கதை சொல்லும் குறள் - 58: கண்ணற்றவன்!

சண்முகப்பிரியாவுக்கு ஆண்குழந்தை பிறந்து ஒரு மாத காலம் முடிந்திருந்தது. அன்றைய தினம் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா நடக்க இருந்தது.
கதை சொல்லும் குறள் - 58: கண்ணற்றவன்!


சண்முகப்பிரியாவுக்கு ஆண்குழந்தை பிறந்து ஒரு மாத காலம் முடிந்திருந்தது. அன்றைய தினம் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா நடக்க இருந்தது. பரம்பரையாகப் பல தலைமுறைகளைக் கண்ட தேக்குத் தொட்டிலில் குழந்தையை இட இருந்தார்கள்.

வார்னிஷ் அடிக்கப்பட்ட தேக்குத் தொட்டில், நடுக்கூடத்தில் பளபளத்து நின்றது. சாயந்தரம் மணி நான்கை நெருங்கியதும் பூ ஜோடனை செய்யும் கோவிந்தன், பூக்களுடன் வந்து தொட்டிலை அலங்கரிக்கத் தொடங்கினான்.

சேலத்தில் பூர்வீக வீடு மூன்று கட்டுகளைக் கொண்டது. வீட்டின் பின்புறத்தில் தடபுடலாக விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. ஏழு மணிக்குத் தொட்டிலில் இடும் வைபவம் முடிந்தவுடன், இரவு பலகாரம் என்று மொத்தம் பதினாறு ஐட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்பதே விழாவின் பெருமையையும், தனித்தன்மையையும் வெளிப் படுத்தியது.

சண்முகப்பிரியாவின் கணவன் மகாதேவன் சேலத்தில் புகழ்மிக்க ஆடிட்டர். பத்து வருடங்கள் கழித்து, தவமாய் தவமிருந்து தம்பதியருக்கு ஆண் வாரிசு அமைந்திருக்கிறது.

மாலை ஆறு மணி, ஆனதுமே கூட்டம் வரத் தொடங்கி விட்டது. கைகளில் குழந்தைக்கான பரிசுப் பொருட்களை ஏந்திய வண்ணம் வந்த விருந்தாளிகளை மகாதேவன், தன் கைகளைக் கூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தார்.

நல்ல நேரம் பார்த்து மகாதேவனின் தாயார் தன் பேரனைத் தொட்டிலில் இட, தாத்தா தன் பங்குக்குப் பேரனுக்கு "சுனையன்' என்ற பெயரைச் சூட்டினார்.

""சுனையனா, புதுமையான பெயராக இருக்கிறதே, அதன் அர்த்தம் என்ன?'' என்று ஒரு பிரபலம் கேட்க, தாத்தா சொன்னார், ""என் பேரனின் கண்களைப் பாருங்கள் எவ்வளவு அழகாக, தாமரை மொட்டுக்களை ஒத்து இருக்கிறது. பார்வையில்தான் எவ்வளவு தீர்க்கம். அதனாலேயே சுனையன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன்''.

""சுனையன் என்றால் அழகிய கண்களைத் தன்னகத்தே கொண்டவன் என்று அர்த்தம்'' என்றார்.

விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் சுனையன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் வெகு அழகான கண்களை உடையவன் என்பதை ஒரு மனதாக ஒத்துக் கொண்டனர்.

தங்களுடைய ஒரே மகன் சுனையனை மகாதேவனும், சண்முகப்பிரியாவும் அருமை, பெருமையாக வளர்த்தனர். அவன் ஒன்று கேட்டு அவர்கள் இல்லை என்ற பதிலை இன்றுவரை சொன்னதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அறிவு, அழகு, செல்வம் என்று அத்தனையையும் பெற்ற சுனையனை நண்பனாக ஆக்கிக் கொள்ள அவனோடு படித்த ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் போட்டி போட்டனர்.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இன்று சுனையன் இளம் காளை. ஆறடி உயரம், மாநிறம் என்றாலும் ஆளை வீழ்த்தும் கண்களின் அசைவுடன் பேரழகனாக வலம் வந்தான்.

சேலத்தில் இயங்கும் சென்ட்ரல் லா காலேஜில் படிக்கிறான். ஏனோ அவனுக்கு சி.ஏ., படிப்பதில் ஆர்வம் இல்லை. ஒரு வழக்கறிஞனாக வலம் வரவே விரும்பினான்.

மகாதேவனும், தன் ஒரே மகனின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பவில்லை. சுனையன் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு காலடி எடுத்து வைத்தபொழுது தீபிகா அவனுக்கு நெருங்கிய பெண் தோழி ஆனாள். காதலி ஆனாள் என்று சொல்ல முடியாது; அவர்களுடைய நட்பு அந்தக் கட்டத்தை எட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தீபிகாவும் அழகிதான். சேலத்தில் புகழ்பெற்ற தொழிலதிபரின் ஒரே மகள்.

எப்பொழுதுமே சுனையனைச் சுற்றிப் பெரிய நண்பர் கூட்டம் இருக்கும், அதில் ஒருத்தியாக தீபிகா இருந்தாள்.

"சுனையன்' என்று அழைத்துக் கொண்டே தீபிகா வந்தாள்.

தன்னுடைய, பி.எம்.டபிள்யு காரை, வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, காரை பூட்டிக் கொண்டிருந்த சுனையன், தீபிகாவின் குரல் கேட்டுத் திரும்பினான்.

""என்ன தீபிகா?'' என்றான்.

""மூன்று நாட்களாக நான் கல்லூரிக்கு வரவில்லை''.

""அப்படியா'' என்று சுனையன் சொன்னதும், தீபிகாவின் முகம் சட்டென்று வாடியது. மூன்று நாட்களாகத் தான் வராததை சுனையன் கவனிக்கவில்லை என்பது அவளுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. தன் மீது அவனுக்கு ஈர்ப்பு இல்லையோ என்று தோன்றியது.

""என்னமோ சொல்ல வந்தியே'' என்றான் சுனையன்.

""இல்லை, ஹியூமன் ரைட்ஸ் அண்ட் இன்டர்நேஷனல் லாவில் நோட்ஸ் எடுத்ததைக் கொஞ்சம் கொடுக்கிறியா? அதை நான் எழுதிவிட்டுத் திருப்பித் தந்துவிடுகிறேன்''.

""அப்பப்பா, புரபசர் சரவணன் அற்புதமாகக் கிளாஸ் எடுத்தார், நோட்ஸூம் கொடுத்தார். கட்டாயமாக அதை நான் உனக்குத் தருகிறேன்'' என்றான் சுனையன்.

கொஞ்ச நாட்களாகவே தீபிகா மனதை, சுனையன் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான். அவன் மீது தனக்கு இருப்பது காதலா, இல்லை கவர்ச்சியா என்று புரியாமல் தீபிகா தவித்தாள்.

""தீபிகா'' என்று சுனையன் அழைத்தான். 

ஆனந்த அலைகள் தீபிகாவின் உள்ளத்தை அதிர வைத்தது.

""என்ன சுனையன்'' என்றாள்.

""இந்த ஞாயிற்றுக்கிழமை எனக்குப் பிறந்தநாள். எங்களுடைய பண்ணை வீட்டில் அதைக் கொண்டாடுறோம். மாலை ஆறு மணிக்கு எல்லாம் வந்துவிடு. இந்தா அழைப்பிதழைப் பிடி; என்னுடைய பிற நண்பர்களையும் அழைத்திருக்கிறேன். அன்று என் பெற்றோரையும் நீ சந்திக்கலாம்'' என்றான்.

""கட்டாயம் வருகிறேன்'' என்றாள் தீபிகா.

தீபிகா, சுனையனுக்கு என்ன பரிசைத் தருவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அழகிய அவனுடைய காந்தக் கண்களுக்கு விலையுயர்ந்த கார்டியர் கூலிங் கிளாûஸப் பரிசளிக்க விரும்பி தன் தந்தையிடம் பணம் கேட்டு அதை வாங்கியும் விட்டாள்.

ஆனால், நடுவில் ஒரு சங்கடம் ஏற்பட்டு விட்டது. சுனையனின் பிறந்த நாள் அன்று தீபிகாவின் குடும்பத்தினர் குலதெய்வம் வழிபாட்டுக்காகத் தஞ்சாவூர் செல்ல வேண்டியிருந்தது. தீபிகாவின் தந்தைக்கு அறுபது வயது தொடங்குவதினால், அபிஷேக ஆராதனைகளும், யாகங்களும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தீபிகா ஒரு முடிவுக்கு வந்தாள். சனிக்கிழமை மாலை சுனையனின் வீட்டுக்குச் சென்று, அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்தைக் கூறிவிட்டு, பரிசினைத் தந்துவிடுவது. தங்களுடைய வீட்டில் குலதெய்வத்திற்கு செய்ய இருக்கும் வழிபாட்டினால் தன்னால் வரமுடியாததை விளக்கிச் சொல்லிவிடுவது என்று செயல்பட எண்ணினாள்.

தன்னுடைய காரைத் தானே ஓட்டிக் கொண்டு, சுனையனின் வீட்டை அடைந்தாள்.

தீபிகாவின் நெஞ்சம் ஏனோ படபடத்தது. வீட்டின் பிரம்மாண்டம் அவளை மயக்கியது. இது நாம் வாழப்போகும் இடமாக இருக்குமோ என்று எண்ணி மகிழ்ந்தாள்.

கையில் பரிசுப் பொருளுடன் மெதுவாக இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள்.
""லொள், லொள்'' என்று ஒரு நாய் தீனக் குரலிட்டு அலறிக் கொண்டிருந்தது. அங்கே அவள் கண்ட காட்சி..

சுனையன், கையில் ஏந்திய பெல்ட்டைக் கொண்டு அந்த அல்சேஷன் நாயை அடித்துக் கொண்டிருந்தான். 

சனியன், என்னுடைய புது ஷுக்களைக் கடித்துக் குதறிவிட்டது. எவ்வளவு காஸ்டிலியான ஷுக்கள் என்று மேலும் மேலும் நாயை அடித்தான்.

சற்றுத் தொலைவிலிருந்து அவன் செயலைப் பார்த்த தீபிகா நடுநடுங்கிப் போனாள். வாயில்லாத ஜீவனுக்கு என்ன தெரியும்? சுனையன் அல்லவா ஷுக்களைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதற்காக இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் அடிப்பதா?

சுனையனின் அழகிய கண்களில் இருந்த கோபமும், வெறியும் அவைகளைக் கொடூரமான கண்களாக, கருணை அற்ற கண்களாகத் தீபிகாவுக்குக் காட்சி அளித்தன. அவளுடைய மனதில் மலரத் தொடங்கி இருந்த காதலும் கருகியது.


கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

(குறள் - 577) 

பொருள் :

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும், கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com