கதை சொல்லும் குறள் - 60: ஊக்கத்தின் அளவு!

அரசாங்க கலைக் கல்லூரி. அன்றைய தினம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
கதை சொல்லும் குறள் - 60: ஊக்கத்தின் அளவு!


அரசாங்க கலைக் கல்லூரி. அன்றைய தினம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. மாணவர்கள் அங்கும் இங்குமாகச் சுறுசுறுப்பாக நடந்தார்கள் என்று சொல்ல முடியாது, ஓடிக் கொண்டிருந்தனர். பெண்கள் பாரம்பரியப் பட்டுப்புடவைகளைக் கட்டிக் கொண்டு ஜொலித்தனர் என்றால் ஆண்கள் வேஷ்டி, சட்டைகளை அணிந்திருந்தனர்.

அன்று கல்லூரி ஆண்டுவிழாவின் தொடக்க நாள், பதினொரு மணி அளவில் விழா தொடங்க இருந்தது. தலைமை தாங்கி விழாவைத் தொடங்க இருப்பவர் சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும்  காவல்துறை அதிகாரி. 

""டேய் அன்புச்செல்வன், மலர் மாலை, பூங்கொத்து எல்லாம் தயாராக எடுத்து வெச்சிட்டியா? ஐபிஎஸ் சாரை அறிமுகப்படுத்திய உடனே, பிரின்ஸிபால் கையில் மாலையைக் கொடுத்து போடச் சொல்லு. பூங்கொத்தை நீ கொடுத்துவிடு'' என்றான் முகுந்தன். இவன் கல்லூரியின் மாணவத் தலைவன்.

""முகுந்தா, நீ பூங்கொத்தைக் கொடு. நான் எதுக்கு நடுவே, சம்பந்தம் இல்லாமல்'' என்றான் அன்புச்செல்வன்.

""டேய், நீ என் நண்பன்டா, இந்த விழா நல்லா நடந்தேற என்னோட ஒரு வாரமா எப்படி வேலை பார்க்கிறே. அதான் உனக்கு இந்த மரியாதையைச் செய்யறேன்''.

காவல்துறை அதிகாரியின் கம்பீரத் தோற்றமும், பேச்சும் அவருக்குக் கிடைத்த மரியாதையையும் பார்த்து அன்புச்செல்வன் அசந்துப் போனான். அவருடைய இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்தான். ஆனந்தத்தின் உச்சியைத் தொட்டான்.

அன்புச்செல்வன் பி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவன். மூன்றாம் ஆண்டு படிப்பைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறான். படிப்பை முடித்தவுடன் நல்ல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் கைநிறையச் சம்பளத்துடன் ஒரு வேலை கிடைக்கும் என்று நம்பி இருந்தான். அன்புச்செல்வனின் தாய்மாமனின் மகன் இந்தப் படிப்பைப் படித்து விட்டுத்தான் அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை பார்க்கிறான். அன்புச்செல்வனின் கனவும் அதுவாகத்தான் இருந்தது.

ஆனால், காவல்துறை அதிகாரியைப் பார்த்ததில் இருந்து ஐபிஎஸ் ஆகவேண்டும் என்ற ஆசை அல்ல, வெறியே அன்புச்செல்வனுக்கு வந்துவிட்டது.
தன்னுடைய உள்ளக்கிடக்கையைத் தன் தந்தையிடம் அவன் சொன்னான்.
""அன்புச்செல்வா, அதெல்லாம் மிகவும் கஷ்டமான படிப்புடா. நீ படிப்பில் சுமார் ரகம். ஏன் வீணாக் கோட்டை கட்டறே. பேசாம கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடி, ஒரு வேலையில் சேர். சம்பாதிக்க ஆரம்பிப்பதைப் பாரு. எனக்கும் வயசாகுது, அடுத்த வருஷம் ரிட்டயர்ட் ஆகிறேன். அதுக்குள்ள நீ ஒரு வேலையில் சேர்ந்தா, உனக்கு ஒரு கல்யாணமும் செய்து வைத்து விடுவேன். உன் அம்மாவுக்கும் இதுதான் ஆசை. எங்க கடமையைச் செய்ய வேண்டாமா?''
""அப்பா... வந்து...''
""வந்தும் இல்லை, போயும் இல்லை. 

எங்களுக்கு கல்யாணமாகி பதினைந்து வருஷம் கழிச்சு நீ பொறந்த, நீ ஐ.பி.எஸ் முடிக்கிறவரை உன்னை ஆதரிக்க முடியுமான்னு தெரியலை''.

எந்த ஒரு அறிவுரையும், ஆலோசனையும் அன்புச் செல்வனின் முடிவை மாற்ற முடியவில்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்பை முடித்த கையோடு ஐ.பி.எஸ் ஆவதற்காக விண்ணப்பித்து விட்டான்.

யு.பி.எஸ்.ஸி  தேர்வாணையம் நடத்துகின்ற  சிவில் சர்வீஸ் தேர்வுக்காகத் தன்னைத் தயார் செய்யத் தொடங்கினான்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், எம்.ஐ.எஸ்.ஸி என்று இருக்கிற பல பிரிவுகளில் நடத்தப்படுகின்ற தேர்வைத்தான் சிவில் சர்வீஸ் தேர்வு என்கின்றனர்.
முதலில் சமுதாயத்தில் பெரிய கெளரவமும், அந்தஸ்தும் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் அன்புச்செல்வன் ஐ.பி.எஸ் ஆக ஆசைப்பட்டான். ஆனால் ஐ.பி.எஸ் அதிகாரியின் கடமைகளைப் பற்றியும், அவர்கள் நாட்டுக்காக ஆற்றுகின்ற பணிகளைப் பற்றியும் அந்தப் பிரிவில் சேரும் பொழுதுதான் முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தவுடன் அந்த வேலையின் மீது அவனுக்கு இதயப்பூர்வமான காதலே வந்துவிட்டது.

எல்லையில் தீவிரவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது, பொதுமக்கள் அமைதியாக வாழ வழிவகுப்பது, விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, பொருளாதாரச் சீர்கேடுகளைச் சரிசெய்வது, கடத்தல் மற்றும் போதை மருந்துகளைக் கடத்துவதைத் தடுப்பது, பேரழிவு காலங்களில் பொதுமக்களுக்குத் துணை நின்று அமைதி நிலவ வழி செய்வது, இந்திய ராணுவத்திற்கும் சேவை செய்வது என்று அப்பப்பா எத்தனை விதமான உன்னதப் பணிகள் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வழங்கப்படுகின்றன; இவைகளைச் செம்மையாகச் செய்வதினால்தான் அந்த அதிகாரிகளுக்கு இப்படிப்பட்ட அந்தஸ்து சமுதாயத்தில் கிடைக்கிறது என்பதை உணர்ந்தவுடன் மேலும் தீவிரமாகத் தன்னை ஐ.பி.எஸ் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினான்.

வயதான தன் தந்தைக்குக் குடும்பப்பாரத்தைச் சுமக்கத் தோள் கொடுக்க முடிவு செய்தான். வீட்டில் இருந்தபடியே சில ஆன்லைன் வகுப்புகளை எடுத்துச் சம்பாதித்தான். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனுக்கு அறிமுகமானாள் தேவகி. அவனுடைய மாணவியாகத் தொடங்கி பிறகு காதலி ஆனாள், மனைவியாகத் துடித்தாள்.
""அன்பு'' என்று தேவகியின் தேன்மதுரக் குரல் அலைபேசியில் ஒலித்தது.
""தேவகி, நான் படித்துக் கொண்டு இருக்கிறேன், என்னைத் தொந்தரவு செய்யாதே''.

""அன்பு எனக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி விட்டார்கள். எப்பொழுது நம் கல்யாணம். நாம் காதலிக்கத் தொடங்கி நான்கு வருடங்கள் விளையாட்டாக ஓடி மறைந்துவிட்டதே''.
""தேவகி, நான் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன உடன்தான் நம் திருமணம். நீ அதுவரை காத்திருக்க வேண்டும், இல்லை என்றால் உன் பெற்றோர் பார்க்கின்ற பையனையே மணந்து கொள்''.

""அன்பு, இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை. ஒரு பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ளக் கூட உங்களால் முடிய வில்லையே. ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று கடுகளவும் குறையாத ஊக்கத்தோடு படித்து, பரீட்சைகளை எழுதிக் கொண்டே இருக்கறீங்க, அதேபோல எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்கள் மேல் இருக்கும் காதல் எனக்குக் குறையாது. உங்களுக்காகக் காத்திருப்பேன். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவியாக வலம் வருவேன்''.

தேவகியின் இந்தச் சூளுரை அன்புச்செல்வனுக்கு மேலும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஒருசேர வழங்கியது. நான்குமுறை ஐ.பி.எஸ் தேர்வில் தோல்வியைத் தழுவி இருந்தான். தோல்வி அவனுக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. பூவில் தேன் இருக்கும்வரை அதை உறிஞ்சிக் குடிக்க, சுற்றிச் சுற்றி வரும் வண்டினைப் போலத் தன் மனதினில் ஊக்கம் பெருக்கெடுத்து ஓடும்வரை அன்புச்செல்வன் முயற்சியைக் கைவிடவில்லை.

பூகோளம், சரித்திரம், அரசியல், அறிவியல், பொதுநிர்வாகம் இதைத்தவிர சரியான விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுப்பது என்று செயல்பட்டு நன்றாகப் படித்தான்.

தினசரி செய்தித்தாள்கள், வார, மாத இதழ்களிலிருந்து நாட்டு நடப்பினை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமானது.

இதைத் தவிர தன் திறமைகளை நன்றாக வெளிப்படுத்தவும் அறிந்திருக்க வேண்டியிருந்தது. முந்தைய ஐ.பி.எஸ் வினாத் தாள்களைச் சேகரித்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடைகளைத் தெரிந்து கொண்டான். ஏனெனில் அதே மாதிரியானக் கேள்விகள் பல சமயங்களில் கேட்கப்பட்டிருந்தன.

பசி, உறக்கம், கவனச் சிதறல்களை உதறித் தள்ளி, தன்னுடைய கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்திப் படித்தான், வென்றான். ஐந்தாவது முறையாக ஐ.பி.எஸ் பரீட்சையின் பிரிவுகளை எல்லாம் வெற்றிக்கொண்டான். நேர்முகத் தேர்விலும் வெற்றி வாகையைச் சூடினான். ஹைதராபாத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாதெமியில் பயிற்சியும் பெற்றான். இதோ இன்று தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பதவி ஏற்றுவிட்டான்.

நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே இருப்பதைப்போல, அன்புச்செல்வனின் ஊக்கத்தின் அளவு அவனை ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தலைநிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது, தான் பிறந்த நாட்டிற்கு நற்பணி ஆற்றிட வகை செய்திருக்கிறது.

தேவகி அன்புச்செல்வன் என்று அழைக்கப்பட்டு அன்புக் கணவரையும், சமுதாயத்தின் நன்மதிப்பையும் பெற்று மிளிர்கின்றாள் தேவகி. பெற்றவருக்குப் பெருமை சேர்த்து, அவர்கள் மனம் குளிர உயர்ந்து நிற்கிறான் அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

(குறள் எண்: 595)

பொருள் :

நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com