன்மையைக் கொடுத்துவிடுவதுமுண்டு. இந்த சுவை அளவீடு, உணவு உண்பவரின் மனநிலை உணவு பரிமாறப்படும் இடம், சூழல் போன்றவற்றைப் பொருத்தும் மாறுபடுகிறது.

ஒரு உணவின் சுவையை உணர வேண்டுமெனில் உமிழ்நீர் மிக அவசியம். உமிழ்நீரின் கரைக்கும் தன்மையால், திடமான உணவுப் பொருட்களின் சிறு துகள்கள் கரைக்கப்பட்டு, அதன் மூலமாக சுவை உணர்வு அரும்புகள் தூண்டப்பட்டு சுவையை உணர்த்துகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 1000 முதல் 1500 மி.லி வரை சுரக்கப்படும் உமிழ்நீரில் அமிலத்தன்மை 6.35 முதல் 6.85 வரை இருந்தாலும், புளிப்பு மட்டுமின்றி அனைத்து வகையான சுவையையும் பிரித்து அறிந்து உணர்த்துவது உடலியங்கியலின் விந்தைதான். நீர் 99.5 சதவிகிதமும், திடப்பொருட்களாக என்சைம்கள், கரிமப்பொருட்கள், கனிமப்பொருட்கள், வாயுக்கள், புரதங்கள் போன்றவை 0.5 சதவிகிதமும் உமிழ்நீரில் உள்ளன. அதிலுள்ள ஒவ்வொரு பொருட்களும் உணவிலுள்ள மூலக்கூறுகளுடன் புரியும் வேதிவினைகளின் வாயிலாகவே சுவை அறியப்படுகிறது.

வாயில் சுரக்கும் உமிழ்நீரின் அளவு குறைந்து, உலர்வான நிலை ஏற்படும்போதும் சுவையறியும் திறன் குறைகிறது. மருத்துவத்தில் சுவையின்மை ageusia என்றும், சுவை குறைவாக இருக்கும் நிலை hypogesia என்றும், சுவை மாறி மாறித் தெரிவது dysgeusia என்றும் கூறப்படுகிறது. சில வகையான நீடித்த நோய்கள், மனநோய், போன்றவற்றிலும் முதுமை காலத்திலும் எந்த சுவையாக இருந்தாலும் பிரதான சுவையை உணர இயலாமல், உலோகச் சுவையே உணரப்படுகிறது. இதற்கு phantogeusia என்று பெயர். இவையனைத்தும் அனைவருக்கும் வருவதில்லை.

எங்கேயோ ஒரு சிலருக்குத்தான் நாட்பட்ட சிக்கலாக வந்துவிடுகிறது. ஆனால், சாதாரண சளிக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், கரோனா காய்ச்சல் போன்றவை வரும்போது, பாதிக்கப்பட்ட அனைவருக்குமே உணவின் மணம் அறியும் சுவையறியும் திறன் குறைந்து விடுகிறது. ஆனால், காய்ச்சலிலிருந்து குணமடைந்த பிறகு, சுவையும் மணமும் மீண்டும் வந்துவிடும். இதற்கும்கூட, ஓமத்தை வறுத்து நுகர்தல், ஓம நீரை வாயில் வைத்திருந்து சிறுகச் சிறுகக் குடித்தல், ஆல்பகோடா பழம், அத்திப்பழம் சாப்பிடுதல், புளிப்பு ஊறுகாய் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்யலாம். ஏலக்காய், புதினா, கிராம்பு போன்றவை அடர்த்தியான மணத்தையும் சுவையையும் கொடுப்பதால், இவற்றில் ஒன்றிரண்டை வாயில் வைத்து மெல்லுவதும் சுவையரும்புகளை லேசாகத் தூண்டிவிடும்.

ஊட்டச்சத்து குறைபாடுகள் கூட சுவையறியும் தன்மையை மாற்றிவிடுகிறது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிவதில்லை. துத்தநாகம், வைட்டமின் பி 12, நியாசின், தாமிரச் சத்துகளின் குறைபாடு நாக்கின் சுவை அரும்புகளைப் பாதிப்பதாலும் சுவையறிதலில் குறைபாடு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரி, தைராய்டு, கணையம் மற்றும் அட்ரீனல் போன்றவற்றின் மிகை மற்றும் குறை சுரப்பு நோய்களிலும் சுவையறியும் திறன் குறைந்து காணப்படும். இதுபோன்று ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிகமாக சுவையறிதல் சிக்கல் ஏற்படும்போது, அந்த சத்துகள் நிறைந்த உணவுகளைத் தொடர்ச்சியாக உண்ணுவதால் ஓரளவிற்கு முன்னேற்றம் காணலாம். உதாரணத்திற்கு, தாமிர சத்துக் குறைபாடு இருப்பதை மருத்துவரின் வழிகாட்டுதலுடன் ரத்தப் பரிசோதனைகள் மூலமாகத் தெரிந்து கொண்டு, தாமிரச் சத்து நிறைவாக உள்ள பாதாம், பிஸ்தா, வால்நட், அத்திப்பழம், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல், நியாசின் சத்துக் குறைபாடு நீடித்தால் தடித்த தோல், வாய் வீக்கம், உடல் சோர்வு,

குமட்டல், தலைவலி போன்றவற்றுடன் சுவையறிதலும் குறைந்து இருக்கும். இதனால், உணவைத் தவிர்ப்பார்கள். இந்த நிலையில், நியாசின் அதிகமுள்ள ஆட்டு ஈரல், மீன், சிவப்பு கைக்குத்தல் அரிசி போன்றவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

வாய் மற்றும் உணவுக்குழலில் இருக்கும் சளி சவ்வுப் படலத்தில் ஏற்படும் நோய்கள், பிற நாளமில்லா சுரப்பி நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, நீடித்த நோய்களுக்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் மற்றும் மனநோய்கள் போன்றவற்றால், நாக்கில் வலியுடன் சேர்ந்த எரிச்சல் ஏற்படுகிறது. இது வாய் எரிச்சல் நோய் (burning mouth syndrome) என்றழைக்கப்படுகிறது. இதயநோய்களுக்காகக் கொடுக்கப்படும் gemfibrozil, captopril, ஆஸ்த்துமாவிற்காக் கொடுக்கப்படும் beclomehasone, terutaline, தொற்றைக் குணப்படுத்த கொடுக்கப்படும் amprenavir, metronidazole, cefuroxine போன்ற மருந்துகள் நாவின் சுவையறியும் தன்மையை மாற்றி உண்ணும் ஆர்வத்தைக் குறைத்துவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல்,நோயாளிக்குப் பிடிக்காத உலோகம், மண் போன்றவற்றின் சுவையைக் கொடுத்துவிடுவதால், சில நேரங்
களில் உணவை முற்றிலும் தவிர்த்துவிடும் நிலையும் ஏற்படுவதுண்டு. இதுபோன்ற நிலைகளில் அடிக்கடி வெதுவெதுப்பான நீர் அருந்துவது, உப்புநீரில் வாய் கொப்பளிப்பது, சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்த நீரை வாயில் வைத்திருந்து மெதுவாக விழுங்குவது போன்றவை நிவாரணம் கொடுக்கும். மேலும், இவ்வாறான சுவை அறிதல் குறைபாடு உள்ளவர்களுக்காகவே சிறப்பு பற்பசைகள் இருக்கின்றன. மருத்துவர்களின் பரிந்துரையுடன் அவற்றைப் பயன்படுத்தலாம்.

வாய் எரிச்சல் மற்றும் சுவை மாறுபாடு இருப்பவர்கள், பொதுவான நிவாரணமாக நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். இதனால், வாயும் நாக்கும் உலர்வாக இருப்பது தவிர்க்கப்பட்டு சுவை அரும்புகள் உயிர்ப்புடனும் ஓரளவிற்கு சுவை அறிதல் திறனை சரியாகச் செய்வதற்கும் உதவி செய்கிறது. ஆரஞ்சுப் பழச்சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளி, காபி போன்ற பொருட்கள் சிலருக்கு எரிச்சலை மேலும் அதிகப்படுத்தும் என்பதால், அவ்வாறு இருப்பின் தவிர்த்துவிடுவதுதான் நல்லது. மதுப்பழக்கம் சுவை அறியும் திறனை பொதுவாகவே குறைத்துவிடும்.

இதனால்தான், சாதாரணமாக சாப்பிடும்போது சேர்க்கும் காரம் உப்பு அளவை விட மது அருந்தியவர்களின் உணவில் சற்றே அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. ஆனால், மதுப்பழக்கமே, சுவை அறிதலிலுள்ள குறைபாட்டை அதிகரித்துவிடும் என்பதால், நோய்நிலை குணமாகும் வகையிலாவது மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், பான்பராக், பீடா, புகையிலை போடுவதையும் நிறுத்துவது நல்லது.


அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com