ஆறு வயதில் ஸ்கேட்டிங் சாதனை!

தில்லி ரோஹிணி பகுதியில் இருக்கும் ஜி.ஆர் சர்வதேசப் பள்ளி மைதானம். தரமான பள்ளியின் சர்வதேசத் தரமுள்ள ஸ்கேட்டிங் மைதானம். 
ஆறு வயதில் ஸ்கேட்டிங் சாதனை!

தில்லி ரோஹிணி பகுதியில் இருக்கும் ஜி.ஆர் சர்வதேசப் பள்ளி மைதானம். தரமான பள்ளியின் சர்வதேசத் தரமுள்ள ஸ்கேட்டிங் மைதானம்.

மைதானத்தைச் சுற்றிலும் ஸ்கேட்டிங் போட்டியை காண வந்திருக்கும் பெற்றோர், ஸ்கேட்டிங் ஆர்வலர்கள். இங்குதான் தேசிய ஸ்கேட்டிங் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

5 முதல் 7 வயது பெண் சிறார்களுக்கான 600 மீட்டர் தூர ஸ்கேட்டிங் போட்டிக்கான அறிவிப்பு வந்ததைப் தொடர்ந்து பெண் சிறார்கள் டிராக்கில் அணிவகுக்கிறார்கள். கைத்துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதும் சிறார்கள் வழுக்கி ஓட ஆரம்பிக்கிறார்கள். ஒரு தருணத்தில் தமிழகத்திற்குப் பிரதிநிதித்துவம் தந்த சிறுமி பிராவஸ்திஸ்ரீ கீழே சரிந்து விழுகிறார். அடுத்த நொடியில் மீண்டும் எழுந்து ஸ்கேட்டிங்கைத் தொடர.. ஏனைய சிறார்கள் முன்னே போய்விட்டார்கள். திகைத்துப் போன பிராவஸ்திஸ்ரீ, வேகத்தைக் கூட்டிமுன்னேறுகிறார்.

அதற்குள், தெலுங்கானா முன்னேறுகிறது.. பஞ்சாப்.. இதோ ஹரியானா முன்னேறுகிறது.. நான்காவதாக ஆந்திரா.. என்று போட்டி வர்ணணையாளர் உற்சாகத்துடன் அறிவிக்க, கடைசியாக வந்து கொண்டிருந்த பிராவஸ்திஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தார். 500 மீ தூரம் கடந்தாகிவிட்டது. இன்னும் 100 மீ தூரம் பாக்கி... ஒரு திருப்பம். தமிழ்நாட்டின் பிராவஸ்திஸ்ரீ கூடுதல் வேகத்துடன் முன்னேற..

தமிழ்நாடு முதலாவதாக வந்தேவிட்டது' என்று அறிவிப்பு வெளியானது. முதலாவதாக வந்தவருக்கும் இரண்டாவதாக வந்தவருக்கும் நடுவில் நீண்ட இடைவெளிவிட்டு தமிழகம் முதலாவதாக வந்தது. அதற்கு முன் நடந்த 400 மீ ஸ்கேட்டிங் போட்டியிலும் தமிழக சிறுமி பிராவஸ்திஸ்ரீ முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

பிராவஸ்திஸ்ரீயைத் தொடர்பு கொண்டு பேசினோம்:

""எனக்கு ஆறு வயதாகிறது. நான் சென்னை குடோஸ் சர்வதேசப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவி. டிவி சானல்களில் ரோலர் ஸ்கேட்டிங் சாகசங்களை ஆர்வத்துடன் பார்ப்பேன். நாமும் அதுபோல் ஸ்கேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எனது விருப்பத்தை நிறைவேற்ற எஸ்பிஎல் சேலன்ஞ்சர்ஸ்' கிளப்பில் 2020 டிசம்பர் மாதம் சேர்த்துவிட்டனர். படிப்படியாக போட்டிகளில் கலந்து கொண்டு 5 முதல் 7 வயதிற்கான பெண் சிறார்கள் பிரிவில் முதலாவதாக வந்தேன். தமிழகத்தில் இந்தப் பிரிவில் 400 மீ, 600 மீ தூர ஸ்கேட்டிங்கில் முதலாவதாக வந்ததால் தேசிய அளவில் நடந்த போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது.

தேசிய போட்டியிலும் இரண்டு பிரிவுகளில் முதலாவதாக வர முடிந்தது. ஆரம்பத்தில் வழுக்கி கீழே விழுந்தாலும் டிராக் எல்லைக்குள் விழுந்ததால் ஃபவுல் ஆகவில்லை. அப்பா... அம்மா...கோச் பழனிவேல் சார், ரகுபதி சார் எழுந்து ஓடு ஓடு'ன்னு ஒரே குரலில் எனக்கு உற்சாகம் தர... எழுந்து ஓடினேன்.... கடைசியாக இருந்தவள்... முதலாவதாக வந்துவிட்டேன்.

இதர பிரிவுகளில் சென்னையைச் சேர்ந்த அதர்வா, விஹார் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு 7 முதல் 9 வயதுக்கான பிரிவில் ஸ்கேட்டிங் செய்ய வேண்டும். அந்தப் பிரிவிலும் சாதனை செய்யணும். இது தவிர நிறுத்தப்பட்டிருக்கும் காரின் அடிப்பாகத்திற்கும் தரைக்கும் இடையே இருக்கும் சுமார் 2 அடி இடைவெளியில், கை கால்களைக் பரத்திக் கொண்டு ஸ்கேட்டிங் செய்து காரின் அடிப்பகுதிக்குள் சென்று தலை முட்டாமல் வெளியே வருவேன்'' என்கிறார் பிராவஸ்திஸ்ரீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com