மகளிர் நூலகம்: ஒரு போராட்டம்!

தனக்குக் கிடைக்காத வசதிகள் தன் குடும்பத்தினருக்கு குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டுமென உழைப்பவர்கள் இருக்கிறார்கள்.
மகளிர் நூலகம்: ஒரு போராட்டம்!

தனக்குக் கிடைக்காத வசதிகள் தன் குடும்பத்தினருக்கு குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டுமென உழைப்பவர்கள் இருக்கிறார்கள். தனக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகள் என் ஊர் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகப்  போராடி வெற்றி கண்டிருப்பவர் மதுமிதா. தான் படித்த காலத்தில் கிடைக்காத நூலக வசதியை இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தித் தர இவர் மேற்கொண்ட முயற்சிகள் சொல்லி முடியாது. ராஜபாளையத்தை சேர்ந்தவரான இவர். சுதந்திரப்போராட்ட வீரரும் தியாகியுமான காந்தி அரங்கசாமி ராஜாவின் பேத்தி. சுதந்திர இந்தியாவில் அரசியல் வழியில் சேவையைத் தொடர்ந்த ரகுபதிராஜாவின்  மகள்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்க்ருதம் என்று நான்கு மொழிகளோடு கன்னடமும் படிக்கத் தெரிந்தவர்.  கடந்த 20 ஆண்டுகளில் இருபத்தைந்து நூல்கள் எழுதியிருப்பவர். கவிதை தொகுப்புகள், சிறுகதைகள், நாவல், நேர்காணல், மொழிபெயர்ப்பு என்று அனைத்து இலக்கிய வடிவங்களிலும் இவரது படைப்புகள் இருக்கின்றன. தமிழில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்.
 சம்ஸ்க்ருதத்தில் பர்த்ருஹரி சுபாஷிதம், நீதி சதகம், மஹாகவி காளிதாசரின் மேகதூதம், ருதுசம்ஹாரம் ஆகிய புகழ் மிக்க சம்ஸ்க்ருத நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இன்னும் தெலுங்கு, ஆங்கில நூல்களையும் மொழி பெயர்ப்பு செய்திருப்பதோடு குழந்தைகளுக்கான உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்வதிலும் ஆர்வம் காட்டி தைவான் நாடோடிக் கதைகள், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் சிறுகதைகள் போன்றவற்றை தமிழுக்குக் கொண்டு வந்து தமிழில் குழந்தை இலக்கியத்தை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

எந்த ஒரு தடையும் நாம் செய்யக் கருதும் செயலுக்கு இடையூறாக இருக்க முடியாது என்ற நம்பிக்கை கொண்டவர். புன்னகை மாறாத முகத்தோடு எந்த ஒரு சிக்கலையும் அணுகும் இயல்பு கொண்ட மதுமிதா மொட்டை அடித்துக் கொண்டு நிற்கிறார். ஏன்? கேட்போம். 

 மொட்டை அடித்துக் கொண்டதற்கு ஏதும் காரணங்கள் உண்டா?

இருக்கிறது. சில ஆண்டுகளாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் என்னுடைய கேசத்தைத் தர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கீமோதெரபி சிகிச்சையில் சிரமப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியாக இருக்கும் அல்லவா? நேற்று அதற்கான முறைகளை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் விசாரித்துக் கேட்டறிந்து கொடுத்துவிட்டு வந்தேன். சென்னை எனக்குப் புதிய ஊர் என்றாலும் இந்த முயற்சியில் எனக்கு உதவ நல்லுள்ளங்கள் கிடைத்தார்கள் என்பதில் மகிழ்ச்சி. முடியை தானமாகக் கொடுக்க நினைப்பவர்கள் என்னைப் போல மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. நீளமான முடி இருப்பவர்கள் தேவையான அளவுக்கு வெட்டிக் கொடுப்பதும் சாத்தியம். அதனால், இது நமக்கு எளிய விஷயம் தான் ஆனால் யாரோ ஒரு நோயாளிக்கு  அவசியமானது.                                          
ராஜபாளையத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நூலகம் தேவை என்ற எண்ணம் எப்பொழுது எப்படி வந்தது?

1990-ஆம் ஆண்டில் நான் என்னுடைய ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பை தொலைநிலை கல்வி வாயிலாகக் கற்க வேண்டிய சூழ்நிலை. படிப்பதற்கும் தேர்வுக்குத் தயாராக குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதற்கும் நூலகம் சென்றால் அங்கே பெண்கள் உட்கார்ந்து படிப்பதற்கோ எழுத்துவதற்கோ இடமில்லை. அந்த சூழ்நிலையும் பெண்கள் சங்கோஜமின்றி அமர்ந்து படிப்பதற்கேற்றதாக இல்லை. அப்போது தான் பெண்கள் படிக்க வேண்டாமா? அவர்கள் படிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டாமா? என்ற கேள்விகள் தோன்றின. பெண்களுக்கென தனி நூலகம் வேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனு எழுதி இன்னும் சில பெண்களையும் அழைத்துக் கொண்டு அரசு அலுவலகத்தை நோக்கி ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்ப்  முயற்சித்தேன். அன்றைக்கு என் தகப்பனார்  ரகுபதி ராஜா என்னோடு துணைக்கு வந்தார்கள். இன்றுவரை துணையாக நிற்கிறார்கள்.

சென்னை போன்ற மாநகரங்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள நூலகங்களை சென்று பார்ப்பேன். அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் எனக்கு மிகப் பிடித்தமான இடம். இதுபோலொரு நூலகம் நம் ஊரில் ஏன் ஏற்படுத்தக்கூடாது? என்ற கேள்வி வரும். வெளிநாடுகளில் இலங்கை யாழ்ப்பாண நூலகம், அமெரிக்காவின் வாஷிங்டன் நூலகங்கள் என்று சென்று பார்த்த பொழுது இப்படி ஒரு நூலகம் நம் ஊரிலும் இருந்தால் நன்றாயிருக்குமே என்ற ஏக்கம் வரும். அதனை சாத்தியமாக்க நம்மாலான முயற்சியை செய்துவிட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். அரசு அலுவலகங்களை நோக்கி நூலகம் கேட்டு நடக்கத் தொடங்குவேன்.

இவ்வளவு பகிரதப் பிரயத்தனம் அவசியமா?

பல முறை சறுக்கல்களை சந்தித்திருக்கிறோம். மனவேதனை அடைந்திருக்கிறோம். உரிய அதிகாரிகளை நேரில் சென்று பார்ப்பது, கடிதம் எழுதுவது,  வலியுறுத்துவது என்று தொடர் முயற்சிகள், இதோ நடந்துவிடும் என்று நினைக்கும் நேரத்தில் அதிகாரிகள் மாறியிருப்பார்கள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும். ஆனாலும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தோன்றியதில்லை.

நாம் அனைவருமே வீட்டுவரி கட்டுகிறோம். அதிலே ஒரு சிறு தொகை நூலக வரி என்று கட்டிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது எங்கள் ஊரில் எங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு நூலகம் வேண்டும் என்று கேட்பதில் தவறென்ன? கேட்டோம். 1991-இல் நூலகம் பெண்களுக்காக அரசு ஏற்படுத்தியது.

ஆனால், அது போதுமானதாக இல்லை. நூலகத்திற்கென்று நிரந்தரமான இடம் கூட இல்லாமல் நூலகம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாறியிருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி? நூலகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் வந்து படிப்பதற்கு ஏற்ற இடத்தில் வசதிகளோடு அமைத்துத் தர வேண்டும் என்று மனு கொடுக்க ஆரம்பித்தோம். ஒருவர் முயற்சியில் நடந்துவிடக் கூடிய காரியமா என்ன? ஊர்கூடி தேர் இழுத்தால் தானே தேரோட்டம் சாத்தியம். ராஜபாளையத்தில் மகளிர் அமைப்புகள் அரிமா சங்கம் ரோட்டரி சங்கம் என்று ஒன்பது அமைப்புகளை ஒருங்கிணைத்து நாம் விரும்பும் பகுதியில் நிரந்தரமான அரசுக் கட்டிடத்தில் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென முயற்சி மேற்கொண்டோம். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கனவு நனவாகியிருக்கிறது. வாசகர் வட்டத்தின் தலைவியாக என்னுடைய பங்கினை சரிவரச் செய்து விட்டோம் என்ற நிம்மதி ஏற்பட்டிருக்கிறது.

புதிய நூலகம் எப்படி இருக்கிறது?

இந்தியாவின் முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நூலகம் இது தான். குளிர்சாதன வசதியுடன் கணினி மற்றும் இணைய வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. அரிய மதிப்பு மிக்க நூல்கள் புதிதாக வந்திருக்கின்றன. மாணவர்கள் கல்விக்கு உதவும் வகையிலும் உலக விஷயங்கள் இலக்கியங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெறும் படியாகவும் வசதிகள் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். வாசகர் கூட்டங்களை நடத்தும் வகையில் வசதியான கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. வாசகர் வட்டத்தினர் இனி கல்வி வாசிப்பு இலக்கியம் என்று பலதரப்பு  நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அதனால் பெண்களும் குழந்தைகளும் பயனடைவதும் எளிதாக இருக்கும்.

கடந்த அக்டோபர் மாதத்தில் அமைச்சர். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.  மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு , எங்கள் ராஜபாளைய சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ஆட்சியர் மேகநாத ரெட்டி , வந்திருந்து அரசுக் கட்டடத்தில் எங்கள் பெண்களுக்கான நூலகத்தைத் திறந்து வைத்தார்கள்.

பெண்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது...

நாங்கள் பள்ளிக்கூடம் செல்லும் பொழுது மூடு ரிக்க்ஷôவில் சென்று வந்தோம். பெண்கள் பொது இடங்களுக்கு வரும் வழக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. நம்மை வளர்த்துக் கொள்வதற்கும் சாதிப்பதற்கும் எல்லாத் துறைகளிலும் நமக்கான களம் இருக்கிறது. மனத்தடைகளை ஒதுக்கி விட்டு ஆரோக்கியமான மனதோடு முன்வரும் பொழுது சாதனைகள் சாத்தியமாகும். அடுத்த தலைமுறை பெண்கள் நம்மிலும் அதிக உயரம் தொடுவதற்கான வாய்ப்புகள் விரிவடையும். முயன்றால் முடியாதது இல்லை. பெண்கள் முயன்றால் எல்லாம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com